கூலி படக்குழுவின் அதிர்ச்சியூட்டும் சம்பள விவரம்! - லோகேஷ், அனிருத் சம்பளம் எவ்வளவு?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று திரைக்கு வரத் தயாராக உள்ளது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங், தினசரி புதிய சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், இந்த மெகா படத்திற்காக நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எவ்வளவு சம்பளம் பெற்றனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'கூலி', வசூல் ரீதியாக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் சம்பளம்?
'டெக்கான் ஹெரால்டு' (Deccan Herald) நாளிதழின் அறிக்கையின்படி, 'கூலி' படத்திற்காக ரஜினிகாந்த் ₹200 கோடி சம்பளம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு ₹150 கோடி பேசப்பட்டிருந்தாலும், அட்வான்ஸ் டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட அதிரடி உயர்வு காரணமாக, அவரது சம்பளம் ₹200 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகருக்குக் கிடைத்த மிகப்பெரிய சம்பளங்களில் ஒன்றாகும்.
அமீர்கானின் சம்பளம்?
'கூலி' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் பங்களிப்புக்காக அவர் ₹20 கோடி சம்பளம் பெற்றதாக முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அமீர்கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள், அவர் இந்தப் படத்திற்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. ரஜினிகாந்த் மீது கொண்ட அன்பு மற்றும் மரியையின் காரணமாகவே அவர் 'கூலி' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மற்ற நட்சத்திரங்களின் சம்பளம்:
'கூலி' படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் நாகார்ஜுனா அகினேனி, தனது பங்களிப்பிற்காக ₹10 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் ₹4 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
'பாகுபலி' திரைப்படத் தொடரில் கட்டப்பாவாக நடித்ததற்காகப் பிரபலமான நடிகர் சத்யராஜ், 'கூலி' படத்திற்காக ₹5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
கன்னட திரையுலகின் நட்சத்திரமான உபேந்திரா, இந்தப் படத்தில் நடித்ததற்காக ₹5 கோடி பெற்றுள்ளார்.
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் சம்பளம்?
படத்தின் 'கேப்டன்' என அழைக்கப்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'கூலி' படத்தை இயக்குவதற்காக ₹50 கோடி சம்பளம் பெற்றுள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ள ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப் பங்களிப்பிற்காக சுமார் ₹15 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, ப்ரீ-சேல்ஸில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இது ரஜினியின் அசைக்க முடியாத ஸ்டார் பவரையும், லோகேஷ் கனகராஜின் இயக்குதல் திறமையையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.