
தெலுங்கு சினிமாவில் மூன்றாம் தலைமுறை நாயகனாக இருப்பவர், நாகசைதன்யா. இவர் தெலுங்கு சினிமாவில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் பேரன் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நாகசைதன்யா, 16 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் தான் இவரது திரைப்பட வாழ்க்கை உள்ளது. ஆனால் வருகிற 7-ம் தேதி ரீலிஸ் ஆகவுள்ள ‘தண்டேல்’ திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக மாறும் என்கிறது சினிமா வட்டாரம்.
பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தண்டேல். இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யாவும், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். தமிழ்நாட்டு பெண்ணான சாய் பல்லவிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவரது நடனத்திற்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். நாகசைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் ‘தண்டேல்’ படம்தான், அதிக பொருட்செலவில் அதாவது ரூ.75 கோடியில் தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான கதையை கார்த்திக் தீடா என்பவர் எழுதியிருக்கிறார்.
வழக்கமான மீன்பிடி பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்லும் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒரு மீனவரின் காதல், வீரம் மற்றும் தேசபக்தியை விவரிக்கும் ‘தண்டேல்’ படத்தின் கதைக்களம் உண்மையில் மிகவும் தனித்துவமானது. இப்படம், வரும் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. ‘தண்டேல்’ படம் வெளியாவதற்கு முன்பே CBFC யின் U/A சான்றிதழைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் வெளியீட்டிற்கு பிந்தைய ஸ்ட்ரீமிங் உரிமைகள் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ‘புஜ்ஜி தள்ளி’ என்ற காதல் பாடலும், நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் ஆடும் ‘நமோ நமச்சிவாய’ என்ற பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதில் ‘நமோ நமச்சிவாய’ பாடலில் சாய்பல்லவியும், நாகசைதன்யாவும் போட்டிப் போடு நடனம் ஆடியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் படக்குழுவினருக்கான இந்தப்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் அவர்களது முதல் விமர்சனத்தை தெரிவித்தனர். அதாவது தண்டேல் படத்திற்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பதாகவும், இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அமீர்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த படம் சூப்பர் ஹிட்டாகும். ஏனெனில் படத்தின் கதை மிக அருமை என்று கூறினார்.
தற்போது படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில், தண்டேல் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட pre-release அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அல்லு அர்ஜுனின் பேச்சு ரசிகர்களாலும், அரசியல் வட்டாரங்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தண்டேல் படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘தண்டேல்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாகசைதன்யாவுக்கு அவரது சினிமா வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத வெற்றியை, இந்தப் படம் பதிவு செய்யும் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நாகசைதன்யாவை, ‘தண்டேல்’ திரைப்படம் கரையேற்றுமா? மூழ்கடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.