நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த 'புஷ்பா 2' கடந்தாண்டு டிசம்பர் 4-ம் தேதி உலகெங்கும் வெளியானது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்ட புஷ்பா 2 சிறப்புக் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவருடைய மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை கடந்த 13-ந் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும் இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து, 14-ந் தேதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளிவந்த அவருக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, போலீஸ் அனுமதியின்றி தியேட்டருக்குச் சென்று, வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பும் பின்பும் 'ரோட்ஷோ' நடத்தியதாகக் கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மீது கடுமையாக சாடினார். முதல்வரின் இந்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் முன்னதாக ரூ.25 லட்சமும், படத்தின் இயக்குனர் ரூ.5 லட்சமும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க முன்வந்தனர். பின்னர் நடிகரின் தந்தை அல்லு அரவிந்த் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ 2 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், சிறுவனின் தந்தை, நடிகர் மீதான வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக என்டிடிவியிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி நம்பள்ளி கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதனால் அல்லு அர்ஜுன் நிம்மதியடைந்துள்ளார். இதனால் அவர் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கோர்ட், கேஸ் இவை எதுவும் புஷ்பா 2 படத்தின் இமாலய வெற்றி தடுக்க முடியவில்லை. இந்த படம் பல தடைகளை தாண்டி வசூலில் சாதனை மேல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.