
பாலிவுட்டில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சஞ்சய் தத். இவர் 1981-ம்ஆண்டு வெளியான ராக்கி என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். போதை மருந்து, குண்டுவெடிப்பு சம்பவம், சிறைவாசம் போன்ற பல்வேறு சர்ச்சைகள் இவருக்கு பின்னால் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 44 ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் சமீப காலமாக தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் 2022-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தில் யாஷ்க்கு வில்லனாக நடித்திருந்தார்.
அந்த படம் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் சஞ்சய் தத் பேசும்போது, ‘எனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது கோபம் இருக்கிறது. ‘லியோ’ படத்தில் எனக்கு அவர் சிறிய கதாபாத்திரத்தைக் கொடுத்து என்னை வீணடித்துவிட்டார்’ என சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்தும் அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் பற்றியெல்லாம் பேசியிருந்தார். ஆனால் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ பதிவை மட்டும் தனியாக கட் செய்து, லோகேஷ் கனகராஜ் மீது சஞ்சய் தத் கோபம் என்று இணையத்தில் பரப்பி விட்டனர். இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
"அந்த விழா முடித்தவுடன் சஞ்சய் தத் சார் எனக்கு போன் செய்து பேசினார்.
அவர் நான் நகைச்சுவையாக பேசிய விஷயங்களில் அதை மட்டும் எடிட் செய்து சமூகவலைதளத்தில் போட்டு பெரிதாக்கிவிட்டார்கள் என்று கூறி ஆதங்கப்பட்டார். நான், ‘பிரச்சினை இல்லை சார்’ என்று சொன்னேன்" என்றார்.
லோகேஷ் மேலும் கூறுகையில், ‘நான் அவர் கதாபாத்திரத்தில் தவறு செய்திருக்கலாம், தவறு செய்யாமல் இருக்க நான் தலைசிறந்த புத்திசாலியோ அல்லது சிறந்த இயக்குனரோ அல்ல. நான் என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், ஆனால் எனக்கு அவை எல்லாமே பாடம் தான். வரும் படங்களில் அந்த தவறை செய்யமாட்டேன். கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் செய்வேன்’ என்றார்.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் அதிரடித் திரைப்படமான 'கூலி'யில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திர ராவ், பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 14-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமூக ஊடகங்களில் கருத்து திரிந்து வைரலான போதிலும், லோகேஷ் மற்றும் சஞ்சய் தத் இருவரும் அந்த தருணத்தை அழகாக கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.