சூர்யாவின் சர்ப்ரைஸ் கிஃப்ட் : சாய் அபியங்கருக்கு மஹிந்திரா கார்... ஆர்ஜே. பாலாஜிக்கு என்னவாக இருக்கும்?

Karuppu film success
Surya gifting carsX
Updated on

சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின்னர், பல வருடங்கள் கழித்து நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி முதல்முறையாக சூர்யாவை வைத்து காந்தாரா பாணியில் ஆன்மிக அம்சமும், வழக்கமான மசாலா கதையையும், இணைந்து கருப்பு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷாவும் , மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு , நட்டி சுப்ரமணியம் , சிவதா , இந்திரன்ஸ் , சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கருப்பு திரைப்படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ் ரிவியூக்களை பெற்று நல்ல வசூலைக் குவித்து வருகிறது. சூர்யா தனது திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொட்டது, இந்த திரைப்படத்தில் தான். சூர்யா பெரிதும் எதிர்பார்த்த சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த 'கங்குவா' திரைப்படம் , அவர் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. அடுத்து வந்த 'ரெட்ரோ' திரைப்படமும் சூர்யாவை அதிக சோதனை செய்துவிட்டது. இதனால் , சூர்யா பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை பிடிக்க பெரிதும் பாடுபட்டார்.

சூர்யாவின் தொடர் முயற்சிகளுக்கு பலனாக கருப்பு திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சூர்யாவின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியை தொட்ட திரைப்படமாகவும் மாறியுள்ளது. இதனால் , சூர்யா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் கருப்பு திரைப்படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தனது அன்பளிப்பை வழங்கி வருகிறார்.

முதலில் கருப்பு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரரான ஜிகே.விஷ்ணுவிற்கு மகேந்திரா நிறுவனத்தின் பேட்மேன் காரை பரிசாக வழங்கியுள்ளார். ஜிகே.விஷ்ணு இயக்குனர் அட்லியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அவரது பல திரைப்படங்களில் விஷ்ணு பணியாற்றி உள்ளார்.மெர்சல் ,பிகில், ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கும் 'ராக்கா' திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார். தனது X பக்கத்தில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ள ஜிகே விஷ்ணு " இது கடவுளின் செயல் , நன்றி சூர்யா சார், உங்களுக்கு பெரிய மனது" என்று பதிவிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளரை தொடர்ந்து கருப்பு திரைப்படத்தின் இசையமைப்பாளரான சாய் அபியங்கருக்கும் , மகேந்திரா பேட்மேன் காரை சூர்யா பரிசளித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாய் அபியங்கர். அவரது முதல் திரைப்படத்திலேயே பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அவரது இரண்டாவது திரைப்படமான கருப்பு திரைப்படமும் பாடல்கள் ஹிட்டானதால், படத்தின் வெற்றிக்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்.

சூர்யா கொடுத்த அன்பளிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது X பக்கத்தில் சாய் அபியங்கர் "லவ் யூ சூர்யா சார் , ராஜ்சேகர் பாண்டியன் , பிரபு SR " ஆகியோருக்கு தனது அன்பினை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது சூர்யா படத்தில் பணிபுரிந்த இரு முக்கிய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை வழங்கிவிட்டார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குனர் RJ பாலாஜிக்கு என்ன காரை பரிசளிப்பார்? என்று சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து வருகிறது. நிச்சயம் சூர்யா பெரிய பரிசை RJ. பாலாஜிக்கு அளிப்பார் என்று பேசப்பட்டு வருகிறது

logo
Kalki Online
kalkionline.com