சினிமா துறையில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. தனது திறமையான நடிப்பால் தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். சினிமாவில் உண்மைய வெற்றி எது என்பதை சமீபத்தில் தெரிவித்தார் சாய் பல்லவி. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது பார்ப்போம்.
சாய் பல்லவி சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் மிக்கவராக திகழ்ந்தார். பள்ளி, கல்லூரிகளில் பல நடனப் போட்டிகளில் பங்கேற்ற சாய் பல்லவி, முறையாக நடனப் பயிற்சியைப் பெறவில்லை. இருப்பினும் நடனம் சார்ந்த ஏதாவது ஒன்றை அடிக்கடி செய்ய விரும்புவார்.
தனது தாயின் உதவியுடன், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் நடனமாடி இருக்கிறார். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்து, தற்போது சினிமா உலகில் பிரபலமான நடிகையாக சாய் பல்லவி மாறியிருப்பது அவரது வளர்ச்சியைக் காட்டுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாய் பல்லவி. கல்லூரியில் படித்துக் கொண்டே விடுமுறை நாட்களில் தான் இப்படத்தில் நடித்தார்.
முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற சாய் பல்லவி, தமிழிலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து தனக்கான இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.
பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மான் மற்றும் தாம்தூம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. கடைசியாக தமிழில் வெளியான அமரன் மற்றும் தெலுங்கில் வெளியான தண்டேல் ஆகிய 2 திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
தற்போது பான் இந்தியப் படமாக உருவாகும் இராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. ஆடம்பரம் இல்லாத எளிமையான நடிகை என்றால் பலரும் சாய் பல்லவியைத் தான் கூறுவார்கள். அதற்கேற்ப தனது கதாபாத்திரத்திலும் எதார்த்தமான மற்றும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவார்.
போட்டி நிறைந்த சினிமா துறையில் எவ்வித பின்புலமும் இல்லாமல், தனது திறமையால் மட்டுமே உயர்ந்த நடிகை சாய் பல்லவி. மாரி 2 படத்தில் ரௌடி பேபி பாடலில், தனுஷூடன் இணைந்து மிகச் சிறப்பாக நடனமாடி இருப்பார். இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனக்கு விருதுகள் என்றும் முக்கியமல்ல என்று சமீபத்தில் தெரிவித்தார் சாய் பல்லவி. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு திரைப்படத்திலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன். அப்போது தான் நேர்மையான கருத்துகளை ரசிகர்களுக்கு என்னால் சொல்ல முடியும்.
திரையில் என் கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அதே உணர்வுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பேன். அப்படி நடந்தால் அதைத் தான் உண்மையான வெற்றியாக நான் கருதுவேன். விருது வாங்குவது எனக்கு முக்கியமே அல்ல. ரசிகர்களின் அன்பு தான் எல்லாவற்றிற்கும் மேலானது. ரசிகர்களின் அன்பை முழுமையாக பெற்றுக் கொள்ள, நான் எப்போதும் முதல் முக்கியத்துவம் கொடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் என்னுடைய வளர்ச்சி சினிமாவில் சாத்தியமே இல்லை” என சாய் பல்லவி கூறினார்.