
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய ஏ.ஆர். முருகதாஸ், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இவர் முதல் முறையாக பாலிவுட் படவுலகில் முன்னணி நடிகரான சல்மான் கானுடன் கைகோர்த்து இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்கந்தர்’. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக 'நேஷ்னல் க்ரஷ்' நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகாவிற்கு அனிமல், சாவா படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் சிக்கந்தர் 3-வது திரைப்படமாகும்.
ராஷ்மிகாவின் அனிமல் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. கடைசியாக இவர் விக்கி கௌஷலுடன் யேசுபாய் போன்சலேவாக நடித்த பிளாக்பஸ்டர் சாவா படம் தற்போது வரை உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் என்பதால் இப்போதே சிக்கந்தர் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப்படத்தின் கதைக்களம் குறித்து அதிகம் வெளியாகவில்லை என்றாலும் இந்தப்படம் ‘புராணக் கதை’ யுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் மூலம் பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சல்மான்கான் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் கைகோர்த்துள்ளார்.
மேலும் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'பின்னி அண்ட் பேமிலி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சினி இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'சிக்கந்தர்' படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் சல்மான் கான் பட்டைய கிளப்பும் மாஸ் ஆக்ஷன் காட்சிகளும், பாடல் மற்றும் நடனம் போன்ற சில காட்சிகளும் வருகிறது. ஒரு நிமிடம் 21 வினாடிகள் நீடிக்கும் இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி இந்த படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
நடிகர் சல்மான் கான் கடைசியாக இயக்குநர் அல்லி இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ‘பேபி ஜான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.