
திரைப்படங்களில் வன்முறை ரத்தக்களரி என்றால் அது தெலுங்கு படங்களில் தான். தமிழிலும் இது பரவ ஆரம்பித்தது. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று பாலிவுட் இந்த ஆண்டு களத்தில் குதித்தது. கில் என்ற ஒரு படம். இந்தியத் திரையுலகிலேயே அதிக வன்முறையான படம் என்ற விளம்பரத்தோடு வந்தது. அந்தப் பெயருக்குச் சற்றும் சளைக்காமல் இருந்ததும் நிஜம்! பார்த்தார்கள் மலையாளத் திரையுலகினர். நாங்களும் எடுப்போம். அதையும் மிஞ்சுவோம் என்று சவால்விட்டு எடுத்துள்ள படம் தான் மார்கோ. குடும்பத்ததுடன் பார்க்க வேண்டாம். சிறுவர்கள் தவிர்க்கவும் என்று பல கூக்குரல்கள். என்ன தான் கதை இந்தப் படம்.
தன்னை வளர்த்து ஆளாக்கும் குடும்பத்திற்கு நேரும் ஒரு சோகத்திற்கு பழிவாங்கும் கதாநாயகன். அரதப்பழசான இந்தக் கதைக்குத் தான் ரத்தத்தால் படையல் நடத்தி இருக்கிறார்கள். நாயகனாக உன்னி முகுந்தன். ரத்தத்திலேயே குளித்திருக்கிறார். கை வேறு. கால் வேறு. தலை வேறு என்று வெட்டி வீழ்த்துகிறார். சுத்தி. கத்தி. கோடரி. ரம்பம்... என எது கிடைத்தாலும் அதை உபயோகப் படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் மூன்று மாடிகள் ஒவ்வொன்றாகக் கடந்து ஆட்களைத் துவம்சம் செய்கிறார். அந்த ஒரு சண்டைக்காட்சி போதும் இந்த டீமின் உழைப்புக்கு.
பிரஷாந்த் நீல் வந்தாலும் வந்தார். படமே டார்க் டோனில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். கருப்பு சூட். கூலிங் கிளாஸ். ஷூக்கள். மெஷின் கன். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். போதாதா அதே உணர்ச்சிகளைக் கொண்டு வர. மனிதர் பின்னி எடுக்கிறார் பின்னணி இசையில்.
கேரளாவின் மிகப் பெரிய தங்க மாபியா கூட்டங்களுக்கிடையே நடக்கும் போராட்டம். ஒரு குழுவின் தலைவர் சித்திக். இவர்கள் குடும்பத்தில் ஒருவராக, நிழலுலகமே நடுங்கும் மார்கோவாக உன்னி முகுந்தன். இன்னொரு கும்பல் தலைவராக ஜெகதீஷ். இவரது மகன் ரஸ்ஸல் கதா பாத்திரத்தில் அபிமன்யு ஷம்மி திலகன். சித்திக்கின் மகனான பார்வை இழந்தவனான, மார்கோவின் பாசத்திற்குரிய தம்பி ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார். இவரது கொலைக்குப் பழி தீர்க்க வருகிறார் மார்கோ. யார் கொன்றார்கள். இதில் அவர் சந்திக்கும் எதிரிகளால் அவர் குடும்பத்திற்கு வந்த ஆபத்து என்ன. அது எப்படி முடிந்தது என்பது தான் கதை.
படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து தான் வருகிறார் உன்னி. அதன் பின் அவர் பேசுவது மிகக் குறைவு. அவ்வளவு ஏன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் வசனங்களே இல்லை. பத்து வரிகள் இருந்தாலே அதிகம். இடைவேளைக்கு சற்று முன்பே கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடுகிறது. அந்த இண்டர்வெல் பிளாக் பின்னர் என்ன கொடூரம் வரப்போகிறது என்பதற்கு ஒரு உதாரணம் அவ்வளவே.
இயக்குனர் ஹனீப் அதேநி வன்முறை மட்டுமே இந்தப் படத்தின் மொழி. அதற்கு எந்த எல்லைவரை வேண்டுமெனில் போவேன் என்று சண்டைக்காட்சிகளை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நமக்கே கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றும் அளவு பிராஸ்தடிக் மேக்கப்பில் முகம் சிதைப்படுவது, கழுத்து மறுக்கப்படுவது எனக் காட்சிகள்.... பிரபல தாய்லாந்து படங்களான நைட் கம்ஸ் பார் அஸ், ப்ராஜெக்ட் உல்ப் ஹண்டிங் போன்ற படங்கள் வன்முறைகளின் உச்சம் என்று சொல்லலாம். இது அதற்குச் சளைத்ததல்ல. அந்த விதத்தில் இது போன்ற படங்களும் தங்களால் எடுக்க முடியும் என்று மலையாளத் திரையுலகம் நிரூபித்து விட்டது.
கதாநாயகி - பாவம் அவர் பேருக்கு வருகிறார் போகிறார். படத்தில் ஒருவர் கூட நல்லவராக இல்லை. போலீஸ் வருகிறது. போகிறது. இவர்கள் கேங் வாரில் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கிளைமாக்சிற்கு முன்பு ஒரு மனித வேட்டை நடக்கிறது. அது ஒன்று போதும், இளகிய நெஞ்சம் கொண்டவர்கள், சிறுவர் சிறுமியர், கர்ப்பிணிப் பெண்கள் ஏன் இந்தப் படத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு.
பல திரைப்படங்களைப் பல ஜானரில் உருவாக்கித் தனித்துவம் பெற்று விளங்கும் மாலிவுட் இது போன்ற அதீத வன்முறைப் படங்களும் ஸ்டைலிஷாக எங்களால் எடுக்க முடியும் என்று நிரூபிக்கவென்றே எடுத்த படம் தான் மார்கோ. ஸ்லாஷர் வகைத் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் இளைஞர் பட்டாளத்தை இந்தப் படம் கண்டிப்பாகக் கவரும்.