விமர்சனம்: திரு. மாணிக்கம் - ஜொலிக்கிறதா? இல்லையா?
ரேட்டிங்(3 / 5)
கடந்த ஆண்டு பம்பர் என்ற படம் வெளியானது. சபரி மலைக்கு செல்லும் ஹீரோ அங்கே லாட்டரி டிக்கெட் வாங்கி அங்கேயே தொலைத்து விடுவார். அந்த டிக்கெட்டிற்கு கோடி ரூபாய் பரிசு விழும். லாட்டரி டிக்கெட் கடையின் முதலாளி தொலைத்த டிக்கெட்டை தேடி கண்டுபிடித்து பரிசு தொகையை வாங்கி தருகிறார்.
மேலே தலைப்பில் திரு.மாணிக்கம் என்று சொல்லி விட்டு உள்ளே பம்பர் படம் பற்றி சொல்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. இரண்டு படங்களும் ஒரே மாதிரியான ஒன்லைனை கொண்டிருந்தால் முதலாவதாக பார்த்த படம் நினைவுக்கு வருவது இயல்புதானே? ஒரே மாதிரியான சிந்தனை பலருக்கு வரும் என்ற கான்செப்ட் அடிப்படையில் திரு.மாணிக்கம் படத்தின் டைரக்டர் நந்தா பெரியசாமிக்கும் இந்த 'லாட்டரி டிக்கெட் ஐடியா' வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டு திரு.மாணிக்கம் படத்தை பற்றி பார்ப்போம்.
மாணிக்கமாக வரும் சமுத்திரக்கனி. மனைவி, அன்பான இரு குழந்தைகள் என்று வாழ்ந்து வருகிறார். குமுளி பேருந்து நிலையத்தில் லாட்டரி டிக்கெட் கடை வைத்து நடத்துகிறார். அந்த கடையில் பாரதி ராஜா சில லாட்டரி டிக்கெட் வாங்குகிறார். கையில் பணம் இல்லாததால் அந்த லாட்டரி டிக்கெட்களை நாளை வந்து வாங்கி கொள்வதாக சொல்லி சென்று விடுகிறார். ஆனால் பிறகு பாரதி ராஜா கடைக்கு வரவே இல்லை. பாரதி ராஜா செலக்ட் செய்து வைத்த லாட்டரி டிக்கெட்க்கு இரண்டு கோடி பரிசு விழுகிறது. சமுத்திரக்கனி லாட்டரி டிக்கெட்டை இடுக்கியில் உள்ள பாரதி ராஜாவிடம் தர செல்கிறார். கனியின் மனைவியும் உறவினர்களும் பணம் கொடுத்து வாங்காத டிக்கெட் நமக்கு தான் சொந்தம். எனவே பரிசு பணமும் நமக்கு தான் வேண்டும் என்று கனியை தடுகிறார்கள். சமுத்திரக்கனி யார் பேச்சையும் கேட்காமல் லாட்டரி டிக்கெட் தர இடுக்கி நோக்கி பயணம் செய்கிறார். லாட்டரி டிக்கெட்டை உரிய நபரிடம் சேர்த்து மாணிக்கமாக இந்த மாணிக்கம் ஜொலித்தாரா என்பது இப்படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி பரபப்பான காட்சிகளுடன் வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி செண்டிமெண்ட், எமோஷனல், தத்துவம் என்று சென்று த்ரிலிங் அனுபவத்தை குறைத்து விடுகிறது. படம் பார்க்கும் போது பம்பர் படம் நமக்கு நினைவு வந்து விடக்கூடாது என்பதற்காக சமுத்திரக்கனிக்கு சிறு வயது போர்ஷன் ஒன்றை வைத்துள்ளார் டைரக்டர் என்று நினைக்க தோன்றுகிறது. இந்த போர்ஷினில் பாயாக நடிக்கும் நாசர் பாயின் நடிப்பு நன்றாக உள்ளது. சமுத்திரக்கனி வழக்கமான அட்வைஸ் செய்வதை குறைத்து கொண்டு நடிப்புக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மாறுபட்ட சமுத்திரக்கனியை பார்க்க முடிகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அனன்யா கம்பேக் தந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, சராசரி மனைவியாக ஜொலிக்கிறார் அனன்யா. ஹீரோயினாக நடித்த காலங்களில் அனன்யாவின் திறமையை வெளிப்படுத்த படங்கள் வரவில்லை. இப்போது வந்திருக்கிறது. "சரியாக பயன் படுத்தி கொள்ளுங்கள் அனன்யா".
மலைப்பகுதியில் ஒளிப்பதிவு செய்வது என்றால் சுகுமார்க்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கும் என்று தெரிகிறது. குமுளி மலைப்பகுதியில் கேமராவில் ஒரு ஓவியத்தை வரைந்து விட்டார். விஷால் சந்திரசேகர் இசை எமோஷனல் காட்சிகளில் மட்டுமே ஸ்கோர் செய்கிறது. முதல் பாதியில் இருந்த திரில்லர் அனுபவம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் திரு.மாணிக்கம் இன்னும் ஜொலித்திருக்கும்.