நடிகர் விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19-ம் தேதி சென்னையில் இரங்கல் நிகழ்ச்சி நடத்த இருப்பதாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவருமான விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதி நிகழ்ச்சிக்கு கூடிய கூட்டம் நடிகர் விஜயகாந்த் மீது தமிழக மக்கள் செலுத்திய அன்பை காட்டியது. மேலும் திரை உலகினர், அரசியல் பிரபலங்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவின் பொழுது வெளிநாட்டில் இருந்த நடிகர் கார்த்தி, தமிழ்நாடு திரும்பியவுடன் கோயம்பேட்டில் அமைந்துள்ள நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி கூறியது, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு.
நடிகர் விஜயகாந்தின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது எனது வாழ்நாள் முழுவதும் மிகப் பெரிய குறையாகவே இருக்கும். அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, அதே சமயம் என்னுடைய சிறுவயதில் அவர் வீட்டிற்கு அருகே எப்பொழுதும் சாப்பாடு வழங்கப்பட்டு கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன்.
படத்தில் நடிக்கத் தொடங்கி, நடிகர் சங்கத்திற்கு வந்து வெற்றி பெற்று அவரை சென்று பார்த்த பொழுது சந்தோசத்துடன் அவர் எங்களுடன் பேசியது என்றும் நினைவில் இருக்கிறது. நடிகர் சங்கத்திற்கு பெரிய சவால்கள் வரும் பொழுதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும், எவ்வாறு முன்னணியில் இருந்து வேலை செய்ய வேண்டும். என்பதற்கு எல்லாம் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான் எங்களுக்கு பாடமாக இருக்கிறார். மிகப்பெரிய ஆளுமையை தமிழ்நாடும், திரை துறையினரும், அவரது கட்சியினரும் இழந்திருக்கின்றனர்.
ஜனவரி 19ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடிகர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட இருக்கிறது. இதில் நடிகர் சங்கம் விஜயகாந்தின் நினைவாக எவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுக்க போகிறது என்பதை அறிவிப்போம். மேலும் அரசிடம் சில கோரிக்கையையும் வைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.