

சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்த பல நடிகர்கள் ஒரேயடியாக சினிமாவை விட்டு விலகிவிடுவார்களா? இதுவரை எந்த நடிகர்கள் ஆவது அப்படி கூறிவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்களா?
மக்களின் உணர்வோடு கலந்த இந்திய சினிமா உலகில் சில புகழ்பெற்ற நடிகர்களின் ஓய்வு அறிவிப்புகள் பல சர்ச்சைகளைக் கிளப்பிவிடும். சமீபத்திய உதாரணங்களில் ஒன்று விக்ராந்த் மாஸ்ஸி (Vikrant Massey). தனது 37 வயதில் சினிமாவை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு காரணமாக அவர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறினார்.
55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (International Film Festival of India) ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற சிறிது நேரத்திலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் ரசிகர்களின் அதிகப்படியான அன்பு தொல்லைகள், பின் அவரது தொடர்ச்சியான படைப்புத்திறன் ஆசைகளால், விக்ராந்த் மாஸ்ஸி தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாகக் கூற வைத்தது.
மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம் சல்மான் கான் (Salman Khan). அவர் அவ்வப்போது நடிப்பில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளிவரும். குறிப்பாக சட்ட அல்லது உடல் நலம் சார்ந்த பிரச்னைகளின் காலங்களில் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார். இருப்பினும் ரசிகர்களுடனான அவரது ஆழமான வேரூன்றிய தொடர்பும், அவரது படங்களின் வெகுஜன ஈர்ப்பும் அவரை அந்தக் காலகட்டங்களில் மீண்டும் திரைக்கு ஈர்த்துள்ளன.
அமிதாப் பச்சன் 1990களின் முற்பகுதியில் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் தனிப்பட்ட பின்னடைவுகளால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், மொஹபதீன் (Mohabbatein) படம், கவுன் பனேகா குரோர்பதி (Kaun Banega Crorepati) போன்ற நிகழ்ச்சிகளின் ஆரவாரமான வரவேற்பு அவரது வாழ்க்கையை சினிமாவில் இப்போதுவரை தொடர வைத்தன.
ஏன் இந்த மனமாற்றம்? நடிகர்கள் பெரும்பாலும் மனச் சோர்வு, குடும்ப முன்னுரிமைகள் அல்லது தொழில்துறையின் மீதான ஈர்ப்பு போன்ற காரணங்களைத் தங்களின் ஓய்விற்குக் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் சினிமாவின் காந்த ஈர்ப்பு, ரசிகர்களின் அபிமானம் மற்றும் காலத்திற்கேற்ப மாறி வரும் படங்களில் தோன்றும் சுவாரசியமான பாத்திரங்கள் (interesting characters), நடிகர்களின் உறுதிப்பாட்டை அடிக்கடி மாற்ற வைக்கும்.
ஓய்வு முடிவை அறிவித்த எல்லா நடிகர்களும் இந்த வகையான மனமாற்றத்தை அடைவதில்லை. ஆனால், அப்படி மாற்றம் கண்டவர்களுக்குக் கண்டிப்பாக அது ஒரு புத்துணர்ச்சியூட்டும் காலமாகதான் அமைந்துள்ளது.
நடிகர்கள் சினிமா விட்டு விலகுவதில் அரசியல் ஏதேனும் பங்கு வகிக்குமா?
ஒரு நடிகரின் சினிமா விலகல் முடிவுகளில் அரசியல் பெரிய பங்கு வகிக்கிறது. காரணம் அரசியல் போன்ற பொது விஷயங்களுக்கு மாறும்போது அதில் அதிக கவனம் செலுத்த, பொழுதுபோக்கில் இருந்து தங்களை விலக்கிக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரலாம். அரசியல் வாழ்க்கையின் தேவைகளான பிரசாரங்கள், பொறுப்புகள், ஆய்வுகள், அவர்கள் படங்களில் தொடர்வதைச் சவாலானதாக மாற்றும்.
இருப்பினும் ரசிகர்களுடனான அவர்களின் உணர்ச்சிப் பிணைப்பும், சினிமாவின் படைப்பு ஈர்ப்பும் சில நேரங்களில் அவர்களை மீண்டும் நடிக்க வரவழைக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் சிலருக்கு நடிப்பும், அரசியலும் இணைந்து ஒரு சேர அவர்களுக்குக் கைகொடுத்திருக்கின்றன, வெற்றியும் கண்டுள்ளனர்.