

போட்டோகிராபர் விமர்சனம்: படத்தின் பலம் மற்றும் பாசிட்டிவ்கள்
ஒரு மனிதன் காட்டுக்குள் மாட்டிக் கொள்வது, கடலுக்கு நடுவில் மாட்டிக் கொள்வது, தீவில் மாட்டிக் கொள்வது, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பது போன்ற கதைகள் பல ஹாலிவுட்டில் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சர்வைவல் திரில்லராக வந்துள்ள படம் போட்டோகிராபர். அஷ்ரப் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் இது.
சென்னையில் புகழ்பெற்ற போட்டோகிராபராக இருப்பவர் நமது ஹீரோ வீரா. இவருக்கு வாழ்க்கை சாதாரணமாக செல்வதாக உணர்கிறார். ஏதாவது அட்வென்சராக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் கொடைக்கானல் பகுதியில் உள்ள காடுகளுக்கு சென்று அங்கே புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது. மேலும் தான் சிறிய வயதில் தனது அம்மா சொன்ன கதைகளில் கேள்விப்பட்ட ஒரு அதிசய மரத்தை பார்க்கவும், கொடைக்கானல் காடுகளுக்கு செல்லவும் முயற்சி செய்கிறார்.
கொடைக்கானலுக்கு சென்று அங்கே உள்ள சோலை என்ற பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார். அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று பலர் அறிவுரை சொல்கிறார்கள். 'அது பேய் வாழும் பகுதி' என்றும் பயமுறுத்துகிறார்கள். இருந்தாலும் அவர்களின் அறிவுரைகளை கேட்காமல் செல்கிறார் வீரா. அங்கே சென்றவுடன் பல்வேறு அமானுஷ்யங்களை உணர்கிறார்.
அங்கே எந்த மனிதர்களும் இல்லை வித்யாசமான சப்தங்கள் மட்டும் கேட்கின்றன ஒரு காட்டு நாய் இவரை துரத்துகிறது. இவரை போல் யாரோ ஒருவர் எதிரில் வந்து பேசுவது போன்று உணருகிறார். ஒரு கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார். அந்த சூழ்நிலையில், எதிர்பாராமல் இரண்டு மனிதர்கள் அங்கே வருகிறார்கள். அந்த இரண்டு மனிதர்களிடமும் உதவி கேட்கிறார் வீரா. ஆனால் அவர்களோ இவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
ஒரு பக்கம் இவரது தந்தையும் காதலியும் இவர் என்ன ஆனார் என்று தேடுகிறார்கள். காதலி இவரை தேடி காட்டிற்கு வந்து இவர் இருப்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் இவர் திரும்பியும் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தாய் சொன்ன அதிசய மரத்தை பார்த்துவிட்டு தான் வருவேன் என்று சொல்கிறார். இறுதியில் என்ன ஆனது? அந்த மரத்தை இவர் பார்த்தாரா? இவரை கொலை செய்ய முயற்சித்த மனிதர்கள் என்ன ஆனார்கள்? என்று சொல்கிறது படம்.
படத்தில் இருக்கும் மூன்று பாசிடிவ் ஆன விஷயங்கள்
நம்பர் ஒன்.. வீராவாக நடிக்கும் ஹீரோ அஷ்ரப் நடிப்பு. அமானுஷ்ய காட்டில் ஒரு சாதாரண மனிதன் எப்படி இருப்பான் என்று தனது உணர்வுகள் மூலம் காட்டியிருக்கிறார். ரியாக்ட் செய்ய எந்த நடிகர்களும் இல்லாமல் ஒரு சோலோ ஆக்டிங் போல் இவர் நடிப்பு இருக்கிறது. பசிக்கும்போது காளான்களை எடுத்து தின்பதும், உதவி, உதவி என்று பயந்து ஓடுவதும் என இவரது நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது..
நம்பர் டு.. படத்தின் ஒளிப்பதிவு. ஒரு அமானுஷ்ய காட்டில் ஏதோ ஒன்று வந்து விடும் என்ற உணர்வை தருவதில் ஒளிப்பதிவு தனது பங்களிப்பை செய்திருக்கிறது. ரயீஸ் அகமத் ஒளிப்பதிவு சாதாரண இந்த படத்தை சற்று ரசிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாயிண்ட் நம்பர் மூன்று... சப்தம் நிசப்தமாக இருக்கும் காட்டில் அவ்வப்போது வரும் சில சப்தங்கள் நமக்கு சற்று பயத்தை உண்டு பண்ணுகிறது.
ஒரு சர்வைவல் திரில்லர் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட நபர் எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற உணர்வு பார்வையாளர்களுக்கு வர வேண்டும். ஆனால் இந்த படத்தில் இவர் பாதிக்கப்பட்ட ஹீரோ எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்ற உணர்வு நமக்கு வரவில்லை. இதற்கு காரணம் சரியாக வடிவமைக்கப்படாத திரைக்கதை தான்.
ஒரு காட்டில் எதிர்பாராத மனிதர்கள் விலங்குகள் என்று பல விஷயங்கள் இருக்கும். இவற்றையெல்லாம் நமது ஹீரோ எப்படி எதிர்கொண்டார் என்று சற்று விளக்கமாக சொல்லி இருந்தால் இந்த படம் இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும். படத்தின் பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஹீரோ முகத்தை மட்டுமே தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டே இருப்பது எப்போது படம் முடியும் என்ற உணர்வை தந்து விடுகிறது. இன்னும் சில கேரக்டர்களை படத்தில் வைத்து இருந்தால் இந்த உணர்வை தவிர்த்து இருக்கலாம்.
படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஜனனிக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. பெரிய நடிகர்களாக இருக்கும் ஆடுகளம் நரேன், கருணாகரன் இவர்களுக்கு நடிக்க இன்னும் இடம் வழங்கப்பட்டு இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த போட்டோகிராபர் டெக்னிக்கிலாகவும், நடிப்பிலும் ஓரளவு பரவாயில்லை ரகம். திரைக்கதை வடிவமைப்பில்? ரொம்ப சாரி.
இப்படத்தின் மூலமாக ஒரு சர்வைவல் திரில்லர் படத்தின் நுணுக்கங்கள், அதன் பிளஸ் மற்றும் மைனஸ்களை துல்லியமாகப் புரிந்து கொண்டு, திரையரங்குக்குச் செல்வதற்கு முன்பே படம் குறித்த முழுமையான தெளிவான பார்வையைப் பெற முடியும்.