

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா நடிப்பில் வெளிவந்துள்ள படம் DC.
வேலூர் பகுதியில் தனது டீமுடன் 'தப்பை தட்டி கேட்கும் பணியை' செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஒரு ஏழையை ஏமாற்றி பணம் பறிக்கும் போலீஸ்காரரை கொலை செய்கிறார். இதனால் கோபம் கொள்ளும் காவல்துறை லோகேஷ் டீமை காலி செய்ய நினைக்கிறது.
சென்னையில் ஒரு லாட்ஜில் தங்குகிறார் லோகேஷ். அங்கே பாட்டு பாடும் ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார். போலீஸ் அந்த லாட்ஜ்ஜை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்துகிறது. காதலி இங்கே கொல்லப்படுகிறார். போலீஸ் லோகேஷை கைது செய்கிறது. லோகேஷ் அங்கிருந்து தப்பி சென்று ஒரு இடத்தை அடைக்கிறார்.
அங்கே மற்றவர்களின் வற்புறுத்தலால் பாலியல் தொழிக்கு தள்ளப்பட்ட வாமிகாவை சந்திக்கிறார். இதன் பிறகும் சில கொலைகளை செய்கிறார். காவல்துறை மும்முரமாக இவர்களை தேடுகிறது. பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் வாமிகா இவர்களுடன் இணைந்து பயணம் செய்கிறார். இறுதியில் தான் பிரிந்து வந்த தந்தையை சந்திக்க நினைத்து தந்தையை காண செல்கிறார் லோகேஷ். காவல்துறை இந்த நேரத்தில் இவர்களை சுற்றி வளைக்கிறது இறுதியில் ஜெயித்தது யார் என்று படம் சொல்கிறது.
ஆக்சன், கேமரா போன்ற மேக்கிங் விஷயங்கள் நன்றாக இருக்கின்றது. கதையைப் பொறுத்தவரையில் ஜானி, நாயகன் மலையாளத்தில் வெளிவந்த அரசன் இன்னும் பல போலீஸ்-தாதா மோதல் கதைகளையே மையப்படுத்தி இந்த படமும் வந்துள்ளது. படத்தின் முதல் பாதி திரைக்கதையில் ஆழமான வலு இல்லை இரண்டாம் பாதி திரைக்கதை சற்று ரசிக்க முடிகிறது.
ஒவ்வொரு முறையும் போலீஸிடம் இருந்து லோகேஷ் டீம் தப்பும் இடம் ஓரளவு ரசிக்க வைக்கிறது. அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் இவர்களின் படங்களில் வன்முறை என்பது வியாபித்து இருக்கும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து படம் தருகிறார்கள் என்றால் வன்முறை காட்சிக்கு கேட்கவா வேண்டும்?
முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை யாராவது ஒருத்தர் கொல்லப்படுகிறார்கள், சுடப்படுகிறார்கள், வெட்டப்படுகிறார்கள். ரத்தம், ரத்தம் ரத்தம் ஒவ்வொரு காட்சியிலும் ரத்தம் ஆறாக, கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது. அளவு கடந்த வன்முறை இப்படத்திற்கு ஒரு மைனஸ் பாயிண்ட்.
மேலும் அனிருத் இசை பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை. சீரியஸான காட்சிகளில் நகைச்சுவைக்கு ரெக்கார்டிங் செய்வது போல இசை அமைத்திருக்கிறார் அனிருத்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் இந்த இரண்டு விஷயங்களும் படத்திற்கு பலம். ஆக்சன் காட்சிகளிலும், லாட்ஜில் லைட்டிங் விஷயங்களிலும் ஒளிப்பதிவு தன்னிகராக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக ஓரளவு ஜெயித்திருக்கிறார். நடிப்பில் தனுஷ் சூர்யா சாயல் தெரிகிறது படம் முழுக்க எப்போதும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை சற்று தவிர்த்திருக்கலாம்.
வாமிகா, சஞ்சனா இரண்டு ஹீரோயின்களில் வாமிகா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நெருக்கடியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் இடத்தில் தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். கோபம், அன்பு, தாய்மைக்கான ஏக்கம் போன்றவற்றை தன் கண் முன் கொண்டு வருகிறார்.
அப்பா கஸ்தூரிராஜாவின் நடிப்பும் நன்றாக உள்ள. படத்தில் போலீஸ்காரராக வரும் வில்லன், உடன் வரும் நண்பர்கள் என அனைவரும் சரியான நடிப்பை தந்துள்ளார்கள்.
நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் இந்த மூன்று விஷயங்களும் படத்தில் நன்றாக இருந்தாலும் அளவு கடந்த வன்முறை, பல படங்களில் பார்த்த காட்சிகள் ரிப்பீடட் மோடில் இருப்பதால் இந்த படத்தை நாம் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் கூட வித்தியாசமாக எதுவும் இல்லை. அப்பா பேச்சைக் கேட்காத மகன் கையில் கத்தியை எடுப்பது, தன் மகன் ஊருக்காக தான் வன்முறையை கையில் எடுத்தான் என்று லேட்டாக அப்பா புரிந்து கொள்வது, பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்ணை மீண்டு வந்து வாழ்க்கை தருவது என பல படங்களில் பார்த்த காட்சிகள் பல படம் முழுக்க இருக்கின்றன.
ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் இந்த படம் பிடிக்கலாம். குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது.