விமர்சனம்: டென் ஹவர்ஸ் (Ten hours) தமிழில் ஒரு திரில்லர்!
ரேட் டிங்(3 / 5)
த்ரில்லர் படங்களில் புதிய சாதனை படைத்து கொண்டிருக்கிறது மலையாள சினிமா. தமிழில் இது போன்ற த்ரில்லர் படங்கள் வருவதில்லையே என்று ஏங்குபவர்களை ஒரளவு திருப்தி படுத்தும் விதமாக வந்துள்ளது டென் ஹவர்ஸ் (Ten hours).
கள்ளக்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் காஸ்ட்ரோ (சிபி சத்யராஜ்). தங்கள் பெண்ணை நேற்றிலிருந்து காணவில்லை என்று அம்மாவும், தாத்தாவும் புகார் தருகிறார்கள். பெண்ணை தேடி போகிறார் காஸ்ட்ரோ. இவர் தேடி போகும் சமயத்தில் 'ஐம்பொன் டிராவல்ஸ்' என்ற பஸ்ஸில் ஒரு இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கண்ட்ரோல் ரூமுக்கு ஒருவர் தகவல் சொல்கிறார். கள்ளக்குறிச்சி டோல் கேட்டிற்கு முன்னால் பஸ்ஸை மடக்கி பிடிக்கிறார் காஸ்ட்ரோ. பஸ்ஸில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த கொலைக்கும், காணாமல் போனதாக புகார் தந்த பெண்ணிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக காஸ்ட்ரோவின் போலீஸ் மூளை சொல்கிறது.
பஸ்ஸில் பயணம் செய்த ஒவ்வொரு பயணியையும் அழைத்து விசாரணை செய்கிறது காவல் துறை. இந்த விசாரணை முடிவு என்ன சொல்கிறது என்பதை பரபரப்பான த்ரில்லர் கதையில் சொல்லி இருக்கிறார் டைரக்டர் இளையராஜா கலிய பெருமாள்.
இரண்டு மணி நேரம் மட்டுமே படம் என்பதால் தேவையற்ற எந்த காட்சியும் இல்லை. படம் நகரும் விதம் நன்றாக இருந்தாலும், ஒரு காட்சியின் சஸ்பென்ஸ் உணர்வு நமக்குள் வரும் போதே அடுத்த சஸ்பென்ஸ் வந்தாலும், சில மைனஸ் அம்சங்களும் படத்தில் உள்ளன.
கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். நன்றாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் திடீரென்று மெயின் வில்லன் ஆஜராகி 'உள்ளேன் அய்யா' என்கிறார். கொலைக்கான காரணம் என்று சொல்லப்படும் விஷயம் அழுத்தமாக இல்லை. இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த 'டென் ஹவர்ஸ்' சிறப்பாக வந்திருக்கும்.
தனக்கு ஒரு வெற்றி கண்டிப்பாக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை தந்துள்ளார் சிபி சத்யராஜ். விசாரணையின் போது ஒரு முகம், குற்றவாளிகளை அடிக்கும் போது 'சாமியே சரணம்' என்று சொல்லிவிட்டு அடிப்பது என சில இடங்களில் தனித்துவத்தை காட்டுகிறார். சில காட்சிகளில் 'வால்டர் வெற்றிவேல்' சத்யராஜை நினைவு படுத்துகிறார்.
இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியின் இசையும், அரவிந்த் மேனனின் ஒலி மிக்ஸ்ங்கும் இந்த டென் ஹவர்சின் கூடுதல் பலம். இசை, எடிட்டிங், ஒளி - ஒலி அம்சங்கள், ஒன் லைன், நகரும் விதம் போன்றவைகள் நன்றாக இருந்தாலும் கிளைமேக்ஸ் சரியாக அமையாததால் சாதாரண சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் பார்த்த உணர்வை தருகிறது.
மலையாள திரில்லர் போன்று தமிழ் மொழியில் எடுக்க முயற்சி செய்ததற்கு டைரக்டரை பாராட்டலாம்.