
சிவாஜி, சரோஜாதேவி நடித்து 1964ல் வெளிவந்து மாபெரும் வெற்றி தந்த புதிய பறவை படத்தில் சிவாஜியை காதல் பொங்க "கோப்.. பால்" என்று கொஞ்சும் குரலில் அழைத்து தனது ரசிகர்களை கட்டிப்போட்ட சரோஜாதேவியின் தனித்துவமான அந்தக் குரலை மறக்க முடியுமா? இனி கேட்கத் தான் முடியுமா?
ஆம்.. 1960களில் துவங்கி இன்றுவரை தமிழ்த் திரையுலகில் கொண்டாடப்பட்டு, உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று தான் சரோஜாதேவி. தனது துறுதுறுப்பான நடிப்பினாலும் துள்ளலான இளமையினாலும் கொஞ்சும் குரல் இனிமையினாலும் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சரோஜாதேவி.
1938-ல் கர்நாடக மாநிலத்தில் பிறந்த சரோஜாதேவி தனது 17 வயதில் (1955) மகாகவி காளிதாசன் எனும் கன்னட படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தனது அழகான முகபாவங்களாலும் நளினமான நடிப்பினாலும் வெகுவிரைவில் பிரபலமான நடிகை ஆனவர். இவருக்கு பரதநாட்டியத்திலும் நாடகத்திலும் அனுபவமே இல்லை என்பதுதான் ஹைலைட்.
வெளிப்படையாக கவர்ச்சி காட்டாமலேயே தனது சிகை அலங்காரம், ஒப்பனை போன்ற புதுமைகளின் மூலம் கவர்ச்சி கன்னியாக கன்னடத்துப் பைங்கிளி, அபிநயசரஸ்வதி என ரசிகர்களால் அன்புப் பட்டம் பெற்று அதை இறுதி வரை தக்கவைத்துக் கொண்டவர் இவராகத்தான் இருக்கும்.
தமிழில் எம்.ஜி. ஆருடன் இவர் நடித்து 1958-ம் ஆண்டு வெளியான 'நாடோடி மன்னன்' இவரை திரையுலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அன்பே வா, எங்கள் வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட 26 படங்களில் எம்ஜிஆருக்குத் தகுந்த ஜோடியாக நடித்து அத்தனையும் வெற்றிப்படங்களாகியது இவரின் சாதனை எனலாம். 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடல் காட்சியில் எம்ஜிஆருடன் இவர் நடித்த காட்சிகள் அழகியலின் சிகரம்.
1959-ல் ஜெமினி கணேசனுடன் இவர் இணைந்து நடித்த 'கல்யாணப்பரிசு' மாபெரும் வெற்றி பெற்றது. இன்னிசைக்குயில் பாடகி சுசீலாவின் குரல் இவருக்கு அத்தனை பொருத்தமாக அமைந்ததால் இருவரும் இணைந்த அத்தனைப் பாடல்களும் செம ஹிட் தந்தது. கல்யாணப் பரிசில் வந்த 'உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ வாட' பாடல் அதில் ஒரு இசைத்துளி.
'சிட்டுக்குருவி முத்தம் தந்து சேர்ந்திடக் கண்டேனே'..
'காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா..
'அன்றொருநாள் அவனுடைய பெயரைக் கேட்டேன்..',
'குருவிக்கூட்டம் போல நமக்கு பூவம்மா'..
'காட்டுராணிக் கோட்டையில் கதவுகள் இல்லை’,
உள்ளிட்ட பல பழைய கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் வந்த இவரின் சோலோ பாடல்களில் இன்றும் ரசிக்க ஏற்றவையாக இருக்கிறது இவரது நடிப்பு.
1967-ம் ஆண்டு நடிப்பின் உச்சத்தில் இருந்த போதே ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்த பிறகும் சரோஜாதேவி தொடர்ந்து நடித்து வந்தது சிறப்பு. தமிழ், கன்னடம் , தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் நடித்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்கபூர், ஷம்மி கபூர் உள்ளிட்ட பிரபல இந்தி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி. அந்நாளில் இந்தியில் நடித்த தென்னிந்திய நடிகைகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரோஜாதேவி பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவர். இத்துடன் பல்வேறு பாராட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டு சூர்யா, நயன்தாரா நடித்த ‘ஆதவன்’ திரைப்படமே சரோஜாதேவி கடைசியாக நடித்த தமிழ் படமானது.
சரோஜா தேவி, தமிழுக்கு வந்த புதிதில் தமிழில் சரியாக பேச தெரியாமல் இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கவியரசர் கண்ணதாசன் பனித்திரை எனும் படத்தில் வரும் "ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே’’ என்ற பிரபலமான பாடல் நடுவில் “மழலை போல பேசி பேசி மயங்க வைத்தாயே... நான் மயங்கியபோது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே...’’ என்ற வரிகளைப் போட்டு தமிழில் சரியாக பேச தெரியாத சரோஜா தேவியை குறிப்பிட்ட செய்தி சுவாரஸ்யம். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
1986-ம் ஆண்டு, திடீரென ஏற்பட்ட இதய நோயால் ஸ்ரீஹர்ஷா உயிரிழந்த வேதனை, கணவர் மீது அன்பு கொண்ட சரோஜா தேவியை மிகவும் பாதித்தது எனலாம். இவர் மகள் இந்திரா காந்தி
மற்றும் மகன் கெளதம் ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் நினைவாக பெயரிடப்பட்டது) ஆகியோர் அரவணைப்பில் இருந்தார். பெரும் இடைவெளி எடுத்து 1990-களுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், சூர்யா போன்ற குறிப்பிட்ட ஹீரோக்கள் படத்தில் மட்டுமே நடித்தார்.
இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனின் இசையில் அமைந்த பல பாடல்களில் நடித்த பெருமை பெற்ற சரோஜாதேவி மறைந்த இந்த ஜூலை 14 தான், எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் மறைந்த தினமும் (2025-ம் ஆண்டு ) என்பதால் இந்த நாள் தமிழ்த் திரையுலகில் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது.
ஆனால் இருவரின் புகழுமே என்றென்றும் அவர்கள் தந்த கலைகள் (நடிப்பு, இசை) மூலம் நம் நினைவில் நீங்காத இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக ரசிகர் மனம் கவர்ந்த அழகான நடிகையாக மட்டுமின்றி அன்பான மனைவியாக, பொறுப்புள்ள தாயாக என பல பரிமாணங்களில் திகழ்ந்த சரோஜா தேவி, திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பொது மற்றும் குடும்ப வாழ்விலும் ராணியாக நமது மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.