திருமணம், குழந்தைகள் என்று எதிலும் நம்பிக்கை இல்லாத நாயகன். குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களே தேவையில்லை என்று செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் நாயகி. இவர்கள் இருவரின் பாதைகள் ஒரு இடத்தில் இணைகிறது. பிறகு என்ன ஆனது என்பது தான் காதலிக்க நேரமில்லை.
அமெரிக்கா செல்வதற்காகக் காதலன் ஜான் கோக்கனை பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் நித்யா மேனன் (ஷ்ரேயா), ஒரு கட்டத்தில் தனது தோழியுடன் அவன் தகாத உறவில் இருப்பதை பார்த்து விடுகிறார். அவரை விட்டு விலகியும் விடுகிறார். தனியாக இருந்தால் தானே பிரச்னை என்று செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுருகிறார்.
மற்றொரு கிளைக்கதையில் கல்யாணம், குழந்தை என்பதே ஒரு பெரிய சுமை. அதில் ஈடுபட விரும்பவில்லை என்ற கொள்கையுடன் இருக்கும் ரவி மோகன் (ஜெயம் ரவி என்கிற சித்தார்த்). அவரது காதலி டி ஜே பானு. இவரது கொள்கை பிடிக்காமல் நிச்சயதார்த்த நாளன்று வராமல் உறவைப் புறக்கணிக்கிறார்.
நித்யா மேனனும் ரவியும் எப்படிப் பார்க்கிறார்கள். இவர்களை இணைக்கும் புள்ளி எது. இவர்களாவது இணைந்தார்களா என்பது தான் மீதிக் கதை. இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு ஒரு மாறுதலான காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி நினைத்திருக்கிறார். தன்பாலினத் திருமணம், திருமணமின்றி குழந்தை பெற்றுக்கொள்ளுதல், திருமணம் தாண்டிய உறவு, ஒரு சிங்கிள் பேரன்டாகத் தன் குழந்தையை வளர்க்க ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எனப் பல கோணங்களில் பயணிக்கிறது படம். இதை விடுத்து ஏதாவது ஒரு கோணத்தில் நின்றிருந்தால் இன்னும் சற்று சிறப்பாகவே வந்திருக்கும் என்று தோன்றுவது உண்மை.
Convenient screenplay (வசதியான திரைக்கதை) என்று சொல்வார்கள். அதற்கு முழுமுதல் எடுத்துக்காட்டு இந்தப் படம். பாத்திரங்கள் சந்திப்பது. அவர்களுக்குள் பழக்கம் ஏற்படுவது. சண்டைபோட்டு பிரிவது, பின்னர் சேர்வது என எதிலும் ஒரு புதிய ஐடியாவே இல்லை. எதிர்ப்பார்க்கும்போது பிரிகிறார்கள். அதே போல் வந்து சேர்கிறார்கள். இந்தக் கணிக்கக்கூடிய தன்மை தான் படத்தோடு ஒன்ற விடாமல் பல இடங்களில் தடுக்கிறது. இடைவேளை வரை படம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
வினய் ராய் சம்பந்தப்பட்ட GAY திருமணக் காட்சிகள் எதற்கு என்றே தெரியவில்லை. சமுதாயம் வளர்ந்து விட்டது. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டது என்பதைக் காட்டுவதற்கு இதை உபயோகப் படுத்தியிருந்தால் சாரி. சுத்தமாக ஒட்டவில்லை. இன்னொரு நண்பனாக யோகிபாபு. சிரிப்பது போல் காமடி செய்வது எப்படி என்று இன்னும் இவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாயகியின் அம்மா அப்பாவாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ. பெரிதாக ஒன்றும் நடிக்க வாய்ப்பில்லை. சித்தியாக வினோதினி வைத்யநாதன். ரவியின் அப்பாவாக லால். ரவி மற்றும் நித்யாவின் பாத்திரங்களைத் தவிர மற்றக் கதாபாத்திரங்கள் சரியாக எழுதப்படவே இல்லை. பிரச்சினைகளை ஆழமாக அலசினால் விவகாரமாகிவிடுமோ என்று சந்தேகத்தில் மேம்போக்காக அணுகியிருக்கிறார்கள். அதனால் தான் இரண்டு பாத்திரங்கள் சேரும் போதோ பிரியும் போதோ பெரிய தாக்கம் எதுவும் எழவில்லை.
இடைவேளைக்குப் பிறகு நித்யா மேனனின் மகனாக அந்தச் சிறுவன் வந்தபிறகு தான் கதைக்கு மீண்டும் உயிர் வருகிறது. இவன் தான் படத்தை முடித்தும் வைக்கப் போகிறான் என்றும் தெரிந்து விடுகிறது.
படத்தின் உண்மையான நாயகன் ஏ ஆர் ரகுமான் தான். அற்புதமான பின்னணி இசையில் சுமாரான படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதில் இவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கவ்மிக் ரே காட்சிகளை வண்ணமயமாகவும் வளமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார். நாயகி நாயகன் இருவருமே வசதியானவர்களாகக் காண்பிக்கப் படுவதால் இருவரது வீடுகள், அபார்ட்மெண்ட்கள் கலை நயத்தோடு இருக்கின்றன.
ஏற்கனவே சொன்னது போல வசதியான திரைக்கதையாக இருந்தாலும் வசனங்கள் பல இடங்களில் யதார்த்தமாக அமைந்திருப்பது ஒரு பலம். ரவி மோகனும், நித்யா மேனனும் ஒரு நல்ல ஜோடியாகத் தோன்றுவதும், இவர்கள் சேர வேண்டும் என்று பார்ப்பவர்கள் நினைக்க வைப்பதும் அவர்கள் அந்தந்த பாத்திரத்திற்கு சேர்த்துள்ள பலம். காதலிக்கவே நேரம் இல்லாமல் தொழில் லட்சியம் என ஓடும் நாயகனும் நாயகியும் ஐ லவ் யூ எனச் சொல்லத் தோளில் சாய்ந்து ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் அந்தத் தருணம் உண்மையாகவே லவ்லி.
இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதை இளைஞர்களுக்குப் பிடிக்கும் படியான படமாகக் கொடுக்க வேண்டும் என்று முயன்றதில் இயக்குனர் கிருத்திகா பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார். உறவுச் சிக்கல்களைப் பேசும் படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகள் வேண்டும். ஒரு பீல் குட் படமாக வந்தால் போதும் என்று நினைத்தால் மட்டும் போதாது. ஆனால் சண்டைக்காட்சிகள், ரத்தம், நடனம் என்று வணிக சமரசங்கள் எதையும் செய்து கொள்ளாமல் இது இளைஞர்களுக்கான படம் என்று மட்டுமே நினைத்து இதைச் செய்திருக்கிறார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக இது அமையுமா? பார்க்கலாம்.