

டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர்ன்னு பன்முகத் திறமைசாலியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் காந்தாரா. 2022ல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து, மாபெரும் வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் ப்ரீகுவல் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் கடந்த 2-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. எதிர்பார்த்ததைப் போலவே படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகளவில் ரூ.818 கோடி வசூல் செய்து, 2025ம் ஆண்டில் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு வெளிவந்து அதிக வசூல் செய்த இந்திய படமாக விக்கி கெளஷல், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ திரைப்படம் முதலிடத்தில் இருந்த நிலையில், ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
‘சாவா’ திரைப்படம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இது, ‘பாகுபலி 2’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ ஆகியவற்றுக்கு பிறகு தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்துள்ளது.
இப்படம் கர்நாடகாவில் 200 கோடிக்கு மேல், வட மாநிலங்களில் 200 கோடிக்கு மேல், தெலுங்கில் 100 கோடிக்கு மேல், தமிழகம் மற்றும் கேரளாவில் தலா 50 கோடிக்கு மேல் என ஒவ்வொரு மாநிலத்திலும் வசூலை குவித்து வருகிறது.
125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் இதுவரை ரூ.818 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதி ஆங்கிலத்திலும் படம் வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' பெற்றுள்ளது. ஆங்கில வெர்ஷனில் வெளியானால், படத்தின் வசூல் ரூ.1000 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் இணைந்து ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
இயக்குநராகவும், நடிகராகவும் ரிஷப் ஷெட்டி தனது 100 சதவீத உழைப்பை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து உழைச்ச ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரும் கொடுத்த பங்களிப்பு தான் இந்தப் படத்தைப் பெரிய லெவலுக்குக் கொண்டுபோக உதவி இருக்குனு சொல்லலாம்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.