வெயில் சுட்டெரிக்கும் கடுமையான கோடை காலம் வந்துவிட்டது. நாடு முழுக்க பல பகுதிகள் வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்து விட்டன. வெயில் காலத்தில் வறட்சியினால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
சில நேரங்களில் சிலருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளும் , உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் , இதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். வெயில் காலம் என்ன தான் உக்கிரமாக இருந்தாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
நாம் உயிர் வாழ தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் சிறுநீரக செயல்பாட்டிற்கும் அத்தியாவசியமானது. உடலின் செரிமான அமைப்புக்கு தண்ணீர் உதவுகிறது. தண்ணீர் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது மற்றும் குடல் இயக்கங்களை இயல்பாக வைத்திருக்க உதவுகிறது. வெயில் காலங்களில் நிறைய தண்ணீர் குடிப்பதும் நீரேற்றம் நிறைந்த பழங்கள் , காய்கறிகளை சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை தரும்.
கோடையில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்தாலே பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். இந்த காலநிலையில் உடலில் எப்போதும் தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொண்டை முழுமையாக வறண்டுப் போகும் முன்னரே தண்ணீர் குடிக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிதளவாவது எடுத்துக் கொள்வது நல்லது. கோடை காலத்தில் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? குறைவாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்பதையும் அறிவது அவசியம்.
கோடை காலத்தில் ஒருவர் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வெயிலில் அலையாமல் வீட்டிலோ, அலுவலகத்திலோ வேலை செய்தாலும் கூட தினசரி 2 லி தண்ணீர் குடிப்பது அவசியம். அதேநேரம் வெயிலில் அலைந்து வேலை செய்யும் நபர் , கட்டாயம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்தது 100 மிலி தண்ணீர் குடிப்பது அவசியம். நீங்கள் விளையாட்டு வீரர் அல்லது தினமும் உடற்பயிற்சி செய்யும் நபராக இருந்தால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு சாதாரண மனிதர் கோடையில் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் குறைந்தது 10-12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியம். கர்ப்பிணி பெண்கள் குறைவாக தண்ணீர் குடிப்பது கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும். அதேபோல், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிப்பது முக்கியம்.கோடைகாலத்தில் குறைவான அளவில் தண்ணீர் குடித்தால் அது விரைவில் நீரிழிப்பிற்கு வழி செய்யும். சிறுநீரகத்தில் நீரின் அளவு குறைவாக இருந்தால் விரைவில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறைவாக தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் அல்லது வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடையில் நீர் பற்றாக்குறையால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். நீரிழப்பு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது, இது மிகவும் ஆபத்தானது. கடுமையான நீர் இழப்பு ஒருவரின் உயிரையும் பறித்துவிடும். கோடையில் வெளியில் செல்லும் போது அவசியம் தண்ணீரை கூடவே எடுத்துச் செல்லுங்கள். நீர் பழங்களான வெள்ளரிக்காய் , தர்பூசணி , மூலாம் பழங்களையும் சாப்பிட்டு உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்.