படம் விரும்பிப் பார்ப்பவர்களுக்கான டாப் 5 விண்வெளிப் படங்கள் குறித்துப் பார்ப்போம். இவை விண்வெளி பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களாகும்.
1. இன்டர்ஸ்டெல்லர் (Interstellar - 2014) - (IMDb Rating: 8.7)
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், விஞ்ஞான ரீதியான கருவை கொண்ட ஒரு தலைசிறந்த படைப்பாகும். பூமியில் வாழ்வது கேள்விக்குறியான நிலையில், மனித குலத்தின் பிழைப்பிற்காக ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடிக்க, கூப்பர் (மாத்யூ மெக்கானஹே) என்ற விண்வெளி வீரர், சனி கிரகத்திற்கு அருகில் உள்ள Wormhole வழியாகப் பயணிக்கிறார். Relativity, Black Holes, time மற்றும் Gravity ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ள இந்தக் கதை, கட்டாயம் சினிமா பிரியர்களுக்கு ஒரு விருந்து. குறிப்பாக, பாசத்திற்கும் நேரத்திற்கும் இடையே உள்ள உறவை ஆழமாக கூறும் படம் இது.
2. 2001: எ ஸ்பேஸ் ஓடிஸி (2001: A Space Odyssey - 1968) - (IMDb Rating: 8.3)
சினிமாவின் ஜாம்பவான் ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய இந்தத் திரைப்படம், காலத்தால் அழியாத ஒரு கிளாசிக் திரைப்படமாகும். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் விண்வெளியில் உள்ள இயற்கைக்கு அப்பாற்பட்ட மர்மமான கருங்கற்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இதன் கதை நகர்கிறது. அதிக வசனங்கள் இல்லாமல், காட்சியமைப்புகள் மற்றும் பின்னணி இசை மூலம் கதை சொல்லப்பட்ட விதம் இன்றளவும் ஆச்சரியமூட்டுகிறது. இது வெறுமனே ஒரு விண்வெளிப் படமல்ல; பிரபஞ்சத்தின் தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் ஒரு கலைப் படைப்பு.
3. ஏலியன் (Alien - 1979) - (IMDb Rating: 8.5)
ரிட்லி ஸ்காட் இயக்கிய இந்தப் படம், அறிவியல் புனைகதை மற்றும் திகில் வகையை இணைத்த ஒரு மாஸ்டர் கிளாஸ். விண்வெளியில் பயணிக்கும் ஒரு வணிக விண்கலத்தின் குழுவினர், ஒரு மர்மமான கிரகத்தில் இருந்து ஒரு கொடிய உயிரினத்தை தங்கள் விண்கலத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். அதன் பிறகு அதனிடமிருந்து உயிர் பிழைக்க எப்படி போராடுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
4. தி மார்ஷியன் (The Martian - 2015) - (IMDb Rating: 8.0)
மாட் டேமன் நடிப்பில், ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், செவ்வாய் கிரகத்தில் (Mars) தனியாக மாட்டிக்கொண்ட விண்வெளி வீரர் மார்க் வாட்னி, தனது அறிவியல் அறிவையும், விடாமுயற்சியையும் பயன்படுத்தி எப்படி பிழைக்கிறார் என்பதைப் பற்றிக் கூறுகிறது. இது வெறும் ஆக்ஷன் படமாக இல்லாமல், ஒரு மனிதனின் கண்டுபிடிப்புகளும், புத்திசாலித்தனமும் எப்படி விண்வெளியில் உயிரைக் காப்பாற்றுகின்றன என்பதைக் காட்டுகிறது.
5. அரைவல் (Arrival - 2016) - (IMDb Rating: 7.9)
டெனிஸ் வில்லெனுவ் இயக்கிய இந்தத் திரைப்படம், வழக்கமான ஏலியன் படங்களுக்கு ஒரு விதிவிலக்கு. உலகம் முழுவதும் பல இடங்களில் ஏலியன் விண்கலங்கள் தரையிறங்கும்போது, ஒரு மொழியில் வல்லுநரான லூயிஸ் பேங்க்ஸ், ஏலியன்களின் மொழியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். மொழியியல் மூலம் நேரம் மற்றும் விதியைப் பற்றிய மர்மத்தை இந்தப் படம் ஆழமாக ஆராய்கிறது. இது பிரமாண்டமான காட்சிகளை விட, உளவியல் ரீதியிலான தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தக்கூடிய படம்.
இந்த ஐந்து படங்களும், விண்வெளிப் பயணத்தின் சவால்களையும், பிரபஞ்சத்தில் மறைந்துள்ள மர்மங்களையும் நமக்குத் திரையில் காட்டி, நம் சிந்தனையை விரிவுப்படுத்துகின்றன. ஆகையால், கிடைக்கும் நேரத்தில் பார்த்து மகிழுங்கள்.