
2000-ம் ஆண்டு ‘மிஸ் வேர்ல்ட்’ பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தின் மூலம் திரைவுலகில் அறிமுகமாகி, பின்னர் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் நடித்த படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், கிரிஷ் மற்றும் டான் படங்களில் நடித்ததன் மூலம் முன்னனி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதன் பின் அவர் நடித்த காமினி, மேரி கோம், தில் தடக்னே தே, பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார்.
நடிகை பிரியங்கா சோப்ரா குவாண்டிகோ (Quantico) என்ற தொலைக்காட்சி தொடரில் எப்.பி.ஐ அதிகாரியாக நடித்ததன் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். இதன் மூலம் அமெரிக்க நெட்வொர்க் நாடகத் தொடரில் இடம்பெற்ற முதல் தெற்காசியர் என்ற பெருமையை பெற்றார். பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களான பேவாட்ச், இஸ்னாட் இட் ரொமாண்டிக், தி ஒயிட் டைகர், தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
மேலும் தற்போது சிட்டாடல் என்ற அதிரடி திரில்லர் தொடரில் நடித்து வருகிறார். அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு லாஸ் ஏஞ்சல்சில் குடியேறிய பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 2022-ம் ஆண்டு இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியங்கா சோப்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். ‘பாகுபலி’, ஆஸ்கார் விருதை வென்ற ‘ஆர் ஆர் ஆர்’ போன்ற படங்கள் எடுத்து பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமவுலி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இதுவரை இவர் ராஜமௌலி படத்தில் நடிப்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டதன் மூலம் இவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நடித்தால் இந்தியில் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்றும், ஹாலிவுட்டையும் படம் சென்றடையும் என்பதாலேயே இவரை இந்த படத்தில் நடிக்க வைக்க ராஜமௌலி கடும் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக இவருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி மற்றும் ஹாலிவுட்டில் இந்த படத்திற்கு நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டே இவருக்கு ரூ.40 கோடியை கொடுக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் பிரியங்கா சோப்ரா இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகையாக சாதனை படைத்து உள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பாலிவுட் மற்றும் கோலிட் நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.