பிடிக்காத உடைக்கு மறுப்பு: ஸ்ருதி ஹாசன் எடுத்த அந்தத் துணிச்சலான முடிவு என்ன?

திரையில் தோன்றும் விதம் முதல் சுஹாசினி பேட்டியின் சுவாரஸ்யங்கள் வரை வெளிப்படுத்திய கருத்துகள்.
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு பாடலில் நடனமாடுவதற்குக்கூட நடிகைகள் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது? தனக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் துணிச்சலைப் பற்றிப் பேசியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்!

சினிமாவில் நடிப்பதற்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தனக்கான விருப்பங்களையும், எல்லைகளையும் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியம். குறிப்பாக, கதாநாயகிகள் திரையில் எப்படித் தோன்ற வேண்டும் என்பதைப் பற்றி பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில், தனது முடிவுகளைத் தானே எடுப்பதாகத் துணிச்சலுடன் கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

ராம் சரண் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இயக்கிய இப்படத்தில் இடம்பெற்ற 'ஹெல்லல்லல்லோ' என்ற பாடலில் ராம் சரணுடன் இணைந்து நடனமாடியவர் ஸ்ருதி ஹாசன். ஜான்வி கபூரும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தார்.

இப்படத்தில் பெண்களின் சித்தரிப்பு குறித்து விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன. குறிப்பாக, ஜான்வி கபூரின் கதாபாத்திரம் எப்படிக் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறித்து அவர் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், பெத்தி படத்தின் சிறப்புப் பாடலில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று ஸ்ருதியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும் என்றும், அலங்காரம் செய்துகொண்டு அழகாகத் தோன்றுவதையும் ரசிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில், திரையில் என்ன அணிய வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதில் தனக்கென சில வரம்புகளை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்குச் சௌகரியமில்லாத உடையை அணியச் சொன்னால், அதை மறுத்துவிடுவேன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இதற்காகப் படப்பிடிப்பில் சிலருடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் தன்னைச் சமாளிப்பதற்குக் கடினமானவர் என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி தனக்குக் கவலையில்லை என்பதுதான் ஸ்ருதியின் பதில்.

ஒரு பாடலில் கவர்ச்சியாக நடனமாடுவது என்பது தனது சொந்த விருப்பம் என்றும், அதற்காக யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கருதுகிறார்.

மேலும், ஜான்வி கபூரின் அனுபவம் குறித்துக் கேட்கப்பட்டபோது, அவருடன் இணைந்து பணியாற்றியிருந்தாலும், மற்றொருவரின் அனுபவத்தைப் பற்றித் தன்னால் கருத்து கூற முடியாது என்று பக்குவமாகப் பதிலளித்திருக்கிறார்.

அப்பா கமல்ஹாசன் சொன்ன அந்த பதில்!

ஸ்ருதிஹாசன் சுஹாசினியிடம் அளித்த மற்றொரு பேட்டியிலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக சினிமாவில் நடிக்க வந்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் கவனிக்கத்தக்கது.

சினிமாத்துறையில் இருக்கும் ஆபத்துகளும் சவால்களும் தெரிந்திருந்தும், மகளை இந்தத் துறைக்கு எப்படி அனுமதித்தீர்கள் என்று ஒரு முறை கமல்ஹாசனிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அளித்த பதில் ஸ்ருதியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டதாம்.

ஒரு பெண்ணுக்குத் தெரியாத குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் நிச்சயமற்ற தன்மையைப் போலத் தான் இதுவும். ஆனால், சினிமா எங்கள் குடும்பம்.

இங்கே தான் என் மகள் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். சினிமாவை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை அப்போது தான் உணர்ந்ததாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

தனது வாழ்க்கையில் மன அழுத்தம் நிறைந்த நாட்களை நண்பர்களிடம் தொலைபேசியில் மனம் விட்டு பகிர்ந்து கொள்வதாகவும், சில நேரங்களில் தனது பூனைக்குட்டியிடம் மனிதர்களைப் பற்றி புலம்புவதாகவும் நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார்.

ஒரு நடிகையாக மட்டும் அல்லாமல் தன்னுடைய முடிவுகளை தானே எடுக்கும் சுதந்திரமான பெண்ணாகவும் ஸ்ருதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.‌

ஒரே பேமெண்ட் இல் ரூ 20 கோடி வீடா?

பேட்டியில் சுஹாசினி இன்னொரு கேள்வியையும் முன்வைத்தார். ஒரே பேமெண்ட்டில் ரூ 20 கோடி மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியதாக கேள்விப்பட்டேனே என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்ருதி நேரடியாக பதிலளிக்காமல், உங்கள் வாயில் நெய்யும் சர்க்கரையும் போட வேண்டும். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கட்டும் என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். இந்த நகைச்சுவையான பதில் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தையும், ஸ்ருதியின் இயல்பான நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தியது‌‌.

பெண்களுக்கு ஆதரவாக இருப்பது தான் பெண்ணியம்!

பெண்ணியம் பற்றிய தனது கருத்தையும் ஸ்ருதி இந்த உரையாடலில் பகிர்ந்து இருக்கிறார். பெண்கள் மற்ற பெண்களுக்கு ஆதரவாக இருப்பதும், அவர்களுக்காகக் கதவுகளை திறந்து விடுவதும் தான் உண்மையான பெண்ணியம் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் ஆண்களும் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். சினிமாவில் பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாகப் பார்க்கப்படாமல் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்ற அவரது கருத்து கவனிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!
ஸ்ருதி ஹாசன்

நடிகைகளின் விருப்பம் யாருடைய கையில்?

சினிமாவில் ஒரு கதாநாயகி எப்படி உடை அணிய வேண்டும், எந்த அளவுக்கு கவர்ச்சியாகத் தோன்ற வேண்டும் என்பதைப் பற்றி பலரும் தங்களுடைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் இறுதியில் அது சம்பந்தப்பட்ட நடிகையின் தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும் என்பது தான் ஸ்ருதி ஹாசனின் பேச்சில் வெளிப்படும் முக்கியமான கருத்து.

ஒரு பாடலுக்கு நடனமாட ஒத்துக் கொள்வதும், அதில் அழகாக அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும் அவரவர் விருப்பம். அதே போல தனக்கு சௌகரியமில்லாத உடையை அணிய மறுப்பதற்கும் ஒவ்வொரு நடிகைக்கும் உரிமை இருக்கிறது. இதை ஒரு நடிகை தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படும் போது, அவரைச் சமாளிக்க கடினமானவர் என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம்?

திரையுலகில் வாய்ப்புகளைப் பெறுவதற்காகத் தங்களுடைய விருப்பங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கக் கூடாது என்பதையும் ஸ்ருதியின் கருத்துகள் உணர்த்துகின்றன.

இதையும் படியுங்கள்:
காதலிக்க நேரமில்லை: இளைஞர்களுக்கும் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களுக்கும் மட்டும்!
ஸ்ருதி ஹாசன்

ஈரான் பயணத்தில் சுஹாசினிக்கு ஏற்பட்ட ஆச்சரியம்!

இந்த உரையாடலின் போது சுஹாசினி தனது ஈரான் பயண அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அங்கு சென்ற போது தொழிலாளர்கள் உட்படப் பலரும் மூக்கில் கட்டுப் போட்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தாராம். ஏதோ சண்டையில் காயமடைந்தவர்களாக இருக்கலாம் என்று முதலில் நினைத்திருக்கிறார். பின்னர் தான் அவர்கள் மூக்கு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்பது தெரிய வந்ததாம். இதைக் கேட்ட ஸ்ருதி, மூக்கு அறுவை சிகிச்சையின் வலி மிகவும் அதிகம் என்றும், தன்னை யாராவது அதிகமாகத் தொந்தரவு செய்தால் அவர்களையும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சொல்லி விடுவேன் என்றும் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.

திரையில் கவர்ச்சியாகத் தோன்றுவதா, மறுப்புத் தெரிவிப்பதா? என்பது நடிகையின் தனிப்பட்ட முடிவு. மற்றவர்களின் விருப்பத்துக்காக அல்லாமல், தன்னுடைய விருப்பத்தில் உறுதியாக இருக்கும் ஸ்ருதியின் பேச்சு கவனிக்கத்தக்கது! 

சினிமாவில் வாய்ப்புகளுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் தன் விருப்பங்களை விட்டுக்கொடுக்காமல், சொந்த எல்லைகளைத் தெளிவாக வகுத்துக்கொள்ளும் அணுகுமுறையின் மதிப்பை வாசகர்கள் உணர்வார்கள்.