
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் 2007-ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 2009-ம் ஆண்டு இராஜமௌலி இயக்கித்தில் இவர் நடித்த மாவீரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் வசூலிலும் மிக பெரிய வெற்றி கண்டது.
2003-ம் ஆண்டு கங்கோத்ரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குனர் என பன்முகங்களை கொண்டுள்ளார்.
சிரஞ்சீவின் மனைவி வழி உறவினரான அல்லு அர்ஜூன் நடித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா-2 படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் உலகளவில் ரூ.1,800 கோடி வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
அதே சமயம் சமீபத்தில் வெளியான ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்' படம் பெரிய அளவில் வெற்றியடையும் என்று எதிர்பார்த்த நிலையில் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தின் தோல்வி தயாரிப்பாளர், இயக்குனர் சங்கரை மட்டுமல்ல ராம் சரணையும் சோகத்தில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தெலுங்கு பட உலகில் முன்னணி தயாரிப்பாளரான அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தண்டேல் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அல்லு அரவிந்த் கேம் சேஞ்சர் படம் தோல்வி அடைந்ததை பற்றி மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். இவரின் இந்த விமர்சனம் திரையுலகில் மட்டுமல்ல குடும்ப உறவிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நடிரான சிரஞ்சீவியின் மகனான சரணுக்கு அல்லு அரவிந்த் தாய்மாமன் உறவு முறையில் சொந்தக்காரர்.
ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்' படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ராம் சரண் - அல்லு அர்ஜூன் ரசிகர்களும் கடுமையான வார்த்தை போரிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக ராம் சரண் - அல்லு அர்ஜூன் இடையே மோதல் வெடித்துள்ளதாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜூன் இருவருமே பொது இடங்களில் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராக சந்தித்து கொள்வதையோ, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதையோ தவிர்த்து வருகிறார்கள். இது மேலும் இருவருக்கு இடையே உள்ள மோதலை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கிடையில் அல்லு அர்ஜூனை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ராம் சரண் ‘அன்-பாலோ' (பின்தொடருவதை நிறுத்திவிட்டார்) செய்துள்ளது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மட்டுமில்லாமல் இவருக்கும் இடையே உள்ள மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்விரு குடும்பங்களுக்கும் இடையே உறவு, தொழில்போட்டி காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் அமைதி யுத்தம் தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாகி உள்ளது.