
'நல்ல படமென்றால் மலையாளத்தில் தான் வர வேண்டுமா? நாங்கள் எடுக்க மாட்டோமா?' என்று இந்த முறை களத்தில் இறங்கியிருப்பவர்கள் தெலுங்குப் படவுலகினர். எடுத்துக் கொண்ட கதைக்கு நியாயமாக நடிகர்கள் தேர்வு. பிரம்மாண்டம் எல்லாம் இல்லாமல் உண்மைக்கு நெருக்கத்தில் ஒரு படம் செய்துள்ளனர். அது தான் கோர்ட்.
தனது அப்பா, அம்மா தங்கையுடன் வாழ்ந்து வரும் ஓர் இளைஞன் சந்திரசேகர் (ஹர்ஷன்). மொபைல் விற்பது, இரவில் பாரில் வேலை செய்வது என ஓர் இயல்பான வாழ்க்கை வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்கும் அவனது தோழியின் வகுப்புத் தோழியாக வரும் ஜாபிலி (ஸ்ரீதேவி) என்ற பெண்ணுக்கும் காதல் வருகிறது.
'அந்தஸ்து மட்டுமே பெரிது. குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்குப் போவேன்' என்று ஜாபிலி குடும்பத்தின் பெரிய மாப்பிள்ளை மங்கபதி (சிவாஜி) இவர்கள் இருவரும் காதலிப்பதை உணர்ந்த அவர் சந்துவை காவல்துறையிடம் சிக்க வைக்கிறார். அதுமட்டுமன்றி அவன்மீது போக்ஸோ வழக்கும் பதியப்படுகிறது. தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்துக் காவல்துறையினர், சாட்சிகள், வழக்கறிஞர்கள் என்று அனைவரையும் விலைக்கு வாங்குகிறார்.
தீர்ப்பு சொல்ல இரண்டு தினங்களே இருக்கும்போது சந்துவின் சித்தப்பா ஒரு பெரிய வழக்கறிஞரான சாய் குமாரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் உதவி கேட்டுச் செல்கிறார். அங்கு அவரிடம் பணிபுரிபவர் சூர்ய தேஜா (ப்ரியதர்ஷி). இவர்களது வழக்கைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர் தனது சீனியருக்குத் தெரியாமல் இந்த வழக்கில் இறங்கி வாதாட முடிவு செய்கிறார். முடிவு என்ன என்பது தான் கதை.
ஒரு படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு, நம்பகத்தன்மை, விறுவிறுப்பான காட்சிகள் என இருந்தால் போதும். படம் தன்னால் மக்கள் ஆதரவைப் பெறும். அதுவும் நீதிமன்றக் காட்சிகள் தொடர்பான படங்கள் இயல்பாகவே ஒரு சுவாரஸ்யத்தைத் தூண்டுமாறு இருக்கும். அந்த வகையில் வசனங்கள் தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். உதாரணத் துளிகள்...
"பதினேழு வயது முந்நூற்று அறுபத்து நான்கு நாட்கள் ஆயிருந்தால் கூட அந்தப் பெண்ணைக் குழந்தையாகப் பார்க்கும் சட்டம் ஒரு நாள் கழித்து அவள் ஒரு மேஜர் என்று முடிவு செய்கிறது. இது என்ன நியாயம். அந்த ஒருநாளில் அந்தப் பெண்ணுக்கு முதிர்ச்சி வந்துவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்."
"ஒரு தனியறைக்குள் ஆணும் பெண்ணும் இருந்தால் அங்கு உடல் தொடர்பு இருந்தே ஆக வேண்டும் என்பது உலகப் பொதுப் பார்வை. ஒரு பெரிய வழக்கில் இதை முழுவதும் ஆராய வேண்டாமா. அங்கு அப்படி எதுவும் நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூட இருக்கலாமே."
"மேலும் போக்ஸோ சட்டத்தைப் பற்றிய ஒரு புரிதலும் அறிவும் மாணவர்களுக்கு இருக்க வேண்டாமா. அறியாமல் ஒரு தவறே நடந்திருந்தாலும் பாதிக்கப்படுவது மாணவன் தானே. அவர்களுக்கு ஏன் இதுபற்றிய ஓர் அறிவைப் போதிக்கக் கூடாது."
"ஓர் இளைஞனின் வாழ்வு வீணாகப் போய்விடக் கூடாது என்று நான் போராடிக் கொண்டிருக்க ஒரு சாட்சியை நீதிமன்ற வாசலில் விலைக்கு வாங்கி விட்டார்கள். ஆதரவில்லாத அந்த இளைஞனின் பதினான்கு ஆண்டு காலத் தண்டனையின் விலை வெறும் இரண்டு லட்சம் ரூபாய். இது எவ்வளவு பெரிய கொடுமை."
"வாதங்களைத் திறம்படச் செய்வது, எல்லாக் கேள்விக்கும் பதில் இருப்பதாக நினைப்பது ஒரு வக்கீலின் திறமை அல்ல. திறமை என்பது கேட்கப்படும் கேள்விகளில் இருக்கிறது. ஏன் என்ற கேள்வி கேட்கத் தொடங்கும்போது தான் ஒரு வக்கீல் முழுமையடைகிறான்."
முதலிலேயே சொன்னது போல் இந்தப் பதின்ம வயதினரின் காதல் ஒரு பகுதி தான் இந்தப் படத்தில். பெண்ணின் குடும்பத்தில் தான் வைத்ததே சட்டம். பெண்கள், பெண் குழந்தைகள் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும். இப்படியொரு ஆணாதிக்க மனோபாவத்துடன் நடந்து கொள்ளும் மங்கபதியாகச் சிவாஜி. ஒரு மனிதரைப் பார்த்தவுடன் ஒருவருக்குக் கடுப்பு வருகிறதென்றால் அது அந்த நடிகருக்கு மட்டுமல்ல அந்தப் பாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதத்திற்கும் கிடைத்த வெற்றி. கடைசி வரை தன்னுடைய நிலையிலிருந்து கொஞ்சமும் இறங்காத அந்தப் பாத்திரத்தில் அற்புதமாகச் செய்திருக்கிறார்.
நாயகன் நாயகியாக வரும் ஹர்ஷன், ஸ்ரீதேவி இருவரும் கச்சிதம். கொஞ்சம் பிசகினாலும் காதல் திரைப்படத்தின் ஒரு சாயல் வந்திருக்கும் படத்தில் நீதிமன்றக் காட்சிகள் மூலம் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதில் இயக்குநர் ராம் ஜெகதீஷின் பங்கு குறிப்பிடத்தக்கது. வக்கீல் சூர்யாவாக ப்ரியதர்ஷி அந்தப் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். தனது சீனியரான சாய் குமார் தன்னை நம்பி வழக்குகளை ஒப்படைக்க முன்வராதது குறித்து வருந்துகிறார். அதே சாய்குமார் அதற்குக் காரணம் என்ன என்று பின்னால் விளக்கும்பொழுது உணர்ந்து, வழக்கை எதிர்கொள்ளும்போது சபாஷ் சொல்ல வைக்கிறார். எங்கும் உணர்ச்சி மிகு போராட்டங்களோ, அதிகப்படியான மெலோ டிராமாக்களோ இல்லாமல் இருப்பதே பெரிய ஆறுதல்.
இந்த வழக்கின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகப் பதினாறு நிமிடங்கள் நடக்கும் ஒரு காட்சி வருகிறது. அந்த நிகழ்வை இவர்கள் காட்சிப்படுத்திய விதம் அட்டகாசம். மூடிய அறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வை மேட்ச் கட்கள் மூலம் இவர்கள் கடத்திய நிகழ்வு கைதட்டல் பெற வைக்கிறது.
எல்லாம் நல்லபடியாக முடிந்து அந்த இளைஞன் விடுதலையாகிவிடுவான் என்று தெரிகிறது. ஆனால் இடையில் வரும் சிக்கல்கள், சில சாட்சிகளை ப்ரியதர்ஷி மிக லேசாக உடைக்கும் விதம் போன்றவை சிறிய மைனஸ்கள்.
சமுதாயத்திற்குத் தேவையான ஒரு சட்டத்தை எப்படியெல்லாம் ஒரு குடும்பம் நினைத்தால் வளைக்கக்கூடும். சிறுவர் சிறுமியர்களைக் காக்க இயற்றப்பட்ட ஒரு சட்டம் எப்படியெல்லாம் வளைக்கப்படக்கூடும். இதைக் கையாளும் காவல்துறையும் நீதித்துறையும் எப்படி இதை ஜாக்கிரதையாக அணுக வேண்டும் என்று கோடிட்டுக் காட்டியதில் உள்ளது இந்தப்படத்தின் வெற்றி.
ரசிகர்களைக் கண்ணீர் சிந்தவைக்கப் பல இடங்களில் வாய்ப்பு இருந்தாலும் அதைக் கடைசிக் காட்சிக்கு ஒதுக்கி வைத்து நிகழ்த்திக் காட்டி அந்தக் கண்ணீருடன் ரசிகர்களை அனுப்பி வைக்கிறார் இயக்குநர். ரோகிணி, சுபலேக சுதாகர், ஹர்ஷ வரதன் உள்பட தெரிந்த முகங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டப் பணியைச் செய்துள்ளார்கள். இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு என்ன தேவையோ அந்த அளவு இருக்கிறது.
நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள இந்தப்படம் குடும்பத்துடன் கண்டிப்பாகப் பார்க்கத் தகுந்த ஒரு படம் தான். தமிழ் டப்பிங்குடன் இருக்கிறது. ஆனால் டப்பிங்கில் ப்ரியதர்ஷியின் குரல் சற்று கூட ஒட்டாமல் துருத்திக் கொண்டு தெரிகிறது. ஆங்கில சப் டைட்டில் இருப்பதால் அதன் மூலமான தெலுங்கிலேயே இதைப் பார்ப்பது நல்லது.