

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது சிறு வயதில் தான் பார்த்து ரசித்த ஹீரோவை, பின்னாளில் சினிமா துறையில் டைரக்டராக வந்த பின்பு அந்த ஹீரோவை வைத்தே படம் எடுக்கும் டைரக்டர்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு Fan boy culture என்று பெயர்.
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கனார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் 2 படத்தை தந்து, கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற தனது வாழ்நாள் ஆசையை நிவர்த்தி செய்து கொண்டார். இந்த வரிசையில் இப்போது அறிமுக இயக்குனர் தினேஷ் என்பவரும் சேர்ந்து விட்டார்.
தினேஷ் கும்பகோணத்தை சேர்ந்தவர். மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் போராடி படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவரது முதல் படத்தை இவரது அபிமான நடிகரான அர்ஜுனை வைத்து இயக்க ஆர்வத்துடன் இருந்தார். கதை சொல்லிய தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் சாய்ஸ்க்கு ஒவ்வொரு ஹீரோ வைத்து படம் எடுக்க வற்புறுத்தி இருக்கிறார்கள். சரி முதல் படம் தயாரிப்பாளர் விரும்பும் ஹீரோவை வைத்து படம் எடுப்போம். அடுத்த படத்தில் அர்ஜுன் சாரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் தினேஷ். இதற்கு நடுவில் ஒரு நாள் தனது சொந்த ஊரான கும்பகோணத்திற்கு சென்றிருக்கிறார், அப்போது தனது குடும்ப நண்பரும், பூ வியாபாரம் செய்து கொண்டிருப்பவருமான அருள் என்பவரை சந்தித்து இருக்கிறார்.
"என்னப்பா தினேஷ் படம் எடுக்க போறதா சொல்லி கிட்டு இருக்கியே, அர்ஜுன் சார் நடிச்சா... நான் படம் தயாரிக்கிறேன். நான் அர்ஜுன் சாரின் ரசிகன்" என யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் அருள். "ஆஹா தெய்வமே நான் தேடி வந்த ஆள் நீங்க தான்" என்று சொல்லி, சென்னை வந்து அர்ஜுனிடம் கதை சொல்லி விட்டு அருளை தயாரிப்பாளர் ஆக்கி விட்டார் தினேஷ்.
முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஒரு பூ வியாபாரி சினிமா தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். 'ஆக்ஷன் கிங்' என்ற பட்டம் அர்ஜுனுக்கு இருக்கிறது. இந்த பெயருக்கு ஏற்றால் போல் ஆக்ஷன் திரில்லர் பின்னணியில் கதை அமைத்து, 'தீயவர் குலை நடுங்க' என்று பெயர் வைத்துள்ளார் தினேஷ். இந்த படம் வரும் நவம்பர் 21 அன்று வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'சிறு வயதில் அர்ஜுன் சார் படங்களை என்னிடம் அறிமுகம் செய்தது என் அப்பா தான். அர்ஜுன் சார் படங்களை பார் தேசபக்தி வரும் என்றார். நான் பார்த்தேன் அர்ஜுன் சாரின் மீது மரியாதை வந்தது' என்று தன் தந்தையையும் நினைவு கூறுகிறார் தினேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை மறைந்த 'ராஜேஷ்' அவர்களுடன் சில படங்களில் அர்ஜுன் நடித்துள்ளார். இன்று மகள் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.
"தினேஷ் நான் நடித்த பல படங்களை அணு, அணு வாக ரசித்து என்னிடம் சொன்னார். இந்த ஒரு விஷயம் நான் நடிக்க ஒப்பு கொண்ட முக்கிய காரணம். முன்பெல்லாம் ஊரிலிருந்து எளிய தயாரிப்பாளர்கள் சென்னையை நோக்கி வருவார்கள். இப்போது சிறிய மற்றும் எளிய தயாரிப்பாளர்கள் வருவதில்லை. நீண்ட வருடத்திற்கு பிறகு ஒரு எளிய தயாரிப்பாளர் அருள் வந்துருக்கிறார். இவரை வெற்றி பெற செய்ய வேண்டியது என் கடமை 'தீயவர் குலை நடுங்க' படத்தில் என் ஆக்ஷன் ஆக்ட்டிங் இரண்டும் இருக்கும்" என்கிறார் அர்ஜுன்.
இரண்டு ரசிகர்கள் இணைந்து தங்களது அபிமான ஹீரோவை வைத்து படம் தந்துள்ளார்கள். இந்த, Fan boys வெற்றி பெற வாழ்த்துவோம்.