சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படம் சமூகத்துக்கு தேவையான ஒரு சிறந்த படமாகும். ஆனால், இப்படத்தை 40 லட்சத்திற்கு குறைவாகவே விற்றிருக்கிறார் சமுத்திரக்கனி.
2016ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அப்பா படம் வெளியானது. இந்தப் படத்தில் கடுமையான தந்தையின் வளர்ப்பு குறித்தும், மகனிடம் நண்பனாக நடந்துக்கொள்ளும் தந்தையின் வளர்ப்பு குறித்தும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படம் தமிழகத்தில் ஒவ்வொரு தந்தைக்கும் ஒரு பாடமாக அமைந்தது. அதேபோல் குழந்தைக்கு எது தேவை? எது பிடிக்கும்? என்ற இரண்டையும் பார்த்து ஒரு குழந்தைக்கு அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதுபோன்ற பல கருத்துக்களை உள்ளடிக்கி இருக்கும் இந்தப் படம்.
இப்படத்தை சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்துத் தயாரித்தனர். சசிக்குமார் ஒரு கேமியோ ரோல் செய்திருப்பார்.
அந்தவகையில் இப்படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி இப்படம் குறித்து பேசியதைப் பார்ப்போம்.
“அப்பான்ற ஒரு படம் ரிலீஸ் ஆகிருச்சு. அந்த சமயத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சியிடம் போய் பேசுறேன். 'சார், நீங்க இந்தப் படத்த பாருங்க. குடும்பத்தோட பாருங்க. உங்களுக்கு பிடிச்சுருந்தா மட்டும் வாங்குங்க… ஏனா நான் கடன் வாங்கி படம் எடுத்துருக்கேன்.’ என்று கெஞ்சுனேன்.
பாக்கலையே. பாக்கவும் இல்ல, வாங்கவும் இல்ல, ஏன்? கண்டுக்கக்கூட இல்ல. அப்றம் பாலிமர் தொலைக்காட்சியில் இருந்து அவங்களா கால் பண்ணி, ‘சார், உங்க படத்த மேடம் பாத்தாங்க. படம் நம்ம சேனல்ல இருக்கனும்னு கேட்டாங்க. எவ்ளோ அண்ணா கொடுக்குறீங்கன்னு கேட்டாங்க. நீங்க சொல்லுங்க அண்ணா’ ன்னு கேட்டாங்க. நீங்க சொல்லுங்கண்ணான்னு கேட்டாங்க.. எனக்கு அது போதும். நான் கேட்டுட்டேன்.
அத வச்சு கடன் அடைக்கலாம்ன்னு போகும்போது நான் கெஞ்சுன தொலைக்காட்சியிலேந்து போன் வந்தது. நாம வேணும்னா நீங்க கேட்ட அமௌன்ட்ல முடிச்சுக்கலாமான்னு கேட்டாங்க. நீங்க கொடுக்குறேன்னு சொல்றதவிட 40 லட்சம் கம்மியாதான் கொடுக்கப்போறேன். ஆனால், நான் அவுங்களுக்குத்தான் கொடுப்பேன்’ என்றேன். ஏனா அவுங்கதான் அந்த படத்துக்கு ஒரு மரியாதைய கொடுத்தாங்க. 40 லட்சம் விஷயம் இல்ல. நான் எப்படி வேணும்னாலும் சம்பாரிச்சுப்பேன். அதானே இங்க, எளிமையான கதைகளையும் படைப்புகளையும் மதிக்கிறதே இல்ல.” என்று பேசியிருக்கிறார்.