

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து கமல் தயாரிக்கும் திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் கமலும் நடிப்பதாக இருந்ததால் , இதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. தொடர்ச்சியாக ஒரே மாதிரியான டான் அல்லது வன்முறை மற்றும் மிகவும் சீரியசான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்து வந்ததால் , நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான கதைகளை இயக்கும் சுந்தர்.சி யின் வரவு , ரஜினியின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நேற்று சுந்தர்.சி அறிவிப்பை வெளியிட தமிழ் திரையுலகம் பரபரப்பானது. குடும்பத்துடன் வரும் ரசிகர்களுக்காக ரஜினி திரைப்படம் எடுத்து பல காலங்கள் ஆகி விட்டது. இப்போது அவர்களை கவரும் வகையில் ஒரு படம் செய்யலாம் என்று எண்ணம் இருந்த போது தான் , ரஜினி மற்றும் சுந்தர்.சி கூட்டணி கமல் தயாரிப்பில் உறுதியானது. நகைச்சுவை , குடும்ப சென்டிமென்ட் என்று குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் தரமான ஒரு படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்றுதான் அவரை இந்தப் படத்துக்குள் அழைத்து வந்தார்கள்.
அவரோ "தவிர்க்க முடியாத சில காரணங்களால் , கனத்த இதயத்துடனேயே தலைவர் 173 படத்திலிருந்து விலகும் முடிவை நான் எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது எனது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு. இருப்பினும் அவர்களது வழி காட்டுதலை தொடர்ந்து பெறுவேன் என்று கூறி" படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் வெறும் வாயை மெல்லும் யூ டியூபர்களுக்கு அவல் கிடைத்ததை போல சுந்தர்.சி விலகல் கிடைத்து விட்டது. இதை வைத்து பல்வேறு யூகங்களை அவர்கள் கிளப்பி கொண்டு பரபரப்பாக்கி வருகின்றனர். இது பற்றி திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் செய்திருந்தார். "ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் செய்து தருவதுதான் சுந்தர்.சியின் பாணி. அதற்கு கமல் ஒப்புக் கொள்ளவில்லையா?.தாதா கேரக்டர் படங்கள் தமிழில் பணால் ஆகிவருவதால் ஜாலியாக படம் பண்ண நினைத்த தலீவரின் எண்ணம் பலிக்காமல் போனதா?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது போல சினிமா செய்திகளை வழங்கும் அந்தணன் வேறு சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற சூப்பர் ஹிட் திரைப் படத்தையும் கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும் இயக்கிய சுந்தர்.சி , தலைவர் 173 படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் பலருக்கும் மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. தொடர்ச்சியாக துப்பாக்கி ,இரத்தம் , பழிவாங்கல் கதைகளில் நடித்து ரஜினியே டயர்டு ஆகியிருப்பார். அதனால் குடும்ப ரசிகர்களை கவர்வதற்கு சுந்தர்.சி சரியாக தேர்வாக இருந்திருப்பார்.
சுந்தர்.சி முன்பே ரஜினிக்கும் கமலுக்கும் பழக்கமானவர். அவர் "மூக்குத்தி அம்மன் 2 "திரைப்படத்தின் சில காட்சிகளை, ரஜினிக்கு காட்டியதில் , அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து தனது படத்தை சுந்தர். சி இயக்க சம்மதம் தெரிவித்தார். எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் பழகுவதற்கு கலகலப்பான மனிதரான சுந்தர்.சி எதனால் இதில் இருந்து வெளியேறி இருக்கிறார்? ஏதேனும் ஒரு இடத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் , அவரை அப்படியே விட்டு விடமாட்டார்கள் , பேசி முடிப்பார்கள்.
இந்த அறிக்கையை முதலில் குஷ்பூதான் வெளியிட்டார். ஆனால் அது பரவுவதற்குள் டெலிட் செய்துவிட்டார். அதனால் இந்த விவகாரத்தில் சுந்தர்.சியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடப்பதாக அர்த்தம் கொள்ளலாம் என்றார். இந்நிலையில் இந்த திட்டத்தில் சுந்தர்.சி வராவிட்டால் வேறு யாரெல்லாம் திரைப்படத்தை இயக்குவார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.
வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் இருக்கலாம் என்ற யூகங்கள் கிளம்பின. சிலர் கமல் மற்றும் ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரை வைத்து இயக்குவார்கள் என்றும் கருத்தும் தெரிவித்துள்ளனர் . இப்போது அந்த லிஸ்ட்டில் தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பெயரும் இணைந்துள்ளது.