
எஸ்.டி.ஆர். மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் என்கிற சிம்பு. தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வரும் இவர், இவரது தந்தை மற்றும் பிரபல இயக்குநர் டி. ராஜேந்தர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
2002-ம் ஆண்டு இவரது தந்தை இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். 2003-ல் ஹரி இயக்கத்தில் வெளியான கோவில் மற்றும் 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படங்கள் நடிகர் சிம்புக்கு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமில்லாமல், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அடுத்து இவர் நடித்த குத்து, மன்மதன், சரவணா, மாநாடு, பத்து தலை போன்ற படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் வகையிலேயே அமைந்தது எனலாம்.
பலமுறை காதல் சர்ச்சைகளில் சிக்கிய 42 வயதான சிம்பு இது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரது தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இவர் சொல்லும் கருத்துக்கள் வெளிப்படை தன்மை காரணமாக அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி தலைப்பு செய்தியாவார்.
இன்று நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் மற்றும் வாழ்த்து போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.
நடிகர் சிம்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, நடிகர் சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த சூழலில், சொந்தமாக 'ஆட்மன் சினி ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, 50-வது பட அறிவிப்பை தனது பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படம் 'ஆட்மன் சினி ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் கீழ் சிம்பு தயாரிக்கும் முதல் படமாக அமைந்துள்ளது.
நடிகர் சிம்பு ‘ஆட்மன் சினி ஆர்ட்ஸ்’ தயாரிப்பாளராக புதிய பயணத்தில் அடியெடுத்து வைப்பதாகவும், எனது இந்த புதிய முயற்சிக்காக உற்சாகமாக, எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்வேறு அவதாரங்களை எடுத்த நடிகர் சிம்பு தற்போது அவர் தொடங்கியுள்ள ‘ஆட்மன் சினி ஆர்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகர் சிம்புக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.