HBD விஜய் - ‘நடிகர் விஜய் பிறந்தநாள்’: ‘ஜோசஃப் விஜய்’ தமிழ் திரையுலகில் ‘தளபதி’யாக உயர்ந்த கதை....

இன்று பிறந்தநாள் காணும் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தளபதியாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த கதையை பற்றி அலசலாம்.
actor vijay
actor vijay
Published on

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளையதளபதி நடிகர் விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இன்று பிறந்தநாள் காணும் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து திரையுலகில் தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதியாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த கதையை பற்றி அலசலாம்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி ஜோசஃப் விஜய் பிறந்தார். நடிகர் விஜய் சிறுவயதிலேயே( 10 வயது) தனது தந்தையில் இயக்கத்தில் வெளிவந்த நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில், குழந்தை நட்சத்திரமாக வரை நடித்துள்ளார்.

பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்த விஜய் சினிமாவில் மீது இருந்த தீராத ஆசை மற்றும் சினிமா தான் தன் எதிர்காலம் என முடிவு செய்த விஜய் தனது படிப்பை பாதியில் கைவிட்டார்.

பின்னர் தனது 18-ம் வயதில் 1992-ம்ஆண்டு அம்மா ஷோபா திரைக்கதை எழுத, அப்பா சந்திரசேகரனின் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தின் மூலம் நாயகனாக திரையுலகில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுக்கு விஜய் அளித்த அன்பு கட்டளை!
actor vijay

ஆனால் முதல் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்துடன் இணைத்து நடித்த 'செந்தூரப்பாண்டி' விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து தனது தந்தையின் இயக்கத்திலேயே ரசிகன், தேவா, விஷ்ணு என அடுத்தடுத்த படங்களில் நடித்த விஜய், நடனம், நடிப்பு, ஆக்ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்தார்.

விஜய்
விஜய்

நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தினார் நடிகர் விஜய். இவர் பாடிய தொட்டபெட்டா ரோட்டு மேல, அய்யய்யோ அலமேலு போன்ற பாடல்கள் 90களில் மிகப் பிரபலம். துப்பாக்கியில் செல்ஃபி புள்ள, ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி, மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி போன்ற பாடல்கள் விஜய்யின் குரலில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன. விஜய் இதுவரை 32 பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆக்ஷன் நாயகன் வளையத்திற்கு நடித்து வந்த விஜய்யை 1996-ம் ஆண்டு வெளியான 'பூவே உனக்காக' படத்தின் மூலம் வெளியே கொண்டு வந்தவர் இயக்குனர் விக்ரமன் தான். இதுவரை தனது தந்தையில் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய் முதன் முதலாக விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும், விஜய்க்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் விஜய் கிளைமாக்ஸில் பேசும் காதல் வசனங்கள் ரசிகர்களிடையே இன்று வரை பிரபலம். பூவே உனக்காக விஜய்யுடைய வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுதான் சொல்லவேண்டும்.

விஜய்
விஜய்

அதனை தொடர்ந்து அவர் நடித்த ‘லவ்டுடே’, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கிய படங்கள் இவை. அதன் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ஃப்ரெண்ட்ஸ், பிரியமானவளே, பத்ரி, ஷாஜகான், யூத், பகவதி என அடுத்தடுத்த கமர்ஷியல் திரைப்படங்கள் மூலமாக தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்டார் விஜய்

அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படங்களும் வெற்றிப்படங்களாவே அமைந்தது. மாஸ் ஹீரோவான விஜய்யைக் கொண்டு கமர்ஷியல் கலாட்டாக்களுடன் நிதர்சன அரசியலையும் பேசும் ஏ.ஆர்.முருகதாசின் முயற்சிதான் கத்தி திரைப்படம்.

இந்த படம் தான் விஜய்க்கு அரசியல் ஆர்வத்திற்கு அடித்தளமிட்டது என்று சொல்லலாம். ஏர்.ஆர்.முருகதாசைப் போல், இயக்குனர் அட்லியின் கூட்டணியும் விஜய்க்கு, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் தொடர்ந்து கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

1992-ல் கதாநாயகனாக தனது கலைப்பணயத்தை தொடங்கிய விஜய் 33 வருடங்களில் இதுவரை கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகளுடன் இதுவரை 50 விருதுகளை வென்றுள்ளார்.

பாடகர், நடிகரை தொடர்ந்து தற்போது அரசியலில் நுழைந்த விஜய் 2024-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.

தற்போது நடிகர் விஜய் - வினோத் கூட்டணியில் ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளதால் இது அவருடைய கடைசி படம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டீசர், "என் நெஞ்சில் குடியிருக்கும்.." "ஃபர்ஸ்ட் ரோயர்" வீடியோ வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
இது இப்படிபட்ட ஒரு தொல்லை - நடிகர் விஜய்!!
actor vijay

ஜோசஃப் விஜய்யாகப் பிறந்து, விஜய் என திரையுலகில் அறிமுகமாகி, இளையதளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர், தற்போது தளபதி விஜய்யாக மக்கள் மனதில் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com