
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. ஹீரோவாக இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், அதுவும் காமெடி தொடர்பான படங்கள் தான். சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் ஹீரோவாக நடிக்கச் சென்றதும், காமெடி நடிகருக்கான இடத்தைக் கச்சிதமாக நிரப்பினார் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது திரைத்துறையில் இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குநர் ராம் பாலா தான். யோகி பாபுவின் தந்தை இராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். தந்தையைப் போலவே தானும் இராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்பதே இவருடைய ஆசையாக இருந்தது. பிறகு எப்படி நடிகரானார் என்பது மிகப்பெரிய வெற்றிக் கதை.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சியான ‘லெள்ளு சபா’ 2004 முதல் 2007 வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சந்தானம், மதுமிதா, ஜீவா, மனோகர், சுவாமிநாதன் போன்ற பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு வந்தனர். இதே லொள்ளு சபா தான் யோகி பாபுவையும் திரைத்துறைக்கு அடையாளம் காட்டியது.
தனது நண்பருடன் லொள்ளு சபா ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்ற யோகி பாபுவை, இயக்குநர் ராம் பாலா தான் நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார். காமெடி காட்சிகளில் பிரம்மாதமாக நடித்த யோகி பாபு லொள்ளு சபாவில் தொடர்ந்து நடித்தார். நடித்தது மட்டுமின்றி வசனங்களையும் எழுதிக் கொடுத்து எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்தார். நடிக்கத் தொடங்கிய பின் இராணுவத்திற்கு செல்ல முடியாத சூழல் உருவானது. பிறகு சிறிது மாதங்களில் லொள்ளு சபா நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டதால், எந்தப் பக்கம் செல்வது என வழிதெரியாமல் நின்றார் யோகி பாபு.
இனிமேல் நமக்கு சினிமா தான் எல்லாமே என முடிவெடுத்து, கோடம்பாக்கத்தில் ஒரு தெரு விடாமல் வாய்ப்பு கேட்டு அலைந்தார். உருவ கேலிக்கு உள்ளான யோகி பாபு, எதையும் கண்டு கொள்ளாமல் தனது முயற்சியில் மட்டும் தீவிரமாக இருந்தார். அதன் பலனாக அமீர் நடிப்பில் உருவான யோகி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அன்று வரை வெறும் பாபுவாக இருந்தவர், அப்படம் வெளியான பிறகு யோகி பாபுவாக உருவெடுத்தார்.
தொடக்கத்தில் சில எதிர்மறை வேடங்களில் நடித்து வந்த யோகி பாபுவுக்கு, காமெடி காட்சிகள் தான் தனக்கு சரியாக இருக்கும் என காமெடி டிராக்கிற்கு மாறினார். அந்நேரம் பார்த்து சந்தானம் மற்றும் சூரி கதாநாயகர்களாக உருவெடுக்கவே, அவர்களின் இடத்தை கச்சிதமாக நிரப்பி அசத்தினார் யோகி பாபு. ஒருகட்டத்தில் பல இயக்குநர்கள் யோகி பாபுவின் கால்ஷீட்டிற்காக காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்து விட்டார் யோகி பாபு.
தொடக்க காலத்தில் உருவ கேலிக்கு ஆளான யோகி பாபு, இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருகிறார். இதுதவிர்த்து போட், மண்டேலா மற்றும் லக்கிமேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். கதைகள் மற்றும் வசனங்களை எழுதுவதில் ஆர்வம் கொண்ட யோகி பாபுவுக்கு இயக்குநராகும் ஆசை மட்டும் இல்லையாம். தனக்கு ஏற்பட்ட அவமானங்களை வெற்றிக்கான படிகட்டுகளாக பயன்படுத்தி முன்னேறி வந்திருக்கிறார் யோகி பாபு.