35 - Chinna Vishayam Illa Movie Review
35 - Chinna Vishayam Illa Movie Review

விமர்சனம்: '35 - சின்ன விஷயம் இல்ல' - கணிதத்தின் சுண்டெலி, புலியான கதை!

Published on
ரேட்டிங்(4 / 5)

எந்த எண்களையும் பூஜ்ஜியத்துடன் பெருக்கினால் பூஜ்ஜியம் கிடைக்கும். பூஜ்யத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. கணிதத்தில் இந்த விதிகள் எல்லாம் ஏன் இருக்கிறது என்று நாம் பள்ளியில் படிக்கும் போது கேள்வி கேட்டிருப்போமா? இப்படி கேள்வி கேட்கும் சிறுவன் பள்ளியில் சந்திக்கும் பிரச்சனைகளை இன்றைய சம கால கல்வி தளத்தில் சொல்லும் ஒரு சிறந்த தெலுங்கு படமாக வந்திருக்கிறது. 35 - சின்ன கத காது (35 - சின்ன விஷயம் இல்ல)

திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாவது படிக்கும் அருணுக்கு கணிதம் என்றாலே அலர்ஜி. கணிதத்தில் பூஜ்ஜியம் பற்றி கேள்வி கேட்கிறான். கணித மதிப்பெண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறது. கணிதம் எடுக்கும் ஆசிரியர் மாணவர்களை வாங்கும் மதிப்பெண்களை வைத்து அழைக்கிறார். நன்றாக படிக்கும் மாணவர்களை அருணிடம் பழக கூடாது என்கிறார். அருணை ஜீரோ என்றழைக்கிறார்.

அருணின் அப்பா அம்மா இது குறித்து கவலை கொள்கிறார்கள். கணிதம் வராததால் அருணை திருமலையில் உள்ள வேத பாடசாலையில் சேர்க்க முயல்கிறார் அப்பா. இதில் அருணின் அம்மாவிற்கு விருப்பம் இல்லை. இதனால் அருணின் அப்பா அம்மாவுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது. பள்ளி அருணை ஐந்தாம் வகுப்புக்கு டீ ப்ரோமோட் செய்கிறது. மேலும் வரும் முழு ஆண்டு தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பள்ளியில் தொடர முடியும் என்று கண்டிஷன் போடுகிறது. பத்தாவது கூட படிக்காத அருணின் அம்மா தான் முதலில் கணிதம் படித்து விட்டு அருணுக்கு கணித பாடம் சொல்லித் தருகிறார். அருண் முழு ஆண்டு தேர்வில் 35 மார்க் எடுத்தானா? அல்லது மார்க் எடுக்காமல் அப்பா சொன்னது போல் வேதம் படிக்க சென்றானா என்பதை சொல்கிறது இந்த திரைப்படம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: மார்கோ - கத்தி... ரத்தம்... வன்முறை... மேலும் வன்முறை!
35 - Chinna Vishayam Illa Movie Review

இப்படி ஒரு மிக சிறந்த திரைப்படம் தந்ததற்கு அறிமுக இயக்குநர் நந்தகிஷோர் அவர்களை மனமாற பாராட்டலாம். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நாம் பள்ளியில் படித்த நாட்களையும், படிக்கும் காலத்தில் நம்மில் பலர் கணிதத்தில் பட்ட அவஸ்தைகளையும் நினைவுக்கு கொண்டு வருகிறது. படத்தை எடுத்து இருக்கிறார் டைரக்டர் என்று சொல்வதை விட காட்சிக்கு காட்சி செதுக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். மாணவர்களை வெறும் மதிப்பெண்களாக மட்டும் பார்க்கும் சம கால கல்வி முறை, குழந்தைகள் மீதான பெற்றோரின் பதட்டம் போன்ற விஷயங்களை பேசுகிறது இந்த படம். சப்பாத்தியை நடுவில் கட் செய்து 'greater than', less than ' கணிதத்தை புரிய வைப்பது, திருமலை படிக்கட்டில் நடந்து, படிக்கட்டுகளை எண்ண வைத்து கழித்தல், கூட்டல் புரிய வைக்கும் தாய் என சில காட்சிகளை பார்க்கும் போது இப்படி வாழக்கையோடு இணைந்த கணிதத்தை நமக்கும் யாரேனும் சொல்லித்தர மாட்டார்களா என்ற ஏக்கம் வருகிறது.

இதையும் படியுங்கள்:
நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் பெறும் 10 நடிகைகள்!
35 - Chinna Vishayam Illa Movie Review

கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லாமல் அனைவரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். குழந்தை முகத்தில் தனக்கு கணக்கு வர வில்லையே என்ற ஏக்கமும், கடைசி பெஞ்சில் ஆசிரியர் அமர வைக்கும் போது கோபம் கொள்வதும், அப்பா அம்மா பேசாமல் இருக்கும் போது என்னால்தான் இப்படி என்று ஆனது என்ற தவிப்பிலும் மாஸ்டர் அருண்தேவ் மிக சிறப்பாக நடித்துள்ளார். இவரின் குழந்தை முகத்தை பார்க்கும் போது அப்படியே வாரி அணைத்து முத்தம் தரலாம் போல் உள்ளது. கணக்கு வாத்தியாராக வரும் பிரியதர்ஷி புல்லிகொண்டா, நாம் படிக்கும் போது பார்த்த பல கணக்கு வாத்தியாரை நினைவில் கொண்டு வருகிறார். நேற்று வரை சின்ன பெண்ணாக நடித்து கொண்டிருந்த நிவேதா தாமஸ், இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ஆஹா சொல்ல வைக்கிறார். தன் பையன் நன்றாக படிக்க ஒரு சராசரி தாய் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்கிறார் நிவேதா. இவரின் நடிப்பை பார்க்கும் போது, 'அருண் நன்றாக படிப்பா' என்று சொல்லத் தோன்றுகிறது. அப்பாவாக வரும் விஷ்வதேவ் பாசம், ரொமான்ஸ், கண்டிப்பு என கலந்து சரியான விகிதத்தில் தந்துள்ளார். விவேக் சாகரின் இசை படத்தை மேலும் அழகாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
காயமடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி - நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அறிவிப்பு!
35 - Chinna Vishayam Illa Movie Review

புஷ்பா என்ற மாஸ் மசாலா வெற்றி படத்தை தந்துள்ள அக்கட தேசத்தில் (ஆந்திரா ) இருந்துதான் '35-சின்ன விஷயம் இல்ல' என்ற மாஸ் இல்லாத ஒரு பீல் குட் படமும் வந்துள்ளது. இது குழந்தைகளை பற்றிய படம் அல்ல. தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் படம்.

கல்வி தளத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகளின் முக்கியத்துவத்தையும் சொல்கிறது இந்த படம்.இந்த ஆண்டு இறுதியில் வந்துள்ள '35- சின்ன விஷயம் இல்ல' தென்னிந்தியாவின் மிக முக்கிய படம் என்று உறுதியாக சொல்லலாம். இந்த அரையாண்டு விடுமுறையில் குடும்பத்துடன் கண்டு தெளிவு பெற இந்த படம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com