

‘சிதாரா என்டர்டைன்மெண்ட் பார்ச்சூன் போர்' சார்பில் சூர்யா ஹீரோவாக நடித்து வெளிவர உள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் மமிதாபைஜு, ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று முன்தினம் கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
சூர்யாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பது படத்தின் இசை வெளியீட்டை இந்த நகரில் நடத்த மிக முக்கிய காரணம். சூர்யா இந்த நிகழ்வின் மேடையில் பேசிய சில விஷயங்கள் பார்வையாளர்களை ஆச்சரியபடுத்தி உள்ளது. அப்படி என்னதான் பேசினார் சூர்யா? பார்ப்போம்.
"நான் கோயமுத்தூர் ஏர்போர்ட்டுக்கு வந்து இறங்கியவுடன் என் நினைவுகள் 30 அல்லது 40 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டன. நான் பன்னிரண்டாவது படித்து முடிக்கும் வரை ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் கோயம்புத்தூரில் இருக்கும் என் கிராமத்திற்கு வந்து விடுவேன். கோவை ரயில் நிலையத்தில் இறங்கி சூலூர்- புளியம்பட்டி வழியாக செல்வேன். காரில் செல்லும் போது நேராக என் ஊருக்கு சென்று விட மாட்டேன்.
வழியில் கிணறு இருந்தால் அங்கே குதித்து நீராடி விளையாடுவேன். அங்கே ஏரிகள் இருந்தாலும் அதிலும் குளிப்பேன். இதையெல்லாம் விட, ஊருக்கு செல்லும் வழியில் நான் ஆடு மாடுகளை கூட மேய்த்து இருக்கிறேன். இப்போது கோவைக்கு வரும்போது இந்த நினைவுகள் என்னை சுற்றி சுற்றி வருகின்றன. கடந்த ஆண்டு என் மகள் தியா மற்றும் மகன் தேவ்வை அழைத்துகொண்டு எங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தேன். செல்லும் வழியில் என் இளம் வயது அனுபவங்களை என் மகன் மகளிடம் பகிர்ந்துக்கொண்டேன்.
அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். டிஜிட்டல் உலகத்தை தாண்டி வெளி உலகம் பெரிது என்று என் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது இதுபோன்ற இடங்களுக்கு நான் அழைத்து வருகிறேன். நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான் எப்போதும் செல்போன் மட்டும்தான் உலகம் என்று நினைக்காதீர்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. நமது ஊரை சுற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இங்கே குடும்பத்தாருடன் செல்லுங்கள். இந்த நினைவுகள் அளிக்க முடியாத சொத்துக்கள். இந்த சொத்துக்களை நீங்கள் சேமியுங்கள். நான் பள்ளிப்பருவத்தில் என் ஊருக்கு செல்லும் வழியில் பார்த்த பல விஷயங்கள் இன்று மாறிவிட்டன. இது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்," என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் சூர்யா. இவர் பேசியது விழாவில் நடந்த கல்லூரி மாணவர்கள் மாணவ மாணவியர்களின் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தை பற்றி குறிப்பிடும் போது
"அட்லூரி தெலுங்கராக இருந்தாலும் அவர் இயக்கியுள்ள இந்த படம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் படமாக விஸ்வநாதன் சன்ஸ் வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான இயக்குனர்கள் எங்களைப் போன்ற நடிகர்களை உருவாக்குகிறார்கள். இப்போது இந்த வரிசையில் வெங்கி அட்லூரி சேர்ந்துள்ளார்.
படத்தில் உங்கள் அனைவருக்கும் பிடித்த க்யூட் கேர்ள் மமிதாபைஜு இருக்கிறார். ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்று தான் அனைவரும் பேசுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் மமிதாபைஜு - ராதிகா மேடம் அவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுடன் எனக்கு இது மூன்றாவது படம். ஜிவி பிரகாஷ் மீசை அரும்பாத நாளிலேயே எனக்கு அறிமுகமானவர்.
நான் சிறுவயதில் பார்த்த அதே தேடல் உற்சாகம் ஜீவி இடம் இருக்கிறது. அதனால் தான் நான் ஒரு இசையமைப்பாளர் என்பதையும் மறந்து மேடையில் பாடி ஆடி இந்த நிகழ்ச்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். கருப்பு படத்திற்கு நீங்கள் தந்த வரவேற்பு என்னை நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று உணர்த்தி இருக்கிறது. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் கதை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சூர்யா.
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் மூலம் சூர்யாவின் அரிய நினைவுகளை அறிந்துகொள்வதோடு, உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு புதிய திரைப்படத்தின் சிறப்பம்சங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.