
நம்மில் பலருக்கும் என்றும் இளமையாக வாழவே ஆசையிருக்கும். இளமையும், முதுமையும் இயற்கையின் நியதி என்றாலும், உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் நம்மால் நிச்சயமாக முதுமையைத் தள்ளிப் போட முடியும். ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் உணவுக் கட்டுப்பாடு என்பதே இல்லை. இருப்பினும் இளமையாகவும், நோயின்றி வாழவும் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் சில அறிவுரைகளை சமீபத்தில் வழங்கியுள்ளார்.
பஞ்சாபில் பிறந்த நடிகர் சோனு சூட் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்தியில் வெளிவந்த தபாங் மற்றும் தமிழில் வெளிவந்த அருந்ததி ஆகிய திரைப்படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. சினிமாவில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக பல பேருக்கு உதவி செய்துள்ளார் சோனு சூட். முக்கியமாக கொரோனா காலத்தில் இவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள் ஏராளம்.
நடிகர் சோனு சூட் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். இவர் சில ஹீரோக்களைப் போல் சிக்ஸ் பேக்ஸையும் வைத்திருக்கிறார். பொறியியல் பட்டதாரியான சோனு சூட், மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் சில காலத்திற்கு மாடலிங் செய்து வந்தார். அதன் பிறகு பல சவால்களைக் கடந்து 1999 ஆம் ஆண்டு வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நெஞ்சினிலே, மஜ்னு, ராஜா, ஒஸ்தி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
மாடல், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட சோனு சூட் 50 வயதைக் கடந்தும் இன்னுமும் இளமையாகவே காட்சியளிக்கிறார். இதற்கு முக்கிய காரணமே உணவில் இவர் எடுத்துக் கொண்ட சுயக் கட்டுப்பாடு தான். வயதிற்கேற்ப எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ற உணவு முறையைப் பின்பற்றி வருகிறார். குறிப்பாக இவர் தற்போது அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.
உணவுப்பழக்கம் குறித்தும், இளமையாக இருப்பது எப்படி என்பது குறித்தும் சமீபத்தில் மனம் திறந்தார் சோனு சூட். “50 வயதைக் கடந்ததும் நான் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறேன். அசைவ உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். உணவில் மட்டுமல்ல மனதளவிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். அதனால் தான் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான கலோரிக்கு மட்டும் சாப்பிடுகிறேன். சிறிதளவு உணவை அதிகமாக சாப்பிட்டாலும் கூட, உடற்பயிற்சி செய்து அதனை ஈடு செய்வேன். மகிழ்ச்சியான மனநிலை, ஆரோக்கியமான உணவு மற்றும் நிம்மதியாக தூக்கம் ஆகிய மூன்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால், என்றும் இளமையாகவே இருக்கலாம்” என அவர் கூறினார்.
பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு, தாம் அதை பின்பற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் சோனு சூட். உலகில் வாழ்கின்ற மிகப்பெரிய உயிரினங்கள் பலவும் சைவ உணவை உண்பவை தான். சைவ உணவுகளை சாப்பிடுவதால் 90% ஃபுட் பாய்சன் உண்டாகும் வாய்ப்புகள் குறைவு என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உடலையும், மனதையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் எதுவும் சாத்தியமே.