
மெட் காலா ஒரு பிரபலமான பேஷன் நிகழ்வு ஆகும். இது ஆண்டுதோறும் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த 1948-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மே மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில், ஃபேஷன், சினிமா, இசை, அரசியல், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இருந்து பல பிரபலமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்வைத்து, திரை பிரபலங்கள் அந்த கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பாரம்பரிய உடையை வடிவமைத்து அணிந்து கொள்வார்கள்.
உலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்நிகழ்விற்கு எப்போதும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் மேலை நாடுகளுக்கானதாக இருந்த இந்த பேஷன் நிகழ்ச்சி சமீப காலமாக இந்திய திரை பிரபலங்களும் அதிகம் கலந்துகொண்டு உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தாண்டு கருப்பினத்தவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ‘Dandyism’ கலாச்சார அடிப்படையில் ஆடைகள் அணிய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட்டில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு உலக கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஈஷா அம்பானி, கியாரா அத்வானி, தில்ஜித் தோசான்ஜ் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
‘மெட் காலா' நிகழ்ச்சியில் ஷாருக்கான் அணிந்திருந்த உடை மற்றும் அணிகலன்கள் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. சப்யாசாச்சி வடிவமைத்த கருப்பு நிற கோட் மற்றும் வித்தியாசமான அணிகலன்கள் அணிந்து கையில் சிங்கம் பதித்த செங்கோல் ஏந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஷாருக் கான். மெட் காலாவில் ஷாருக்கான் பங்கேற்பது அவரது உலகளாவிய செல்வாக்கிற்கு ஒரு சான்றாகும். மேலும் இது இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கான உலகளாவிய பாராட்டை வலுப்படுத்துகிறது.
குறிப்பாக ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் அணிந்திருந்த கைக்கடிகாரம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த கைக்கடிகாரம் குறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. ஷாருக்கான் அணிந்திருந்த கைக்கடிகாரம், ‘படேக் பிலிப் கிராண்ட் காம்ப்ளிகேஷன்ஸ் 6300ஜி அல்ட்ரா-ரேர்' வகையை சேர்ந்தது என்பதும், அதன் விலை 2.5 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடியே 6 லட்சமாம். மேலும் இது 18 காரட் ஓயிட் கோல்ட்டால் (white gold) வடிவமைக்கப்பட்டது, 118 மரகதங்கள் மற்றும் 291 வைரங்களால் கண்ணுக்குத் தெரியாத வகையில் நுட்பமாக அலங்கரிக்கப்பட்டது. மேலும் இந்த கைக்கடிகாரம் ஈரப்பதம் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; சிக்கலான கைவினைத்திறன் மற்றும் இயந்திர அற்புதத்தை கொண்டுள்ளது. ஒரு கைக்கடிகாரத்தின் விலை ரூ.21 கோடியா? என அனைவருமே ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி நடிகர் ஷாருக்கான், இன்ஸ்டாகிராமில் மெட் காலாவில் கலந்து கொண்ட படங்களை வெளியிட்டு, நீல கம்பளத்திற்கு தன்னை அலங்கரித்த வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.