1) 2K லவ் ஸ்டோரி :
ஒரு ஆணும், பெண்ணும் காதல் இல்லாமல் நட்பாக பழக முடியும் என்ற ஒன்லைன் படங்கள் பல தமிழில் வந்து விட்டன. விக்ரமன் இயக்கத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புது வசந்தம், சில ஆண்டுகளுக்கு முன் மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான பிரியமான தோழி போன்ற படங்கள் ஆரோக்கியமான ஆண் பெண் நட்பை பேசி வெற்றி பெற்ற படங்கள். இதே ஒன் லைனில் '2K லவ் ஸ்டோரி' படத்தை இந்த காதலர் தினத்தில் தந்துள்ளார் சுசீந்தரன்.
கார்த்தியும், மோனிகாவும் சிறு வயது முதல் நண்பர்களாக பழகி வருகிறார்கள். கல்லூரியில் விஸ்காம் படித்து விட்டு சேர்ந்து விளம்பர படங்கள் தயாரிக்கின்றனர். பவித்ரா என்ற பெண் கார்த்தியை காதலிப்பதாக சொல்கிறார். தனது தோழி மோனிகாவிடம் கலந்து பேசி விட்டு பவித்ராவுக்கு ஒகே சொல்கிறார் கார்த்தி. எதிர்பாராத விதமாக பவித்ரா ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். நட்பும் உறவுகளும் மோனிகாவும், கார்த்தியும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசுகிறது. இந்த 2K கிட்ஸ் என்ன முடிவு செய்தார்கள் என்பதுதான் கதை.
ஒரு கவிதை போல் படம் தொடங்குகிறது. ஆனால் அடுத்து வரும் காட்சிகள் இந்த கவித்துவத்தை தக்க வைக்க தவறி விடுகின்றன. இதற்கு முன் வந்த படங்களை போல் காட்சிகள் ரிபீட்டானால் கூட ரசித்திருக்கலாம். ஆனால் மிக சாதாரணமாக உயிரோட்டமே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. ஒரு கதாபாத்திரம் அறிமுகம் ஆகும் போதே இந்த கதாபாத்திரம் இப்படித்தான் இருக்க போகிறது என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. படத்தின் இரண்டாம் பாதி கல்யாண வீட்டில் கலாட்டா, யாரை திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பம் என சுவாரசியம் இல்லாமல் செல்கிறது.
படத்தில் பாசிட்டிவான சில விஷயங்களும் இருக்கின்றன. மோனிகாவாக நடிக்கும் மீனாக்ஷி கோவிந்தராஜன் மிக நன்றாக நடித்திருக்கிறார். துள்ளல், காதல், நட்பு என உணர்ச்சிகளை சரியாக கடத்துகிறார். சரியான வாய்ப்பு கிடைத்தால் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் போல வலம் வரலாம். ஹீரோ ஜெகவீராவுக்கு நடிப்பு பயிற்சி தேவை. இமானின் இசையில், ஷோபி பால்ராஜ் மாஸ்டரின் நடன வடிவமைப்பு கண்களுக்கு கலர்ஃபுல்லாக உள்ளது.
இன்றைய 2k இளைஞர்களின் காதலையும், நட்பையும் சரியாக புரிந்து கொண்டு வலுவான திரைக்கதை அமைத்திருந்தால் இந்த 2K லவ் ஸ்டோரி ஜெயித்திருக்கும்.
2) ஒத்த ஓட்டு முத்தையா:
கடந்த ஆண்டு ராமராஜன், மோகன் போன்ற நடிகர்கள் கம் பேக் தந்தார்கள். ஆனால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பில்லை. இந்த ஆண்டு கவுண்டமணி இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். எப்படி இருக்கிறது இவரின் கம் பேக்?
தேர்தலில் நின்று ஒரே ஒரு ஒட்டு வாங்கியதால் ஒத்த ஒட்டு முத்தையா என அழைக்கப்படுகிறார் கவுண்டமணி. மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். தனது அரசியல் எதிரிகளுக்கு பாடம் புகட்ட மீண்டும் இடை தேர்தலில் சுயேச்சையாக நிற்கிறார். குடும்பத்தையும், அரசியலலையும் முத்தையா எப்படி எதிர் கொண்டார் என்பது தான் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதை.
பத்தாண்டுகளுக்குப் பின் நடிக்க வரும் கவுண்டமணியிடம் நிறைய எதிர் பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காமெடி என்ற பெயரில் கவுண்டமணி பேசுவதெல்லாம் போனில் ரீல்ஸ் பார்த்த உணர்வைதான் தருகின்றன. 80 வயதை கடந்த கவுண்டமணி நடிக்க முயற்சி செய்ததற்கு வேண்டுமானால் பாராட்டலாம். சமாதி முன் தியானம் செய்வது, இது வாய்ப்பில்லை ராஜா என சொல்வது போன்ற பல காட்சிகள் அரசியலை நினைவு படுத்துகின்றன. இதை வைத்து ஒரு political sattire படத்தை தந்திருக்கலாம். ஆனால் டைரக்டர் சாய் ராஜகோபால் மிஸ் செய்து விட்டார் என்று சொல்ல வேண்டும்.
கவுண்டமணிக்கு தங்கைகளாக நடிக்கும் மூவரும் 'கவுண்டமணிக்கு பேத்தி மாதிரி இருக்காங்க' என்று ரசிகர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்க முடிகிறது. யோகிபாபு உட்பட பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், சிறிது கூட நகைச்சுவைக்கு முயற்சி செய்யவில்லை. ஆள் மாறாட்டம், காதல் காட்சிகள், கவுண்டமணி போடும் ஒரே ஒரு 'சண்டை காட்சி' என பல காட்சிகள் முடியலடா சாமி என கவுண்டமணி பழைய படம் ஒன்றில் சொல்லிய வசனத்தை சொல்ல வைக்கிறது. 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' போன்ற கவுண்டமணியின் சில வசனங்கள் படத்தில் வருகின்றன. இந்த வசனங்கள் வரும் போது மட்டும் லேசாக சிரிப்பு வருகிறது. அதுவும்கூட அவரது 'அந்தப் படத்தை' நினைத்துதான்.
ஒத்த ஓட்டு முத்தையா கவுண்டமணியின் சினிமா எண்ணிக்கையில் மற்றொரு படம் மட்டுமே.