

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 2025-ம் ஆண்டின் 67 மிகவும் ஸ்டைலிஷ் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் இவர்தான். அது வேறு யாருமல்ல, இந்திய சினிமாவில் 33 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள உலக சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் தான்.
2025-ம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் ஸ்டைலிஷ் பிரபலங்களின் பட்டியலில் ஷாருக்கான் தோன்றுவது ‘கிங்’ கானின் பெரிதும் அலங்கரிக்கப்பட்ட தொப்பியில் மற்றொரு இறகு என்றே சொல்லலாம்.
அந்த வகையில் 2025-ம் ஆண்டு ஷாருக்கானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாகவே இருந்தது என்றே சொல்லலாம். அதாவது, கடந்த மே 2025-ல் நடந்த ‘மெட் காலா' என்ற பிரபலமான பேஷன் நிகழ்ச்சியில் ஷாருக்கான் முதன் முறையாக பங்கேற்று தனது கவர்ச்சிகரமான உடை அலங்காரத்தால் முத்திரை பதித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் அணிந்திருந்த உடை மற்றும் அணிகலன்கள் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவரது ஆடை அலங்காரம் அனைவரையும் கவர்ந்ததுடன், அவரை 2025-ம் ஆண்டின் ஸ்டைலிஷ் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிக்க செய்தது என்றே சொல்லலாம்.
அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதுவே ஷாருக்கானின் முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் லண்டனில் உள்ள லெஸ்டர் சதுக்கத்தில் (Leicester Square) ஷாருக்கானுக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. ஷாருக்கான், காஜேல் நடித்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (DDLJ) திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், லெஸ்டர் சதுக்கத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டைலிஷ் பிரபலங்களின் பட்டியலில் ப்ரினா கார்பென்டர், விவியன் வில்சன், நிக்கோல் ஷெர்ஸிங்கர், வால்டன் கோகின்ஸ், ஜெனிபர் லாரே உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டின் ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவின் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.