
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று இந்தியாவின் பெரும்பாலான மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் சம்பத் ராஜ். சம்பத் ராஜ் 2003-ம் ஆண்டு ‘ப்ரீத்தி பிரேம பிரணயா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028, சரோஜா மற்றும் கோவா ஆகிய மூன்று படங்கள் மூலம் இவர் பிரபலமானதுடன், இந்த படங்கள் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு சேவல், ஆரோகணம், அறை எண் 305ல் கடவுள், பருத்திவீரன் மற்றும் ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் நல்ல பெயரை பெற்றுத்தந்தன.
கொரட்டலா சிவா இயக்கிய பிரபாஸின் மிர்ச்சி படத்தின் மூலம் தெலுங்கு படஉலகில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் சிறந்த வில்லன் பிரிவில் நந்தி விருதை வென்றார்.
அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த இவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முத்திரை பதித்து வந்தார். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டாப் ஹீரோக்களின் படங்களில் முன்னனி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
கடைசியாக 2015-ல் வெளிவந்த தூங்காவனம் படத்திற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குட் வைஃப்' வெப் தொடர், ஜூலை 4-ம்தேதி ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரேவதி இயக்கியுள்ள இந்த தொடரில் பிரியா மணி, நடிகர் ஆரி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த வெப் தொடர் மூலமாக சம்பத் ராஜ் தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் நீண்ட காலமாக தமிழில் நடிக்கவில்லை. அதனால் நான் தெலுங்கில் பிசியாகி விட்டதாகவும், இனி அவர் தமிழில் நடிக்க மாட்டார் எனவும் முடிவு செய்துவிட்டனர். ஆனால் அது காரணம் அல்ல. உண்மையில் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால் நான் ஒரே கதாபாத்திரத்தில் மீண்டும் மீண்டும் நடிக்க விரும்பவில்லை. ஏனெனில் தமிழில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களே வந்தன. ஆனால் ஏற்கனவே நடித்தது போன்ற வில்லன் கதாபாத்திரம் என்றால் அதை என்னால் ஏற்க முடியாது. அதனால்தான் தமிழில் இந்த இடைவெளி. இனி வரும் ஆண்டுகள் தமிழ் சினிமாவில் எனக்கு நன்றாக அமையும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் "பெரும்பாலான நடிகர்கள் தங்கள் வயதை விட மிகவும் இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புவார்கள். ஆனால் எனக்கு என் வயதை ஒத்த கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புகிறேன்; ஏனெனில் அதுதான் எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மரங்களைச் சுற்றி ஓடுவது, பாடுவது, நடனமாடுவது மற்றும் கதாநாயகிகளுடன் காதல் செய்வது போன்றவை எனக்கு ஒத்துவராது" என்றும் அவர் கூறினார்.
பருத்திவீரன், ஆரண்ய காண்டம் போன்ற படங்களை போன்று தனது படங்களும் கதாபாத்திரங்களும் முடிந்தவரை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தொடர்ந்து வில்லனாக நடிப்பது சலிப்பு ஏற்படவில்லை எனவும் வில்லன் கதாபாத்திரத்தை ரசிப்பதாகவும், தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசத்தை கொண்டுவர முயற்சிப்பதாகவும் கூறினார்.