

சில வாரங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள், முதல்வர் விஜய்யை குறிவைத்து கூறப்பட்டதாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கூறிய கருத்துக்கள் விஜய் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய முதல் நாள் தான் தமிழக அரசை சாடி நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்தி கருத்து தெரிவித்திருந்தார். சகோதரர்களின் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக சூட்டை கிளப்பியுள்ளன.
நீண்ட காலத்திற்குப் பிறகு கருப்பு திரைப்படத்தின் மூலமாக சூர்யா மீண்டும் ஹிட் கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் அவர் நடித்திருந்த விஸ்வநாத்& சன்ஸ் திரைப்படமும் ₹200 கோடி பாக்ஸ் ஆபிஸை கடந்ததன் மகிழ்ச்சியில், அவரது திருமண நாளை மிகவும் பிரம்மாண்டமான முறையில், ஸ்காட்லாந்து கோட்டையில் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
தற்போது மீண்டும் மார்க்கெட்டை பிடித்துள்ள நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்து உற்சாகமாக உரையாடியுள்ளார். அந்த சந்திப்பின்போது , "அன்பை மட்டுமே விதைப்போம், சோசியல் மீடியாவில் ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக , நாமளும் அதற்கு பதில் பேச ஆரம்பிக்கும் போது தான், நாமளும் ஹர்ட் ஆகிடுவோம். நாம நாமளாவே இருப்போம் , அவங்க அவங்களாவே இருக்கட்டும்.
நாம எதுவும் பேசத் தேவையில்லை, அவங்களுக்கு புரிய வைக்கணும், மாத்தணும்னு முயற்சி பண்ணா ரொம்ப கஷ்டம். சில பேருக்கு புரியும் நிறைய பேருக்கு அது புரியாது. அவர்களுடன் பேசினால் உங்க எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும். உங்களுக்கு பிடிச்சதை சின்சியரா தினம் தினம் செய்யுங்க. நிச்சயமா வெற்றி கிடைக்கும்,"என்று சூர்யா பேசியுள்ளார்.
சூர்யாவின் இந்த பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளன. சூர்யா முட்டாள் என்று யாரை குறிப்பிட்டார்? என்று சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில்,மிக சமீப காலத்திற்கு முன் சிவகார்த்திகேயன், சூர்யாவின் சகோதரர் கார்த்தி நடித்த 'சர்தார் -2' திரைப்படத்திற்கும், சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' திரைப்படத்திற்கும் வாழ்த்து கூறிய விதத்தினை ஒப்பிட்டு சூர்யாவை விமர்சித்திருந்தனர்.
அதற்கு முன்னர் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தை வைத்து மேல்நாட்டு கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்கு திணிப்பதாக கூறி, ஒரு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இந்த பிரச்சனைகளை விட 'ஜெய் பீம்' திரைப்படம் வெளியான போது , சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர், அந்த திரைப்படம் தங்களை தவறாக சித்தரித்தாக கடுமையாக விமர்சித்திருந்தனர்.
சூர்யாவின் பேச்சுகள் தனது முந்தைய திரைப்படங்களில் விமர்சனங்களை பற்றியதா? அல்லது தவெகவை மறைமுகமாக தாக்குகிறதா? என்னும் விவாதம் நடைபெற்று வருகிறது.
விஜய் அரசியலுக்கு வரும் முன்னர், 'சிங்கம்-3' திரைப்படத்திற்கு முன்பான காலகட்டத்தில், விஜய் ரசிகர்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூக வலைதளங்களில் மோதல் நிலவி வந்தது.சூர்யாவின் சகோதரர் கார்த்தி, தமிழக அரசு காவல்துறையினருக்கு அளிக்கப்படும் விடுப்பு காகித நடைமுறையில் தான் உள்ளது, அது நேரடி நடைமுறைக்கு வரவில்லை என்று விமர்சித்ததால், சூரியாவின் பேச்சும் சர்ச்சை ஆகியுள்ளது.