பாலிவுட்டை பொறுத்த வரையில் 35 வருடங்களாக ஆமீர்கான் , சல்மான்கான் , ஷாரூக்கான் ஆகியோரின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கிறது . 90களில் உச்சத்தில் இருந்த சல்மான் கான், சில குற்ற வழக்குகளில் சிக்கி சிறை சென்ற பின் தனது இமேஜ் சரிய, ஆமிர் கான் நீண்ட காலம் முதலிடத்தை பிடித்துக் கொண்டார். சிறையிலிருந்து மீண்ட சல்மான் சிறிது சிறிதாக முன்னேறி தபாங் திரைப்படம் மூலம் மீண்டும் தனது பழைய இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு சல்மான்கான் தொட்டதெல்லாம் தங்கமாக மாற தொடர்ச்சியாக அவரது படங்கள் ₹200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
சல்மான் கானின் 14 திரைப்படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தவை. அதில் 6 திரைப்படங்கள் 400 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தவை. 2015 ஆம் ஆண்டு வெளியான பஜ்ரங்கி பைஜான் ₹916 கோடி வசூல் செய்து இன்று வரை சல்மான்கான் படங்களில் உச்சத்தில் உள்ளது. சல்மானை பொறுத்த வரையில் ஹிந்தியில் மட்டும் தான் அவர் படம் வெளியிடப்படுகிறது. மற்ற மாநிலங்களில் அவருக்கு மார்க்கெட் இல்லா விட்டாலும் கூட, பான் இந்தியா வசூலை ஹிந்தியில் மட்டுமே எடுத்து விடுகிறார் என்ற பெருமை உண்டு.
இப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர், 100 கோடி வசூலை தொட திணறிக் கொண்டுள்ளார். சல்மானின் 'சிக்கந்தர்' திரைப்படம் மார்ச் 30, 2025 அன்று வெளியானது. சல்மான் மற்றும் ராஷ்மிகா, சத்தியராஜ் ஆகியோர் நடித்த இந்தப் படம் முதல் நாளே சாதாரண வசூலை குவித்தது. 6 வது நாள் முடிவில் சிக்கந்தர் இந்தியாவில் ₹94 கோடி வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் ₹100 கோடியை தொடும் வாய்ப்பு இருந்தாலும் ₹1000 கோடி வசூல் தான், வெற்றி என்று கருதப்படும் காலத்தில் இது பெரிய பின்னடைவுதான்.
சமீப கால தெலுங்கு நடிகர்களின் பெரிய வெற்றியை பார்த்து சல்மான் தானும் தெலுங்கு மார்க்கெட்டில் இடம் பிடித்தால் அதிக வசூலை குவிக்க முடியும் என்று நம்புகிறார். அவர் தென்னிந்தியாவில் மார்க்கெட்டை பிடிக்க முயற்சி செய்யும் கதைகளில் நடித்து வருகிறார். சல்மான் சிறப்பு தோற்றத்தில் சீரஞ்சிவியின் காட்பாதர் திரைப்படத்தில் தோன்றினார். ஆனால், அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
அடுத்ததாக சல்மான் தமிழ் திரைப்படமான வீரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார். 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் முழுக்க நிறைய தெலுங்கு நட்சத்திரங்கள் நடித்தனர். கூடுதலாக ராம்சரண் கூட சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆனால் , இவ்வளவு இருந்தும் அந்த படம் வெற்றியடையவில்லை .
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படமும் சல்மானுக்கு கை கொடுக்க வில்லை. சீமராஜா மற்றும் சர்வம் ஆகிய படங்களின் கலவை போன்று இருந்த சிக்கந்தர் திரைப்படத்தின் காட்சிகள் ஏற்கனவே படம் பார்த்த உணர்வை தந்ததால் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது. தென்னிந்திய மாநிலங்கள் மீதான சல்மானின் கவனம் அவரது ஆதாரமான ஹிந்தி மார்க்கெட்டை இழக்க வைக்கிறது. அவர் தனது சோதனை முயற்சிகளை தவிர்த்து விட்டு ஹிந்தி ரசிகர்களை திருப்தி படுத்தும் படங்களில் நடித்தாலே போதுமானது என்றே தோன்றுகிறது.