
தொட்டது துலங்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் இணைகிறார்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் என்ற செய்தி வந்தவுடன் திரையுலகம் விழித்துக் கொண்டது. 'கமல்ஹாசனின் ரசிகர் என்று சட்டையைக் கிழித்துக் கொண்டு சண்டைக்குப் போவேன்' என்று சொன்ன லோகேஷ் கனகராஜ் என்ற அக்மார்க் கமல் ரசிகர் இயக்குனர் ரஜினியுடன் இணையும்போது என்ன விதமான படத்தை எதிர்பார்க்கலாம். அதுவும் விக்ரம், லியோ என்ற வசூலை அள்ளிக்குவித்த படங்களுக்குப் பிறகு இணைகிறார். இது ஒன்றே போதும் இந்தப் படத்தின் மீது கவனம் குவிய.
ஆனால் அடுத்தடுத்து நடந்தது எல்லாம் ஒரு கனவுபோல் எனக் கொள்ளலாம். முப்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சத்யராஜ் ரஜினியுடன் இணையும் படம்; ஸ்ருதி ஹாசன் ரஜினியுடன் இணையும் முதல் படம்; நாகார்ஜுன் முதன் முதலாக முழு வில்லனாக அறிமுகமாகும் படம்; அமீர் கான் கௌரவ வேடத்தில் நடிக்கும் படம்... மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிரும், கன்னடத்திலிருந்து உபேந்திராவும் இணைந்த பின் தமிழ்ப் படம் என்ற நிலையிலிருந்து பான் இந்தியா என்ற லேபிள் ஒட்டிக் கொண்டது இந்தப் படத்தின் மீது.
அருகாமையில் உள்ள கன்னடம், தெலுங்கு, இந்தியென அனைத்துப் படவுலகில் இருந்தும் ஆயிரம் கோடி வசூல் சாதனை என்ற இலக்கை எட்டி விட எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்கும் தமிழ்ப்படவுலகிலிருந்து அப்படியொரு படம் வர வேண்டும் என்ற ஏக்கம் கோலிவுட்டில் எழுந்து விட்டது. ஆனால் அப்படியொரு இமாலய இலக்கைத் தொட வேண்டும் என்றால் அதற்குச் சாத்தியமுள்ள நாயகர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் ரஜினி, மற்றவர் விஜய்.
அரசியல் காரணமாக இனிமேல் நடிக்கமாட்டேன் என்று அறிவித்து விட்டு விஜய் ஒதுங்கி விட மீண்டும் அந்த அழுத்தம் ரஜினி மேல் விழுந்தது. ஏற்கனவே தனது படங்களை மீறி வசூல் செய்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காகவே விக்ரம், பொன்னியின் செல்வன் என்ற இரண்டு படங்களையும் ஓரங்கட்டி ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இண்டஸ்ட்ரி ஹிட் என்ற பட்டத்தைத் தானே மீண்டும் தக்க வைத்துக் கொண்டு விட்டார் ரஜினி. தமிழிலிருந்து அதிக வசூல் படம் என்றால் அது 2.0. அதுவும் இவர் நடித்தது தான். இப்பொழுது அவர் வெல்ல வேண்டும் என்றால் முதலில் ஜெயிலரையும், இரண்டாவது 2.0 வையும் மிஞ்ச வேண்டும். அது நடக்குமா? பார்க்கலாம்.
வெளிநாடுகள், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, என அனைத்து மாநிலங்களிலும் மிகப் பெரிய விலைக்கு விற்பனையாகியுள்ளது கூலி. வெளிநாடுகளில் அதன் முன் பதிவு மூலமே ஒரு மிகப்பெரிய சாதனையை அதற்குள் அது செய்து விட்டது. ரசிகர்கள் முதல் நாள் காட்சிகளுக்கு டிக்கெட்களை வாங்கி குவித்து வருகிறார்கள். 8/8/2025 வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு, வட இந்தியா தவிர மற்ற மாநிலங்களிலும், முன்பதிவு ஆரம்பித்துப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காட்சிகள் மற்ற மாநிலங்களில் காலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் காட்சி ஒன்பது மணிக்குத் தொடங்க இருக்கிறது. இன்று இரவு எட்டு மணிக்கு முன்பதிவு துவங்கலாம் என்று உத்தேசித்து மக்கள் முன் பதிவுத் தளங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் எங்கும் இது தொடர்பான விவாதங்களும் பேட்டிகளும் தான் நிறைந்திருக்கின்றன. இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்சின்போது நடந்தது என்ன, ரஜினி என்ன பேசினார் என்பதைக் காணவும் மக்கள் ஆரவமாக உள்ளனர். எதிர்வரும் ஞாயிறு மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு சன் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியான ஒரே நாளில் ஒரு கோடி பேர்களுக்கு மேல் அதைப் பார்த்திருக்கின்றனர். இவ்வளவிற்கும் முதலில் பார்த்தவர்கள் பெரிதாக இல்லையே என்று சொல்ல, விஷயம் திரும்பத் திரும்பப் பார்ப்பத்தில் இருக்கிறது என்பது தெளிவானது. ரசிகர்களின் அன்றாடக் கடமைகளில் இந்த ட்ரைலர் பார்ப்பதும் ஒன்று என்றாகிப் போனது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது.
இதெல்லாம் இப்படியிருக்க ஆயிரம் கோடி வசூல் என்று பரபரத்த வணிக வட்டாரங்கள் சற்றே சுணங்கிப் போகும் விஷயம் ஒன்று நடந்தது. வயது வந்தோருக்கான படம் என்று ஏ சான்றிதழ் இந்தப்படத்திற்கு வழங்கப்பட்டது தான் அது. முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, குடும்ப நாயகனாகப் பார்க்கப்படும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவு. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்பது இதில் நடக்காது. ஊர் பக்கம் பரவாயில்லை. நகரங்களில் குறிப்பாக மல்டிப்ளக்ஸ்களில் அனுமதி மறுக்கப்படும் என்று பல முணுமுணுப்புகள் எழத்தொடங்கின.
குடும்பங்களாகக் கொண்டாடிப் பார்க்கும் ரஜினி படங்களில் எதற்கு அதீத வன்முறைக் காட்சிகள். இந்தப் படத்தில் நாங்கள் அதற்காக எந்தச் சமரசமும் செய்து கொள்ளவில்லை என்று லோகேஷ் கூறியது இன்னும் விசிறி வீசி விட்டது. ஊடகங்கள் இந்தப்படம் குறித்து வேறு எதுவும் தெரியாத நிலையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் ரேட்டிங்கை ஏற்றுக்கொள்ள முயல்கின்றன. இதுகுறித்துக் கவலைப்பட வேண்டிய லோகேஷ் கனகராஜோ. ரஜினிகாந்தோ, சன் பிக்ஸர்ஸோ அமைதியாக இருக்க திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். வசூலையும், முன் பதிவையும் மிகவும் பாதிக்கும் என்று கருதப்பட்டது இந்த விஷயம். அதற்கு முற்றிலும் மாறாக நடந்த விஷயங்கள் தான் இந்த முன் பதிவுச் சாதனை.
வெளிநாடுகளில் மட்டும் முப்பது கோடி.
கேரளாவில் ஒரே நாளில் ஒரு கோடி.
மணிக்கு ஐம்பதாயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதும் இது ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை சுலமாகத் தொடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதில் இருந்து என்ன தெரிகிறது. எது எப்படி வேண்டுமெனில் இருக்கட்டும். இந்தப் படத்திற்கு தங்கள் ஆதரவு எப்படியும் உண்டு என்று ரசிகர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றனர். ரஜினி என்ற அந்த ஆகர்ஷணம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.
இவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் இதற்குச் சரியான போட்டி என்று கருதப்பட்டது இன்னொரு விஷயம். யாஷ் ராஜ் தயாரிப்பில், ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் நடித்து அதே நாள் வெளியாக இருக்கும் வார் 2 என்றாகி இன்னோரு பான் இந்தியத் திரைப்படம். இந்தியாவில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளைத் தங்கள் படத்துக்காகக் கைப்பற்றிக் கூலிக்கு ஒரு ஐமேக்ஸ் கூடாகக் கிடைக்கக் கூடாது என்று சமயோசிதமாக அனைத்தையும் முடக்கியது யாஷ் ராஜ். இந்தப்படத்திற்கு முன் கூலி ஈடுபடவே படாது. உலகத்தரமுள்ள படம். அனைவரையும் கவர்ந்த ட்ரைலர். வெளிநாடுகளில் முதலிடம் இந்தப்படத்திற்குத் தான் இருக்கும் எனத் திரையுலக நிபுணர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
திரையுலகம் காண இருக்கும் மிகப்பெரிய போட்டி என்று கூலி மற்றும் வார் 2 திரைப்படங்களைப் பற்றி விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏன் இந்தப் போட்டி அவ்வளவு பெரியது. நடிகர்களை விடுங்கள் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள். சன் பிக்சர்ஸ் & யாஷ் ராஜ் பிலிம்ஸ். இவர்களும் போட்டிகளுக்குச் சளைத்தவர்கள் அல்ல.
இந்தப் போட்டி நல்லதா கெட்டதா. அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்....