தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!

தனியொரு ஆளாக இயக்கி, நடித்து உருவாக்கப்பட்டுள்ள 'ஒன்' திரைப்படம் நிஜமாகவே ஒரு சாதனையா?
ஒன்
ஒன்
Updated on
ரேட்டிங்(3 / 5)

ஒரே நாளில் படம் எடுப்பது, ஒரே ஷாட்டில் படம் எடுப்பது இப்படி சில சாதனைகளை தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் அவ்வப்போது செய்து வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது சங்ககிரி ராஜ்குமார் என்பவர் ஒன் என்ற படத்தில் தானே இயக்கி, இசை அமைத்து, எடிட்டிங் செய்து கேமரா ஒர்க் செய்து, அனைத்து கதாபாத்திரங்களும் தானே நடித்துள்ளார். சினிமாவில் உள்ள 24 துறை பணிகளையும் தான் ஒருவரே செய்து ONE படத்தை தந்துள்ளார் சங்ககிரி ராஜ்குமார். இப்படம் உண்மையில் சாதனை படமாக வந்துள்ளதா? என்பதை இங்கு காணலாம்.

.படத்தின் கதை...

சங்ககிரி ராஜ்குமார் ஒரு காட்டிற்குள் செல்கிறார். அங்கே ஒரு அமானுஷ்யமான லேப் இருப்பதை பார்க்கிறார். அங்கே இருக்கும் ஒரு மருந்தை உள்ளே செலுத்திக் கொண்டால் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம். இந்த உலகிற்கு நாம் தான் ராஜா என்று அறிந்து கொள்கிறார். நான்கு நண்பர்களும் ராஜ்குமாருடன் சேர்ந்து இந்த மருந்தை செலுத்திக்கொண்டு உலகத்தில் இருந்து மற்றவர்கள் கண்ணிற்கு தெரியாமல் இருக்கிறார்கள்.

இந்த உலகில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்டு நண்பர்கள் ' இது சரியல்ல உலகில் வாழ மனிதர்கள் தேவை என்று புரிய வருகிறது. ஆனால் ஹீரோவாக இருக்கும் சங்ககிரி ராஜ்குமாருக்கு இது பிடிக்கவில்லை. இதனால் உடன் இருக்கும் நண்பர்களை கொலை செய்ய முயற்சிக்கிறார். இந்த கொலை திட்டம் நிறைவேறியதா? மீண்டும் இந்த உலகமும், இவர்களும் பழைய நிலைமைக்கு திரும்பினார்களா? என்று மீதி கதை சொல்கிறது.

சபாஷ் ராஜ்குமார்...... தானே இயக்கி தானே அனைத்து கதாபாத்திரங்களில் நடித்ததற்காகவும், இப்படி ஒரு முயற்சி உருவாக்கி அதை செயல்படுத்தியதற்காகவும் சங்ககிரி ராஜ்குமாருக்கு பல சபாஷ்களை போடலாம். ஹீரோவாக நடிப்பவர், நண்பர்களாக வருபவர்கள், அம்மாவாக நடிக்கும் பெண்மணி போலீஸ்காரர், டிரைவர் என அனைத்து கதாபாத்திரங்களும் சங்ககிரி ராஜகுமாரே வருவது சிறப்பு. மேலும் குரல் வித்தியாசம் மூலமாகவும், ஒரு சில கெட்டப்புகள் மூலமாகவும் கேரக்டரை வேறுபடுத்தி காட்ட முயற்சி வரவேற்கத்தக்கது. எடிட்டிங் ஒர்க் சிறப்பாக உள்ளது. நார்மலாக நகரும் எடிட்டிங் படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் சற்று கூடுதல் சிறப்புடன் இருக்கிறது. தனி ஒருவர் எப்படி கேமரா, கிரேன் இன்னும் சில உபகரணங்களை பயன்படுத்தி இருப்பார் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக சங்ககிரி ராஜ்குமார் தான் படம் இயக்கும்போது இன்னொரு கேமரா வைத்து படம் எடுத்த விதத்தை படமாக்கி இருக்கிறார்.

இதை படத்தில் பார்வையாளருக்கு காண்பிக்கவும் செய்கிறார். உதாரணமாக கிரேன் மூலமாக படமாக்க வேண்டிய காட்சிகளுக்கு தானாக இயங்கும் சில கருவிகள், கேமரா ஒர்க்கிற்கு டைம் செட் செய்து கொள்வது, கிரீன் மேட் பயன்படுத்திய விதம் போன்றவற்றை நமக்கு புரிய வைக்கிறார்.

ஒன்
ஒன்

குறிப்பாக குள்ளமாக வரும் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் அம்மாவாக நடிக்கும் சங்ககிரி ராஜ்குமார் என்பவற்றை இந்த கேரக்டர்கள் எப்படி உருவாக்கினேன் என்று புரிய வைக்கும் இடம் நன்றாக உள்ளது. சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்கள், சினிமாவைப் பற்றி படிப்பவர்களுக்கும் இந்த படம் ஒரு பயனுள்ள படமாக இருக்கும். நடிப்பை பொறுத்தவரை ஹீரோவாக வரும் சங்ககிரி ராஜகுமாரின் நடிப்பு மட்டுமே பாராட்டும்படியாக இருக்கிறது. ரயிலை எடுத்து ஓட்டும் காட்சி அது விபத்துக்குள்ளாகும் இடம் போன்ற விஷயங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
DC விமர்சனம்: லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ரத்தம் தெறிக்கும் அதிரடிப் படம்!
ஒன்

சில தவறுகள்... படத்தில் எடிட்டிங் ஒர்க் சிறப்பாக இருந்தாலும் கேமரா ஒர்க் சுமாராகத்தான் இருக்கிறது சில இடங்களில் ஒளிப்பதிவில் லைட்டிங் என்ற விஷயம் சரியாக இல்லை. நண்பராக வரும் சங்ககிரி ராஜ்குமார் நடிப்பு காமெடி என்ற பெயரில் சற்று எரிச்சலை தருகிறது. குரல் வித்தியாசம் மூலம் கேரக்டரின் வேறுபாடுகளை காட்ட முயற்சிக்கும் விஷயம் பிளஸ் ஆக இருந்தாலும் ஒரு சில இடங்களில் இதுவே ஒரு குறையாகவும் இருக்கிறது. மொத்தத்தில் சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் காட்சியின் மூலமாகவே சொல்ல வேண்டும் என்பதை பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்று இயக்குனர்கள் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விதத்தில் இதை இன்னும் ஆழமாக தனி ஒரு நபராக நமக்கு உணர்த்தி இருப்பது சங்ககிரி ராஜகுமார். இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும் இத்தனை பணிகளையும் தனி ஒருத்தரே செய்து முடிப்பது என்பது கண்டிப்பாக ஒரு சாதனை தான். இந்த விதத்தில் இப்படி ஒரு தமிழ் படம் வந்தது என்பதற்காக நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வணிக ரீதியான சினிமாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இதுபோன்ற மாறுபட்ட முயற்சியை பாராட்ட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
போட்டோகிராபர் விமர்சனம்: அஷ்ரப்பின் சர்வைவல் திரில்லர் ஜெயித்ததா?
ஒன்

மேலும் இப்படம் சினிமா கல்வியையும் நமக்கு உணர்த்தி விடுகிறது. மாற்று சினிமாவுக்கான ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்த ஒன் திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும். வாழ்த்துக்கள் சங்ககிரி ராஜ்குமார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று திரைக்கு வர உள்ளது.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், எந்தவித உதவிக்குழுவும் இன்றி ஒரு திரைப்படத்தை முழுமையாகத் தனியொரு மனிதராக எவ்வாறு உருவாக்க முடியும் என்பதையும், சினிமா ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்திரைப்படம் வழங்கும் தொழில்நுட்பக் கற்றல்களையும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com