விமர்சனம்: சரண்டர் - போலீஸ்னா மாஸ் இல்ல, யதார்த்தம்!
ரேட்டிங்(3.5 / 5)
ஒவ்வொரு கால கட்டத்திலும் நடிப்பாளுமை மிக்க நடிகர்களை தென்னிந்திய சினிமா தந்து கொண்டிருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் பல கதாபாத்திரங்களை ஏற்று மிக சிறப்பாக தன் பங்களிப்பை தரும் ஒரு சில நடிகர்களில் முதன்மையானவர் லால். இந்த வாரம் வெளியாகி உள்ள சரண்டர் படத்தில் ஏட்டு பெரியசாமி கேரக்டரில் லால் நடிப்பு மிக பிரமாதமாக உள்ளது. வில்லன்களால் ஆடை களையப்பட்டு, நிற்கும் போது உடன் உள்ள சக போலீஸ்காரர்கள் இதை தடுக்கவில்லையே என்ற ஆதாங்கத்தை கண்களில் காட்டும் போது லால் நடிப்பில் 'ஹேட்ஸ் ஆப்' சொல்ல வைக்கிறார். இந்த படத்தின் கதை ஹீரோ தர்ஷனை சுற்றி நகரவில்லை. பெரிய சாமியாக நடிக்கும் லாலை சுற்றி நகர்கிறது.
கதை என்ன?
சென்னை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம். அங்கே இன்னும் ஓய்வு பெற ஆறு மாதங்களே உள்ள நிலையில் ஏட்டு பெரியசாமி (லால்) பணியாற்றி வருகிறார். தேர்தல் நெருங்குவதால், வி.ஐ.பிகள் தங்களிடம் உள்ள கை துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க சொல்கிறது அரசு. நடிகர் மன்சூர் அலிகான் (படத்திலும் நடிகராகவே நடித்து ள்ளார்) காவல் நிலையத்திற்கு வந்து பெரியசாமியின் பொறுப்பில் ஒப்படைத்து விடுகிறார்.
மறுநாள் துப்பாக்கி காணாமல் போய் விடுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த காவல் நிலையமும் தவிக்கிறது. புது ட்ரெயினியாக வந்திருக்கும் புகழ் ('பிக் பாஸ்' தர்ஷன்) தான் எப்படியும் தொலைந்து போன ரிவால்வரை கண்டுபிடித்து தருவதாக பெரியசாமியிடம் வாக்கு தருகிறார். அன்று இரவு பெரிய தாதா கனகுவின் தம்பி குடிபோதையில் பெரியசாமியிடம் வம்பு செய்கிறார். இந்த பிரச்சனைக்கு பிறகு தாதாவின் தம்பியை யாரோ கொடூரமாக தாக்கி விடுகிறார்கள். தன் தம்பியை தாக்கியது பெரியசாமி தான் என்று எண்ணும் தாதா கனகு, பெரியசாமியை பழி வாங்க நினைக்கிறார். மீண்டும் துப்பாக்கி கிடைத்தா? தாதாவின் பிரச்சனை தீர்ந்ததா? என்று சொல்கிறது சரண்டர்.
மிக பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் படத்தை தந்துள்ளார் டைரக்டர் கௌதமன் கணபதி. துப்பாக்கி காணாமல் போகும் காட்சியில் தொடங்கும் சஸ்பென்ஸ் படம் முடியும் வரை நீடிக்கிறது. எங்கேயும் ஒரு சிறு பிசிறு கூட திரைக்கதையில் இல்லை. படம் நகரும் வேகத்திற்கு ஒளிப் பதிவும், படதொகுப்பும் கை கொடுத்துள்ளன.
தர்ஷன் ஒரு போலீஸ் பணிக்கு புதிதாக சேர்ந்த ஒருவர் எப்படி நடந்து கொள்வாரோ அதை அப்படியே தனது உடல் மொழியில் கொண்டு வந்து விட்டார். போலீஸ் ஸ்டேஷனில் இருப்பவர்கள் குறிப்பாக இன்ஸ்பெக்டராக வரும் அருள் கனிவும், நல்ல நடிப்பை தந்துள்ளார்.
மிரட்டல், மிரட்டல், மிரட்டல்... செம மிரட்டலான நடிப்பை தந்துள்ளார் வில்லன் சுஜித் ஷங்கர். இனி நிறைய வாய்ப்புகள் இவருக்கு வரலாம். சரண்டர் படம் மற்ற போலீஸ் படங்களை போல் போலீஸ் என்றால் மாஸ் என்று காட்டாமல் போலீஸ் சிஸ்டத்தின் யதார்த்ததை சரியாக புரிய வைத்துள்ளது.
காவல் நிலையத்தில் உள்ள பதவியின் படி நிலைகளும், காவலர்கள் நடத்தபடும் விதத்தையும் சரியாக பதிவு செய்துள்ளது இப்படம். சரண் டர் - ஆக்ஷன், திரில்லர், நடிப்பு என அனைத்தும் கலந்து வந்துள்ள ஒரு திரை விருந்து.