மாபெரும் இசையமைப்பாளர் 'இசை வசந்தம்' எஸ்.ஏ.ராஜ்குமார்!

ஆகஸ்ட் 23 - இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்த நாள்
HBD S.A.Rajkumar
HBD S.A.Rajkumar
Published on

மனித மனங்களை இணைக்கக் கூடிய மிகப்பெரிய சக்தியாக இருப்பது இசைதான். அத்தகைய இசைத்துறையில்  மக்களின் அன்றாட வாழ்வியலை எல்லாம் தன்னுடைய இசையால் அழகுபடுத்தி  அதை மக்களுக்கே மகுடமாக சூட்டி அழகு பார்த்தவர்தான் இசை வசந்தம் என்று போற்றக்கூடிய மாபெரும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 125 திரைப்படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் வெள்ளி விழா கண்டுள்ளன என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. தென்னிந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இன்றைய காலகட்டங்கள் போல் அல்லாமல் 80,90 கால கட்டங்களில் சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது இசைதான். ஒரு படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றால் நிச்சயம் அந்த படமும் ஹிட் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அப்படி தன்னுடைய படங்களில் எல்லாம் பின்னணி இசையோடு சேர்ந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்தவர்தான் எஸ்.ஏ ராஜ்குமார்.

பெரும்பாலும் இவருடைய படங்களில் படத்தை அறிமுகப்படுத்தும்போது நிச்சயம் ஒரு பாடல் இருக்கும். அங்கேயே இவர் மக்கள் மனங்களில் ஒரு நாற்காலி போட்டு நங்கூரமாய் உட்கார்ந்து விடுவார். உதாரணமாக சிம்ம ராசி என்ற படத்தின் அறிமுக சீனில்'

"பச்சை மண்ணை தொட்டு தொட்டு  பொன்னாக ஆச்சு" 

என்ற பாடல் அமைந்திருக்கும். இந்தப் பாடலை காதுகளால் கேட்டு கண்களால் பார்க்கும் போது அப்படியே அந்த மண்ணை அள்ளி முகர்ந்த மண்வாசத்தை நம்மால் முழுமையாக உணர முடியும். அவ்வளவு இனிமையாக அப்பாடலின் வரிகளும் இசையும் காட்சி அமைப்புகளும் இருக்கும். அந்தப் பாடலின் ஒரு இடத்தில்,

"மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய்"

என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். இது கிட்டத்தட்ட எஸ்ஏ ராஜ்குமாருக்கே மிகவும் பொருத்தமான வரிகளாக இருக்கும்.

அதைப்போல எவர்கிரீன் திரைப்படமான சூரிய வம்சத்தில் இடம் பெறும்

"திருநாளு தேர் அழகா மகராசன் நடையழகா

பிறை போல நெத்தியிலே செந்தூர பொட்டழகா"

என்ற பாடலும் ஒரு சூப்பர் ஹிட் பாடல். இதைக் கேட்கும் போதும் துள்ளலான உணர்வை கொடுக்கும்.

இவரின் முதல் படம் சின்ன பூவே மெல்ல பேசு. இந்த படத்தில் இடம் பெற்ற 

"சங்கீத வானில் சந்தோசம் பாடும் சிங்கார தேன் குயிலே"

என்ற பாடல் இன்னும் கூட நம் மனதில் மிக ஆழமாக பதிந்த ஒரு இனிமையான காதல் கீதம். இந்தப் பாடலை இவரே எழுதி இருப்பார். எஸ்ஏ ராஜ்குமாரின் தந்தை ஒரு புகழ்பெற்ற மேடை பாடகர். தனது தந்தையிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட இசை ராஜ்குமார் பிற்காலங்களில் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலமான இசையமைப்பாளராக மாறினார்.

சுய முன்னேற்ற திரைப்படங்கள்:

இயக்குனர் விக்ரமன் மற்றும் எஸ் ஏ ராஜ்குமார் அவர்களின் வெற்றிக் கூட்டணியில் உருவான புதுவசந்தம் திரைப்படம் அன்றைய காலகட்டங்களில் சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி வந்தவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது. இதில் அமைந்துள்ள  

"பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா?"

 என்ற பாடலும்,

"இது முதன் முதலா வரும் பாட்டு"

என்ற பாடலும் இன்றும் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

25 ஆண்டு வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறது சூரியவம்சம் திரைப்படம். இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும், இசையும் இன்றளவும் மீம்ஸ்களில் அபாரமாக வெற்றி நடை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அதேபோல் தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் இடம் பெற்ற 

"வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்" 

என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதுவும் முன்னேற்றத்தை வலியுறுத்திய சூப்பர் ஹிட் திரைப்படம்.

காதல் திரைப்படங்கள்:

90களின் காலகட்டங்களில் அதிகமாக ரசிக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது காதல் திரைப்படங்கள். துள்ளாத மனதையும் துள்ளல் போடும் இசையால் ஆட்சி செய்திருப்பார் "துள்ளாத மனமும் துள்ளும் "என்ற திரைப்படத்தில்.

"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் "

என்று இன்றைக்கும் கூட ரசிகர்கள் காதலின் தோல்வியை ஏதோ ஒரு விதத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காதலில் தோல்வியும் ஒரு சுகமே என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் பூவே உனக்காக திரைப்படத்தில். காதலில் எதிர்பார்ப்பதற்கு அன்பைத் தவிர ஒன்றும் இல்லை என்பதை அழுத்தமாக தன் இசையால் வெளிப்படுத்தி இருப்பார்.

வித்தியாசமான காதல் கதையுடன் வந்த  திரைப்படம் பிரியமானவளே. இதில் உள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. நட்பு எப்படி காதலாக மாறுகிறது என்பதை மிகவும் மென்மையான உணர்வுகளால் தன் இசையின் மூலம் கடத்தியிருப்பார் பிரியாத வரம் வேண்டும் என்ற திரைப்படத்தில்.

இதையும் படியுங்கள்:
மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கினேன் – கொட்டுக்காளி இயக்குநர்!
HBD S.A.Rajkumar

"விடைகொடு விடைகொடு விழியே கண்ணீரின் பயணம் இது"

என்ற பாடல் இன்றளவும் இதயத்தை கசிந்துருக வைக்கும் இனிமையான இசை. ஆண் பெண் நட்பின் ஆழத்தை தன் இசையால் மிகவும் மென்மையாக வெளிப்படுத்தி இருப்பார். ஒரு நல்ல நட்பு கிடைத்தால் வாழ்வில் எத்தகைய உயரத்தை அடையலாம் என்பதை மிக அற்புதமாக காட்டியிருப்பார் புன்னகை தேசம் என்ற படத்தில்.

குடும்ப திரைப்படங்கள் :

அன்றைய காலகட்டங்களில் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் ரசிக்கப்பட்ட குடும்ப திரைப்படங்கள். 

ஆனந்தம் படத்தில் வரும் 

"ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே"

எனத் தொடங்கி அத்தனை குடும்ப திரைப்படங்களிலும் பாசத்தை அள்ளித் தெளித்து இருப்பார் எஸ்ஏ ராஜ்குமார்.

வானத்தைப்போல திரைப்படத்தில் வரும் 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: வாழை - மாரி செல்வராஜின் கிளாசிக்!
HBD S.A.Rajkumar

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

 எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை"

என்ற பாடல் இன்றும்கூட கூட்டு குடும்பங்கள் கொண்டாடி தீர்க்கும் ஒரு இனிமையான இசைமாலை என்றே சொல்லலாம். அன்றைய காலகட்டங்களில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது வானத்தைப்போல திரைப்படத்திற்கு கிடைத்தது.

பக்தி திரைப்படங்கள்:

மனித வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத பக்தியிலும் இவரின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. இன்றும் கேட்ட உடன் கால்கள் ஆட தோன்றும் ஒரு பாடல் என்றால் 

"ஆடிவந்தேன் ஆடிவந்தேன்"

என்ற பாடல். பாளையத்து அம்மனில் இடம் பெற்ற இந்தப் பாடல் இப்போது வரை கலைகளின் சார்பாக மேடையில் ஒலிக்கும் முதல் பாடலாக இருக்கிறது. அதையே ஒரு இனிமையான தென்றலாக

"சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டு"

என்று விசிறி இருப்பார் எஸ்ஏ ராஜ்குமார்.

மனதை விட்டு நீங்காத இப்படி எத்தனையோ பக்தி கானங்களை கொடுத்தவர் எஸ்ஏ ராஜ்குமார்.

 குத்து பாடல்கள் :

மெல்லிய இசைகளை மட்டுமே கொடுத்து வந்த எஸ்ஏ ராஜ்குமார் துள்ளல் இசை போட வைக்கும் பாடல்களிலும் சளைத்தவர் இல்லை என்பதை மிக அருமையாக நிரூபித்து இருப்பார் வசீகரா படத்தில் வரும்

"மேரேஜ் என்றால் வெறும்பேச்சு அல்ல"

என்ற பாடலில். கண்ணுபட போகுதய்யா திரைப்படத்தில் வரும்

"மனச மடிச்சு நீ தான்  உன் இடுப்பில் சொருகுற"

என்ற பாடலும், சிம்ம ராசியில் வரும்

இதையும் படியுங்கள்:
தனி விமானம் வாங்கிய சூர்யா… விலை எவ்வளவு தெரியுமா?
HBD S.A.Rajkumar

"கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண் தானா"

என்ற பாடலும் இன்றளவிலும் நாம் ரசித்து கேட்கக்கூடிய துள்ளலான பாடல்களே.

தன்னுடைய இசை பயணத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார் எஸ்.ஏ.ராஜ்குமார். இவர் இசையமைத்த சூரிய வம்சம் என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தமிழில் பல பாடலாசிரியர்களை அறிமுகம் செய்தவர்  எஸ்.ஏ ராஜ்குமார். படத்தில் வரும் பாடல்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்கு இசையமைப்பதிலும் முக்கியத்துவம் கொடுப்பார். இன்றளவுக்கும் வானத்தைப்போல மற்றும் சூரிய வம்சம் படங்களில் வரும் காமெடி சீன்களின் பின்னணி இசை அவ்வளவு ரசிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.

தன்னுடைய பெரும்பாலான பாடல்களில்  அதிகமாக ஹம்மிங் இசையை பயன்படுத்தி இருப்பார் எஸ்.ஏ ராஜ்குமார். இவர் இசையமைத்த அந்த பாடல்களின் வெற்றிக்கு அந்த ஹம்மிங் இசையும் ஒரு முக்கிய காரணம்.

35 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு இசையமைப்பாளராக இன்றும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் எஸ்.ஏ ராஜ்குமார் - ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகர், நடிகர், கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக. அன்றைய காலகட்டங்களில் ஆடியோ சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கேசட்டுகள் எஸ்.ஏ ராஜ்குமாரின் இசையில் வெளிவந்தவையே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com