
பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘வார்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றதோடு, ரசிகர்களிடம் சிறப்பான Action Franchise-ஆகவும் உருவாகியது. ராணுவ வீரர்களின் போராட்டம், இரு நாட்டு பகை, அதில் செயல்படுத்தப்படும் சதித்திட்டங்கள் பற்றி சுவாரசியமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘வார் 2’ திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) திரைக்கு வரும் இந்த படம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த ஹிருத்திக் ரோஷன் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். அவருடன் ‘ஆர்.ஆர்.ஆர்.’ மூலம் பாலிவுட் வரை பிரபலமான தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். பாலிவுட் பட உலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் அசுதோஷ் ராணா, அனில் கபூர், டைகர் ஷெராஃப் மற்றும் ஷபீர் அலுவாலியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான கதையை வழக்கம் போல படத்தின் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா எழுதியிருக்கிறார். பிரிதம், சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவை பெஞ்சமின் ஜாஸ்பர் ஏசிஎஸ் மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 25-ந் தேதி வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ராணுவத்தில் ரகசிய உளவாளியாக இருக்கும் ஹிருத்திக் ரோஷன் ஒரு கட்டத்தில் நாட்டிற்கு எதிராகவே திரும்புவதாகவும், அவரை எதிர்கொள்வதற்காக ராணுவத்தால் அமர்த்தப்படும் நபராக ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் உண்மையிலேயே நாட்டிற்கு எதிராக திரும்பினாரா? அல்லது நாட்டிற்கு துரோகம் செய்பவர்களுக்கு எதிராக திரும்பினாரா? என்பதையும், ஜூனியர் என்.டி.ஆர். உண்மையிலேயே நாட்டிற்கு விசுவாசமாக இருப்பவரா அல்லது துரோகம் செய்பவரா என்பதையும் அதிரடி சண்டை காட்சிகளுடன் சுவாரசிய முடிச்சுகளைப் போட்டு ‘வார் 2’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘வார்-2’, பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றும் குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாயையும், அதிகபட்சமாக ரூ.1,500 கோடியையும் வசூல் செய்யும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சினிமா வர்த்தக மாநிலங்களாக கருதப்படுவது பாலிவுட்டும், டோலிவுட்டும் தான். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால், அந்த இரண்டு மாநிலங்களிலும் பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாஷ் ராஜ் நிறுவனம் பல்வேறு ஸ்பைவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. ‘ஏக் தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹாய்’, ‘வார்’, ‘டைகர் 3’ மற்றும் ‘பதான்’ ஆகிய படங்களை இதுவரை தயாரித்திருக்கிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘வார் 2’ படத்தினை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை தமிழ் , தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் 7500 தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் இதுவேயாகும்.
அதேபோல் ‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை ஜூனியர் என்.டி.ஆரின் நெருங்கிய நண்பர் நாக வம்சி சுமார் 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நாக வம்சி தெலுங்கில் இந்த படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிட உள்ளதால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே மிரள வைக்கும் வகையில் 2 பெரிய படங்களான ரஜினிகாந்தின் ‘கூலி’, ‘வார் 2’ நாளை ரிலீஸாக உள்ளதால் ரசிகர்களுக்கு டபுள் தமாக்காவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் சுதந்திர தினத்தை குறிவைத்து பாலிவுட்டில் வெளியாகும் இந்தி படங்கள் எல்லாம் இதுவரை மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்துள்ளது என்பதால் ‘வார் 2’ படமும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இந்த இரு படங்களும் சுதந்திர தின வார இறுதியில் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைக்கும் என்றாலும் எந்த படம் ரோசில் முந்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.