
தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்தவர் நடிகர் சிம்பு. தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்ததாக சந்தானத்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும் 2 (இன்னும் பெயர் வைக்கப்படாத) படங்களிலும் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு, மாணவர்களுக்கு ஃபிட்னஸ் தொடர்பான டிப்ஸ்களை அள்ளி வழங்கியுள்ளார். இதைக் கேட்ட மாணவர்கள் பலரும் ஆராவாரம் செய்தனர். சிம்பு மாணவர்களுக்கு அப்படி என்ன அறிவுரை சொன்னார் என்பதை இப்போது பார்ப்போம்.
தனது தந்தை டி.ராஜேந்திரன் உதவியால் சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார் சிம்பு. சிறு வயதிலேயே அடுக்கடுக்கான வசனங்கள், சண்டைக் காட்சிகளில் கலக்கியவர். இளம் வயதில் காதல் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவரது படங்கள் தோல்வியைத் தழுவியதால், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஆனால் இப்படத்தில் சிம்பு கொஞ்சம் குண்டாக இருந்தது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பின் வெளியான சில படங்களில் அதிக உடல் எடையுடனேயே நடித்தார்.
குறிப்பாக 2019 இல் வெளியான ‘வந்தா ராஜாவாதா தான் வருவேன்’ என்று படத்தில், இவரால் ஓட கூட முடியவில்லை என்று வெளிப்படையாகவே விமர்சிக்கப்பட்டார். இதில் மனம் நொந்த சிம்பு, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்தார். 2021 இல் வெளியான ஈஸ்வரன் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் பழைய சிம்புவாக ஃபிட்டான தேகத்துடன் மீண்டு வந்தார்.
சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு, மாணவர்கள் தங்கள் உடலை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த இளம் வயதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பட்டு, மகிழ்ச்சியாக இருக்கலாம். இப்போது எதுவுமே பிரச்சினையாகத் தெரியாது. அதற்காக விரும்பிய அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு விட்டு, உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்காலத்தில் கஷ்டப்படப் போவது நீங்கள் தான். இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட்டு விட்டு உடனே தூங்குவது தவறான பழக்கம். இதை மட்டும் எப்போதும் செய்து விடாதீர்கள். குறைவான உணவை சாப்பிட்டு, கொஞ்சம் பசியோடு தூங்கினாலே போதும்; உடல் எடை சரியான அளவில் இருக்கும். உடல் எடையைப் பராமரிப்பதில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுங்கள்” என சிம்பு கூறினார்.