
ஒவ்வொரு சினிமா ஹீரோவும் தன் 25-வது, 50-வது, 75-வது, 100-வது படம் பெயர் சொல்லும் விதமாகவும், வசூல் ரீதியாகக் கலக்கலாக இருக்க வேண்டும் என்றும் தான் நினைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் அது அமைவதில்லை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகிய 8 ஹீரோக்களின் 100-வது படம் பற்றி ஒரு அலசல் கட்டுரை இது.
எம்.ஜி.ஆர். தன் படங்களில் தம் அடிப்பது போலவோ, சரக்கு அடிப்பது போலவோ நடிக்க மாட்டார். அதைக் கொள்கையாகவே வைத்திருந்தார். (ஆரம்பக் கட்டப்படங்களில் அவர் புகழ் பெறுவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்திருக்கலாம்). இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் வந்தபோது எம்.ஜி.ஆர். மிகவும் யோசித்தார்.
வாலியின் யோசனைப்படி மனசாட்சி கேள்வி கேட்பது போல் புத்திசாலித்தனமாக அந்தக் காட்சியை வடிவமைத்தனர்.
‘தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?' என்ற பாடல் காட்சியில் குடிகாரனாக நடித்தார்.
இந்தப்படம் ‘பூல் அவுர் பத்தர்’ (1966) என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக். ஒரிஜினல் படத்தில் நாயகன் விதவையை மணப்பது போல் க்ளைமாக்ஸ் இருக்கும். தமிழில் எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி விதவை கேரக்டர் இறப்பது போலவும், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். மணப்பது போலவும் க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டது.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு’ என்ற பாடல் படம் ரிலீஸ் ஆன போது ஹிட் ஆனது. 1984-ல் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது அனைத்துத் திரை அரங்குகளிலும் இந்தப் பாடல் ஒளிபரப்பானது.
இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கிண்டல் செய்து விமர்சனம் செய்தது. கல்கி, குமுதம், ஆனந்த விகடன் ஆகிய பத்திரிக்கைகளில் பாசிட்டிவ் விமர்சனம் வந்தது.
குறிப்பாக ஆனந்த விகடன் வழக்கமான விமர்சன பாணியில் விமர்சிக்காமல் மாறுபட்டு பலர் பேசிக்கொள்ளும் உரையாடல் போல விமர்சனத்தை வெளியிட்டு இருந்தது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை கொழும்பு நகர் தியேட்டரில் கூட 100 நாட்கள் ஓடிய படம் இது.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசனிடம் கண்டிஷன் போட்ட முதல் ஹீரோ எம்.ஜி.ஆர். தான். படத்தில் அவர் பயன்படுத்தும் உடைகள் அவர் விரும்பும்படிதான் இருக்க வேண்டும், பாடல் காட்சிகளில் தன் தலையீடு இருக்கும் என்றெல்லாம் முதலிலேயே சொல்லி விட்டாராம்.
படம் ஈஸ்ட்மென் கலர் என்பதால் எம்.ஜி.ஆர். அணியும் உடைகள் எல்லாம் கண்ணைப் பறிப்பதாக இருக்கும்.
ஆனால் என்ன காரணத்தாலோ இப்படப் போஸ்டர்களில் இது எம்.ஜி.ஆரின் 100-வது படம் என்று விளம்பரப்படுத்தப்படவில்லை.
சிவாஜி 99 படங்களில் நடித்து முடித்த பின் ஒரே நாளில் அவரது இரு படங்கள் ரிலீஸ் ஆனது. பி. ஆர். பந்துலு தனது படம் தான் சிவாஜியின் 100-வது படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சிவாஜியின் எண்ணம் வேறாக இருந்தது. ‘முரடன் முத்து’ ஒரு சராசரிப்படம் தான். ஆனால் ‘நவராத்திரி’யில் சிவாஜிக்கு 9 வேடங்கள். அதனால் அந்தப்படம் 100-வது படமாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்.
சிவாஜியின் 100-வது படம் என்ற விளம்பரத்துடன் ‘நவராத்திரி’ வெளிவந்தது. இந்த மனஸ்தாபத்தால் அதற்குப்பின் பி. ஆர். பந்துலு சிவாஜியுடன் வேறு எந்தப்படத்திலும் இணையவில்லை.
ஆனால் சிவாஜி எடுத்த முடிவு சரி தான். ‘முரடன் முத்து’ சரியாக ஓடவில்லை. ‘நவராத்திரி’ 100 நாட்கள் ஓடி ‘கமர்சியல் ஹிட்’ ஆனது.
திருமணம் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு பெண் தன் வீட்டிலிருந்து தப்பித்து வந்து 9 நாட்களில் 9 வெவ்வேறு குணாதிசயம் கொண்ட நபர்களை சந்திக்கிறார். அந்த 9 நபர்களாக சிவாஜி மாறுபட்ட உடல் மொழி, வித்தியாசமான ஒப்பனை, அட்டகாசமான நடிப்பு என கலக்கி இருந்தார்.
படத்துக்கு விமர்சனங்களும் பாசிட்டிவாகவே வந்தன. ஆனந்த விகடன் இந்தப் படத்தை இரண்டு மூன்று முறை பார்க்கலாம் என முத்தாய்ப்பாக எழுதியது. கல்கியில் பி. கண்ணன் என்பவர் எழுதிய விமர்சனத்தில் சிவாஜி, சாவித்திரி நடிப்புக்காகவே பலமுறை பார்க்கலாம் என எழுதி இருந்தார்.
2001-ல் சிவாஜி இறந்தபோது பிபிசி நியூசில் ‘நவராத்திரி’ படத்தை சிலாகித்து பாராட்டி இருந்தது.
இந்தப்படத்தில் பாடல்களும் ஹிட்.
‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’, ‘நவராத்திரி சுப ராத்திரி’, ‘வந்த நாள் முதல்’... ஆகிய 3 பாடல்கள் மெகா ஹிட்.
கவிதாலயா பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ரஜினி தன் ஸ்டைல் சமாச்சாரங்களை எல்லாம் மூட்டை கட்டி ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் கேரக்டராகவே மாறி இருந்தார்.
அமைதி, சாத்வீகம் என அவரது முகத்தில் சாந்தி நிலவியது. பத்திரிக்கைகள் விமர்சனத்தில் கொண்டாடினார்கள். கல்கியில் ஜெயமன்மதன் (ரைட்டர் சுபா) இந்த நூற்றாண்டின் சிறந்த படம் எனப் பாராட்டினார். ஆனந்த விகடன் ரஜினி நடித்த 100 படங்களில் முத்தான படம் இது என்றது.
தமிழக அரசு இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளித்தது. ரஜினி சிறந்த நடிகர் என்ற விருது வாங்கினார்.
ஆனால் இத்தனை சிறப்புகள் இருந்தும் படம் கமர்ஷியலாக ஹிட் ஆகவில்லை. ரஜினி ரசிகர்களுக்கே ஏமாற்றம் தந்த படமாக அமைந்தது.
இது கமலின் சொந்தப்படம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி மூவருக்கும் கிடைக்காத பெருமை கமலுக்கு உண்டு. அது 100-வது படம் சொந்தத் தயாரிப்பில் அமைந்தது.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கவித்துவமாக உருவான இந்தப்படம். Butterflies are free (1972) என்ற ஆங்கிலப் படத்தின் தாக்கத்தில் உருவான கதை.
விழி ஒளி இழந்தவராகக் கமலின் நடிப்பு கலக்கலாக இருக்கும். விழி அழகியான மாதவி தான் நாயகி.
‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்ற மெகா ஹிட் பாட்டு இதில் தான். இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்.
பாடலின் பல்லவியில் ‘திராட்சை மது வழிகிறது’ என்றுதான் முதலில் எழுதினார் வைரமுத்து. பின் ‘அந்தி மழை’ என மாறியது.
இந்தப் படத்துக்காக கமல் பல விருதுகளை வென்றார். ஆனால் கமர்ஷியல் ஆக ஹிட் ஆகவில்லை.
இதே கால கட்டத்தில், பயணங்கள் முடிவதில்லை, அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள் போன்ற காதல் படங்கள் வெள்ளி விழா கண்டாலும் இது ஏனோ ஓடவில்லை.
விழி ஒளி இழந்த இந்துப் பையனுக்கும், பணக்கார கிறிஸ்துவப் பெண்ணுக்கும் உருவாகும் காதல் தான் கதை. க்ளைமாக்ஸ் சுபம் தான். ஆனாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
படம் ரிலீஸ் ஆனபோது குமுதம், விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகள் பாசிட்டிவ் விமர்சனம்தான் எழுதின.
பொங்கல் ரிலீஸ் ஆக வந்தது. இது பிரபுவின் சொந்தப்படம். சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பு. இயக்கம் ஆர்.வி. உதயகுமார். சின்னக்கவுண்டர், எஜமான் மாதிரி தனக்கு ஒரு ஹிட்டாக அமையும் என பிரபு நம்பினார். திருமணம் ஆன பின் நடிக்காமல் இருந்த நதியா ஒரு இடைவெளிக்குப் பின் இதில் பிரபுக்கு ஜோடி ஆனார்.
‘என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை’, ‘சித்தகத்துப்பூக்களே’, ‘ராஜகுமாரா’, ‘சின்னச்சின்ன சொல் எடுத்து’, ‘காட்டுல கம்பங்காட்டிலே’... உட்பட 7 பாடல்கள்.... இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.
ஜனரஞ்சகமான கதை தான். ஆனால் எடுபடவில்லை. ஆனந்த விகடன் விமர்சனத்தில் எஜமான் கதையையே டிங்கரிங்க் பண்ணி விட்டார்கள். இயக்குநரிடம் ஐடியாப் பஞ்சம் என எழுதியது. கல்கி விமர்சனத்தில் 100-வது படம் என்ற பொறுப்பே இல்லாமல் அனைவரது நடிப்பும் ஏனோ தானோ என்று இருந்தது என எழுதி இருந்தது.
படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி.
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கார்த்திக், ரோஜா நடிப்பில் வெளியான இந்தப்படம் மெகா ஹிட். 250 நாட்கள் ஓடின.
காதல் கதை தான். க்ளைமாக்சில் பாடகியான ரோஜா தன் வெற்றிக்குக் காரணம் இவர் தான் என கார்த்திக்கை மேடைக்கு வரச்சொல்லும் சீன் அரங்கம் அதிர்ந்தது. கார்த்திக்கின் நடிப்பு. மிரட்டலாக இருந்தது.
பாடல்கள் அனைத்தும் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் ஹிட்.
‘ஏதோ ஒரு பாட்டு உன் காதில் கேட்கும்’, ‘மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா?’, ‘காற்றுக்குத்தூது விடு கவிதைகள் பாடச்சொல்வேன்’, ‘வானம்பாடியின் வாழ்வில்’ உட்பட மொத்தம் 6 பாடல்கள்.
இதில் அஜித் கெஸ்ட் ரோல் .
இதற்கு அனைத்துப் பத்திரிக்கைகளும் பாசிட்டிவான விமர்சனங்களே எழுதி இருந்தன.
சிவாஜியைப் போலவே சத்தயராஜூம் தனது 100வது படம், 101வது படம் இரண்டையும் ஒரே நாளில் ரிலீஸ் கண்டார். இரண்டுமே தோல்வி. இதில் ‘திராவிடன்’ மாபெரும் தோல்வி. ‘வாத்தியார் வீட்டுப்பிள்ளை’ சுமாரான தோல்வி.
பி.வாசு இயக்கத்தில் ஷோபனா நடிப்பில் உருவான இந்தப் படம் ‘நம்மூர் ராஜா’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.
‘சிக்குன்னு இருக்குது’, ‘மண மாலையும், மஞ்சளும் சூடி’, ‘ஒரு பூஞ்சோலை’ உட்பட 6 பாடல்களும் ஹிட்.
பத்திரிக்கைகள் நெகடிவ் விமர்சனங்கள் எழுதின. குமுதம் இதழில் 100-வது படம் என்ற பொறுப்பு இல்லாமல் அசால்ட்டாக கதை தேர்ந்தெடுத்ததாக சத்யராஜை குற்றம் கூறியது.
‘புலன் விசாரணை’ படத்தில் ரூ. 40,000 மட்டுமே சம்பளமாகப் பெற்ற இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த இந்தப்படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது.
இத்தனைக்கும் இன்னொரு வெள்ளி விழாப்படமான ‘சின்னத்தம்பி’யும் இதே நாளில் தான் ரிலீஸ் ஆனது. (இதுவரை பார்த்த 7 ஹீரோக்களின் 100-வது பட ரிலீசின் போது போட்டிக்கு வேறு நடிகர் படங்கள் எதுவும் பெரிதாக இல்லை.)
படம் போட்டு 37 நிமிடங்கள் கழித்துத்தான் ஹீரோ எண்ட்ரி. அந்த போலீஸ் ஸ்டேசனில் நடக்கும் ஓப்பனிங்க் பைட் சீன் ஆரவாரமான கை தட்டலைப்பெற்றது.
லியாகத் அலிகானின் அனல் பறக்கும் வசனங்கள் படத்தில் பொறி பறந்தது. க்ளைமாக்சில் கோர்ட் சீனில் விஜய்காந்த்தின் நடிப்பு பேசப்பட்டது
மன்சூர் அலிகான் இதில் அறிமுகம். வீரபத்ரன் என்ற ரோலில் வந்தாலும் அது வீரப்பன் ரோல் தான்.
ஆனந்த விகடன் விமர்சனத்தில் வில்லனின் நடிப்பு ஓவர் ஆக்டிங் தான் என்றாலும் ரசிக்க முடிகிறது என்று எழுதி இருந்தது.
பல ஊர்களில் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. கோவை ராகம் திரை அரங்கில் 175 நாட்கள் ஓடி, பின் அதே காம்ப்ளக்ஸ் தானம் தியேட்டரில் 50 நாட்கள், பின் பல்லவியில் 25 நாட்கள், அனுபல்லவியில் 125 நாட்கள் ஆக மொத்தம் 375 நாட்கள் ஓடியது.
இளையராஜாவின் இசையில் இரு பாடல்கள்.
‘ஆட்டமா? தேரோட்டமா?’, ‘பாசமுள்ள பாண்டியரே’!
சரத்குமார் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
கோர்ட்டில் விஜய்காந்த் பேசும் ஒரு வசனம் பயங்கர கைதட்டல் வாங்கியது.
லீகலுக்கு லீகல், இல்லீகலுக்கு இல்லீகல், அடிக்கு அடி , உதைக்கு உதை... ரெடியா டி.எஸ்.பி ?
கலெக்டர் சார்!
அவரே ஆடிப்போய் உக்காந்திருக்கார்....
இந்தப்படத்தில் விஜய்காந்த் கோட் சூட் உடன் படம் முழுக்க கம்பீரமாக வருவார். அவரது உடல் மொழியில் கம்பீரம் தெறிக்கும்.
இந்தப் படத்துக்கு மீடியாக்கள், பத்திரிக்கை விமர்சனங்கள் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. ஆனால் ராணி வார இதழ் மட்டும் என்ன காரணத்தாலோ 37/100 என்று குறைவான மார்க் போட்டிருந்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த 100-வது படம் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் நால்வருக்கும் தோல்விப்படம். கார்த்திக் வெள்ளிவிழாப் படம்.
இந்த வரிசையில் டைட்டில் வின்னர் விஜய்காந்த் தான். பிரம்மாண்டமான வெற்றிப்படம். இது விஜய்காந்த்தின் சொந்தப்படம்.
இனிவரும் ஹீரோக்கள் யாரும் 100 படங்களை தொட வாய்ப்பே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கு தொடரும் போட வேண்டிய அவசியமே இல்லை.