பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘டான்’ என்றும் அழைக்கின்றனர். 1980-ம் ஆண்டு நாடகம் மற்றும் தொலைக்காட்சியில் பணிபுரிந்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்த ஷாருக்கான், 1992ல் ‘தீவானா’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைவுலகில் நுழைந்தார். அந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும், அதனை தொடர்ந்து வெளிவந்த பாசிகர், தர் போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்து அவரை முன்னனி ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தியது. கபி ஹான் கபி நா, கரண் அர்ஜூன், தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, பர்தேஸ், தில் தோ பாகல் ஹை, தில் சே, குச் குச் ஹோத்தா ஹை, பாட்சா, ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி, தேவ்தாஸ் போன்ற படங்கள் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றே சொல்லலாம்.
1995-ம் ஆண்டில் வெளியான ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் அவரை, கான் நட்சத்திரத்திலிருந்து சூப்பர் ஸ்டாராக ஏற்றம் பெறுவதற்கான படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் வெளியான அன்றிலிருந்து மும்பை உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிப்பை தாண்டி படங்களையும் தயாரிக்கும் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கௌரி கானுடம் இணைந்து ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார்கள்.
2008-ம் ஆண்டில் அவர் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐ.பி.எல்) அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளராகவும் இருக்கும் ஷாருக்கான் தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். நடிகர் ஷாருக்கான் 2007-ம் ஆண்டில் ‘கவுன் பனேகா குரோர்பதி’யின் ஒரு சீசனை தொகுத்து வழங்கினார்.
பாலிவுட் சினிமாவின் நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபராக வலம் ஷாருக்கான், இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் 2023-ம் ஆண்டில் நடித்த ‘ஜவான்' படத்துக்காக ஷாருக்கானுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுடன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கலந்துரையாடும் ஷாருக்கான், சமீபத்தில் அப்படி ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டார். நடிப்புக்கும் சிறந்த நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்ற ஷாருக்கான், ரசிகர் ஒருவரின் கிண்டலான கேள்விக்கு கூலாக பதிலளித்து அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர், ‘திரையுலகில் ஜொலித்து வரும் நீங்கள், இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு சினிமாவில் இருந்து விலகுவீர்களா?' என்று கேட்டு அவரை கிண்டல் செய்ய முயன்றார்.
இதற்கு கூலாக பதிலளித்த ஷாருக்கான், ‘தம்பி, உங்கள் குழந்தைத்தனமான கேள்விகள் முடிவடைந்ததும், பயனுள்ள ஒன்றைக் கேளுங்கள்! அதுவரை, தயவுசெய்து தற்காலிக ஓய்வு எடுப்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்’, என்று நகைச்சுவையான பதிலுடன் பதிலடி கொடுத்தார். அவரது இந்தப் பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதேநேரம் 'தேசிய விருதை வென்றதின் மூலம் ராஜா போல உணருகிறேன்' என்று இன்னொரு கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
தற்போது ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ என்ற படத்தில் தனது மகள் சுஹானா கானுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகர் ஷாருக்கான்.