
தெலுங்குத் திரை உலகின் பிரபல நடிகரும், கோடான கோடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட சூப்பர் ஸ்டாருமான மகேஷ் பாபு, யாரும் அறியாத அவரது தொண்டு பணிகளால் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னனி நடிகர், தயாரிப்பாளர், அதிக சம்பளம் வாங்கும் இந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். இவர் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.
தனது நான்கு வயதில் 1979-ம் ஆண்டு நீடா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேஷ் பாபு, 1999-ம் ஆண்டு தனது 25-வது வயதில் ராஜகுமாருடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம்.
தற்போது மகேஷ்-ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும் SSMB29 படத்திற்காக மகேஷ்பாபு ரசிகர்கள் மட்டுமல்ல டோலிவுட் திரையுலகினர் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர்கள் ஆடம்பர வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர். அதில் ஒருசிலர் மட்டுமே தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை பல சமூக பணிகளுக்கு செலவு செய்கின்றனர். அதை வெளியிலும் சொல்வதில்லை. அவர்களுள் ஒருவர் தான் நடிகர் மகேஷ் பாபு.
மகேஷ் பாபு நடிகராக மட்டுமல்லாமல் மனிதாபிமான கொடையாளராக யாரும் அறியாத பல தொண்டுகளை செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையில் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும், தனது வருமானத்தில் 30 சதவீதத்தை (ரூ.25-30 கோடி) தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி தாராள மனப்பான்மை கொண்ட பிரபலங்களில் ஒருவராக திகழ்கிறார்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ள மகேஷ் பாபு, சில தொண்டு நிறுவனங்களை அவரே நடத்தியும் வருகிறார். அந்த அமைப்புகளில் ஒன்றான தனது ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார். இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.
இவை தவிர மகேஷ் பாபு தனது அறக்கட்டளைகள் மூலம் இரண்டு கிராமங்களை (பூரிபாலம்-ஆந்திரா, சித்தபுரம்-தெலுங்கானா) தத்தெடுத்து, அங்கு சாலைகள், மின்சாரம், பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் உட்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கியுள்ளார்.
மகேஷ் பாபு, தனது வெற்றிகரமான திரையுலக வாழ்க்கையை தாண்டி, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
மகேஷ் பாபுவை போல் அவரது மகளும் தொண்டு செய்வதில் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார். 12 வயதான இவரது மகள் சித்தாரா, ஆடை விளம்பரத்தில் நடித்ததற்கா கிடைத்த ரூ.1 கோடி சம்பளத்தை தனது சொந்த தேவைக்காக வைத்துக்கொள்ளாமல் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.