

ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் முன்பே நல்ல விமர்சனங்களைப் பெறுவது அபூர்வம். ஆனால் அப்படிப் பெறப்படும் படங்கள் நிச்சயம் மனத்துக்கு நெருக்கமான படங்களாகத் தான் இருந்திருக்கின்றன. இவ்வாண்டின் உதாரணங்கள் டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன், ஆண்பாவம் பொல்லாதது போன்றவை. அப்படி நேற்று முழுதும் உச்சரிக்கப்பட்ட பெயர் தான் சிறை.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் அறிமுக நடிகர் எல் கே அக்க்ஷய் குமார், அனிஷ்மா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் சிறை.
படம் ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்தில் கதைக்குள் செல்வதும் இதுபோலத் தான் கதை நகரப்போகிறது என்று நம்மைத் தயார்ப்படுத்துவதும் சபாஷ். முதலில் நடக்கும் அந்தச் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதமும், ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை அனைத்தும் தரம். ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்றத்துக்கு அழைத்துப் போகும் ஆயுதப்படை காவலராக விக்ரம் பிரபு. அவரது கேரியரில் இது மிக முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. முதல் காட்சியே இப்படித் தொடங்குவதால் கதையும் அதை ஒட்டியே பயணிக்கிறது. கதை நடக்கும் காலம் இரண்டாயிரத்து மூன்று.
ஒரு கொலைக் குற்றத்துக்காக வேலூர் சிறையில் இருக்கும் இளைஞர் அப்துல் (அக்க்ஷய்) . அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காகச் சிவகங்கை வரை கூட்டிப் போகும் பொறுப்பு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அவரும் அவருடைய சகாக்கள் இருவரும் பேருந்தில் பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தில் என்ன நடக்கிறது. அப்துல் செய்த குற்றம் என்ன. ஒரு குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல என்னென்ன நடைமுறைகள் எனச் செல்லும் படம் தான் சிறை.
ஏற்கனவே சொன்னது போல முதல் காட்சியிலேயே படத்துடன் ஒன்றி விடுவதால் படம் போகும் போக்கில் நாமும் உடன் செல்லத் தொடங்குகிறோம். ஒரு கட்டத்தில் படம் என்பதையே மறந்து இவர்கள் வாழ்க்கையே முக்கியம் என்றாகிவிடுகிறது. முதலிலிருந்தே தப்பிச் செல்வது போன்ற ஒரு தோற்றத்திலேயே இருக்கிறார் அப்துல். ஒரு கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவு தான் விக்ரம் பிரபுவுக்கு அவர்மேல் உள்ள பார்வையை மாற்றுகிறது.
கிராமத்தில் டிவி டெக் வாடகைக்கு விடும் வேலையைச் செய்து வருகிறார் அப்துல். அதே ஊரைச் சேர்ந்த கயல் என்ற பெண் (அனிஷ்மா) அவரைக் காதலிக்கிறார். அவருடைய குடும்பத்துக்கும் அப்துல் குடும்பத்துக்கும் ஒரு தகராறு வருகிறது. பிறகு என்ன ஆனது என்பது இவர்கள் தரப்பு கதை.
இந்த ஜோடிகளின் காதல் கதை முன்னும் பின்னும் காட்டப்படுகிறது. அதில் இல்லாத ஒரு நெகிழ்ச்சி அவர்கள் ஒரு முறை நிகழ்காலத்தில் நேரில் சந்திக்கும்போது வந்து விடுகிறது, அந்த நிமிடத்திலிருந்து இந்த ஜோடி சேர வேண்டுமே என்ற தவிப்பும், அப்துலுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பும் தான் பார்ப்பவர்களுக்கு.
அதுவும் கடைசி அரை மணி நேரம் பரபரப்பில் உச்சம். பரிதாபம், கோபம், ஆத்திரம், சோகம் எல்லாம் கலந்து ஒரு கட்டத்தில் முடியும்போது கண்கலங்க வைத்து விடுகிறார்கள். சற்று எதிர்பார்த்தாலும் அந்த மாதிரி ஆகிவிடக் கூடாதே என்று இலேசாக ஏங்கும் நேரம் அதே போல முடிவது ஐயோ என்று சொல்ல வைத்து விடுகிறது. இரண்டு விதமான முடிவுகள் இந்தப் படத்துக்குச் சரி என்றே இருந்தாலும் அதை இயக்குநர் கையாண்ட விதத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்கு அரங்கில் ஒலித்த விசில் சத்தம் தான் சாட்சி.
காவல்துறை நடைமுறைகள் என்னென்ன. காவலர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல. நீதிபதிகளும் அப்படித் தான். சட்டம் என்றுமே எளியவர்களுக்குச் சற்று எதிராகத் தான் செயல்படுகிறது. நமக்கென்று ஓர் அதிகாரம் உண்டு. அதை யாரிடம் எப்பொழுது பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நம் முடிவும் பாதிக்கப்பட்டவர்களின் முடிவும் இருக்கிறது. இதையெல்லாம் ஒரு இரண்டு மணி நேரப்படத்தில் கடத்த முடியும் என்று சொல்லி அடித்திருக்கிறது எந்த அணி.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசைக்கு ஒரு ஸ்பெஷல் கைதட்டு. பின்னியிருக்கிறார் மனிதர். பிலோமின் ராஜ் எடிட்டிங்கும், மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் சிறப்பு.
ஒரு மனிதன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார். மூணாறு ரமேஷ் கதையின் முக்கியமான ஒரு கட்டத்தில் வருகிறார். அந்த ஒரு காட்சி தான் படத்தின் முக்கியமான ஹைலைட். அனாயாசமாக நடித்துக் கைதட்டல் வாங்கிவிடுகிறார் மனிதர். சற்றும் பொறுப்பில்லாத கோபக்கார காவலராக வரும் நபர் கடுப்பை ஏற்றுகிறார். ஒரு கட்டத்தில் இவரை ஓங்கி அறையலாமா என்று பார்ப்பவர்களுக்கே தோன்றுவது அந்தப் பாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றி.
ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய மகனை அறிமுகப் படுத்தும் படத்தில் நடிக்க யாரும் பொதுவாகத் தயங்குவார்கள். கதாநாயகன் என்று சொல்ல முடியாத ஒரு பாத்திரம். அதில் நடித்துப் படத்தைத் தாங்குகிறார் விக்ரம் பிரபு. நல்ல கதைத் தேர்வுகள் இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு ரவுண்ட் வருவார். அனிஷ்மா கலையாக ஒரு தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார், முக்கியமான கடைசிக் காட்சியில் அசத்தி விடுகிறார்.
சில குறைகளும் இல்லாமல் இல்லை. கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் நடக்கும் ஒரு சம்பவம் அரைகுறையாக விடப்பட்டது போல் ஒரு தோற்றம் தருவது, ஒரு கொலை நடந்த பிறகு கொலையுண்ட நபர்களின் குடும்பங்கள் அதைப் பற்றிய எந்த விதமான அக்கறையும் இல்லாதது போல நடந்து கொள்வது. போன்றவை. அறிமுக நடிகரான அக்க்ஷய் பல காட்சிகளில் யதார்த்தமாக இருந்தாலும் எமோஷனல் காட்சிகளில் நடிக்கச் சற்று சிரமப்படுகிறார். முதல் படம் தானே. சரியாகிவிடுவாரென நம்புவோம்.
கதாசிரியர் தமிழ், திரைக்கதையிலும் பங்கேற்றிருக்கிறார். அவர் முன்னாள் காவலர் என்பதால் காட்சிகளில் ஒரு நம்பகத் தன்மை இழையோடுகிறது.
வருடக் கடைசியில் ஒரு தரமான படத்தோடு ஆண்டை முடித்து வைத்த விதத்தில் இந்த வருடத்தின் டாப் டென் பட வரிசையில் கட்டாயம் ஓர் இடத்தைப் பிடிக்கத் தகுதியான படம் தான் சிறை.