
பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இந்தியில் இயக்கியுள்ள திரைப்படம் சிக்கந்தர். இந்த படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். ராஷ்மிகாவிற்கு இந்தியில் இது 3-வது படமாகும். ராஷ்மிகா நடித்த அனிமல் மற்றும் சாவா படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதால் பாலிவுட்டில் ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்துவிட்டார். இதனால் சிக்கந்தர் படமும் அதிக வசூலை குவிக்கும் என்று சல்மான் கான் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் நம்புவதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிக்கந்தர் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக இன்று (மார்ச் 30ம் தேதி) உலகளவில் உள்ள தியேட்டர்களில் 2D IMAX மற்றும் 2D வடிவங்களில் வெளியிடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை திங்கட்கிழமை என 2 நாட்களை மட்டுமே டார்கெட் செய்து வெள்ளிக்கிழமை கூட படத்தை வெளியிடாமல் சல்மான் கான் இன்று சிக்கந்தர் படத்தை வெளியிட உள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியதுடன் யூடியூபில் வெளியான 17 மணி நேரத்தில் 3.8 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தின் முன்பதிவு முதல் நாளிலேயே ரூ.1.91 கோடியும், இதுவரை ரூ.5 கோடியும் வசூலித்துள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சல்மான் கானுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் சிக்கந்தர் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று சல்மான் கான் நம்பியுள்ளார். அதற்கு ஒரு காரணம் உள்ளது. அதாவது சல்மான் கானுக்கும், ரம்ஜான் பண்டிகை ரிலீஸுக்கும் ஒரு ராசி இருக்கிறது. ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸான சல்மான் கானின் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் ரம்ஜானுக்கு வரும் சிக்கந்தர் படமும் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக நடிகர் சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் இணைந்துள்ளார். முருகதாஸ் சல்மானைத் தவிர, அமீர் கான் (கஜினி), ரஜினிகாந்த் (தர்பார்), விஜய் (கத்தி), மகேஷ் பாபு (ஸ்பைடர்), சிரஞ்சீவி (ஸ்டாலின்), சூர்யா (கஜினி) மற்றும் அஜித் (தீனா) போன்ற பெரிய நட்சத்திரங்களுடனும் பணியாற்றியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் சுமார் 17 வருடங்களுக்கு முன் கஜினி படத்தை இந்தியில் அமீர்கான், அசினை வைத்து இயக்கி இருந்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தி பட உலகில் மறுபிரவேசம் செய்கிறார். முருகதாஸ் நீண்ட நாட்கள் கழித்து இந்தியில் சிக்கந்தர் படத்தை இயக்குவதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 2020-ல் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ படத்துக்குப் பிறகு 5 வருட இடைவெளியில் மீண்டும் இயக்குநர் களத்துக்குத் திரும்பியிருக்கிறார் முருகதாஸ்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகாவைத் தவிர, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வலுவான குடும்ப உணர்ச்சிகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கஜினி ஒரு காதலன்-காதலி காதல் கதையைப் பற்றியது, ஆனால் இது கணவன்-மனைவி உறவைப் பற்றியது. மேலும், ‘கஜினி பார்வையாளர்களுக்கு ஒரு சைக்கோ த்ரில்லர் போலத் தோன்றினாலும், அமீர் மற்றும் அசினின் காதல் கதை ஆச்சரியமான அம்சமாக இருந்தது. அதேபோல், சிக்கந்தரிலும் ரசிகர்களை நெகிழ வைக்கும் ஒரு காதல் அம்சம் உள்ளது ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.
'சல்மான் சாரின் கேரியரில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக இருக்கும். இது ஈத் என்டர்டெய்னர் மட்டுமல்ல - ஆக்ஷன், எமோஷன்ஸ், மாஸ் மட்டுமின்றி இது பிரமாண்டமான வணிக சினிமாவுக்கே உரித்தான அனைத்து கூறுகளையும் கொண்ட ஒரு பெரிய குடும்ப பொழுதுபோக்கு படமாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலும் இருக்கும்' என்று ஏ.ஆர். முருகதாஸ் உறுதியளித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் என தென்னிந்திய பிரபலமானவர்களை வைத்து உருவாகியிருக்கும் சிக்கந்தர் திரைப்படத்தை பான் இந்தியா படமாக பல மொழிகளில் ரிலீஸ் செய்யாமல், வெறும் இந்தியில் மட்டுமே எடுத்து சல்மான் கான் வெளியிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அமீர்கான், ஷாருக்கான் எல்லாம் ரூ.1000 கோடி வசூல் படங்களை அசால்ட்டாக கொடுத்துள்ள நிலையில், இதுவரை சல்மான் கான் ரூ.500 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தைக் கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வெளியாகும் சிக்கந்தர் திரைப்படம் சல்மான் கானுக்கு வெற்றிப்படமாக அமையுமா? ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் கம்பேக் கொடுப்பாரா?, ராஷ்மிகாவின் அனிமல், சாவா படங்களை போல் சிக்கந்தர் வசூலில் சாதனை செய்யுமா? மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்-சல்மான் கான் கூட்டணி சாதிக்குமா?... என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.