நடிகர் விஜய் அரசியலில் வந்த பிறகு மாணவர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதால் கவனம் பெற்றுள்ளது.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு முழுவதுமாக அரசியலில் குதித்துள்ளார். தற்போது நடித்து வரும் GOAT படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். மேலும் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்தும், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இவரின் அரசியலின் நகர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் மக்களுக்கு விஜய் விளக்கொளியாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இவரின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்காக கையிலெடுத்த ஆயுதம் தான் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் சந்திப்பு. கடந்த முறை நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில், நிறைய அரசியல் வசனங்கள் பேசி அலறவிட்டார். 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களையும் சந்திப்பதால் அரசியலில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறாது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிந்த நிலையில், விஜய்யின் மாணவர்கள் சந்திப்பு தேதியை தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் பாராட்ட உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக வரும் 28ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது என்றும், இதில் அரியலூர். கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல். நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், ஊக்கத் தொகையையும் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார் என்றும் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.